டெல்லியில் தண்ணீர் பஞ்சம் குறித்து எச்சரிக்கை விடுத்துள்ள நீர்வளத்துறை அமைச்சர், நீர் வாரியத்துக்கான நிதியை நிறுத்தியதற்காக முதன்மை நிதிச் செயலாளர் மீது குற்றம் சாட்டியுள்ளார்
டெல்லி அரசாங்க அதிகாரிகளுடனான மோதலுக்கு மத்தியில், தேசிய தலைநகரில் தண்ணீர் பஞ்சம் குறித்து நீர்வளத்துறை அமைச்சர் அதிஷி கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார். பல்வேறு எழுத்துப்பூர்வ உத்தரவுகளையும் மீறி, டெல்லி நீர் வாரியத்துக்கான நிதியை, நிதித்துறை நிறுத்துவதாக குற்றம் சாட்டியுள்ள அமைச்சர், இந்த விவகாரத்தில் துணை நிலை ஆளுநர் வினய் குமார் சக்சேனா தலையிடக் கோரி கடிதம் எழுதியுள்ளார்.
இதுகுறித்து துணை நிலை ஆளுநருக்கு அதிஷி எழுதியுள்ள கடிதத்தில், தலைமைச் செயலாளரின் ஆலோசனையின்படி முதன்மை நிதிச் செயலர் ஆஷிஷ் வர்மா டெல்லி நீர் வாரியத்துக்கான அனைத்து நிதிகளையும் ஆகஸ்ட் முதல் நிறுத்திவிட்டதாக குற்றம் சாட்டியுள்ளார். சம்பள பிரச்சினை, பணி இடைநிறுத்தம் மற்றும் ஒப்பந்ததாரர்கள் தங்கள் சேவைகளைத் தொடர மறுப்பது உள்ளிட்ட தொடர்ச்சியான சிக்கல்கள் ஏற்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பிரதமர் மோடி தலைமையில் இன்று மெய்நிகர் ஜி20 உச்சி மாநாடு!
இந்த சூழ்நிலைகள் கடுமையான நீர் நெருக்கடி, நீர் ஆதாரங்கள் மாசுபடுதல் மற்றும் கழிவுநீர் பெருக்கெடுத்து, தொற்றுநோய்களின் குறிப்பிடத்தக்க அச்சுறுத்தலை ஏற்படுத்தக்கூடும் எனவும் தனது கடிதத்தில் நீர்வளத்துறை அமைச்சர் அதிஷி அச்சம் தெரிவித்துள்ளார்.
ஜிஐஏ மற்றும் டிஜேபிக்கான கடன்களை வழக்கமான வழங்குவதில் முன்னெப்போதும் இல்லாத ஆட்சேபனைகளை கூறி தீங்கிழைக்கும் நோக்குடன் செயல்படுவதாக முதன்மை நிதிச்செயலாளர் ஆஷிஷ் வர்மா மீது அமைச்சர் அதிஷி குற்றம் சாட்டியுள்ளார். நிதி கிடைக்காததால், டிஜேபிக்கான கோரிக்கைகளை பூர்த்தி செய்யவோ அல்லது முடிக்கப்பட்ட பணிகளுக்கு ஒப்பந்ததாரர்களுக்கு பணம் செலுத்தவோ முடியவில்லை. இது நிலைமையை மேலும் மோசமாக்கியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
ஆஷிஷ் வர்மா மீதான முந்தைய புகார்களை பட்டியலிட்ட அதிஷி, வழக்கமான உதவித்தொகையை வெளியிடுவதில் ஏற்படும் இந்த தாமதம், எதிர்காலத்தில் விளைவுகளை ஏற்படுத்தும் என சுட்டிக்காட்டியுள்ளார். தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்திற்கு ஒத்துழைத்தால் விஜிலென்ஸ் விசாரணை மற்றும் பணி இடைநீக்கம் செய்யப்படுவதாக தலைமை செயலாளரின் மிரட்டல்களுக்கு உள்ளாவதால் அதிகாரிகள் அச்சத்துடன் வாழ்கின்றனர் எனவும் அதிஷி தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.