தெலங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவின் மகள் கவிதாவை திகார் சிறையில் சிபிஐ கைது செய்தது
தெலங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவ் மகள் கவிதா. இவர் தெலங்கானா மேலவை உறுப்பினராக உள்ளார். டெல்லி மதுபான கொள்கை வழக்கில் கவிதா மீதும் அமலாக்கத் துறையினர் குற்றம் சாட்டியுள்ளனர். இதுதொடர்பாக, ஹைதராபாத் பஞ்சாரா ஹில்ஸ் பகுதியில் உள்ள கவிதாவின் வீட்டில் கடந்த மாதம் 15ஆம் தேதி சோதனை நடத்திய அமலாக்கத்துறை, அவரை கைது செய்தது.
கைது செய்யப்பட்ட கவிதவை 10 நாட்கள் காவலில் எடுத்து விசாரணை நடத்த அமலாக்கத்துறைக்கு அனுமதி வழங்கப்பட்டது. விசாரணை முடிந்த நிலையில், நீதிமன்ற காவலில் டெல்லி திகார் சிறையில் கவிதா அடைக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில், தெலங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவின் மகள் கவிதாவை திகார் சிறையில் சிபிஐ கைது செய்தது. டெல்லி மதுபான ஊழல் வழக்கில் ஏற்கனவே அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ள கவிதாவை டெல்லி திகார் சிறையில் வைத்து சிபிஐ அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
முன்னதாக, சிறப்பு நீதிமன்றத்தில் அனுமதி பெற்று திகார் சிறைக்குள் கவிதாவிடம் சிபிஐ அதிகாரிகள் சமீபத்தில் விசாரணை நடத்தினர். இந்த வழக்கில் தொடர்புடைய மற்றொருவரின் தொலைபேசியிலிருந்து எடுக்கப்பட்ட வாட்ஸ்அப் மெசேஜ்கள், மற்றும் நில ஒப்பந்தம் தொடர்பான ஆவணங்கள் குறித்து கவிதாவிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தியதாக தெரிகிறது.
மக்களை ஏமாற்றுவதில் ஸ்டாலினுக்கு நோபல் பரிசே வழங்கலாம் - பழனிசாமி விமர்சனம்
இதனிடையே, தெலங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவின் மகள் கவிதா தனக்கு ஜாமீன் கோரி டெல்லி ரோஸ் அவன்யூ நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த வழக்கை விசாரித்த சிபிஐ சிறப்பு நீதிபதி காவேரி பவேஜா, கவிதாவிற்கு இடைக்கால ஜாமீன் வழங்க மறுப்பு தெரிவித்ததுடன், அவரது மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான டெல்லி ஆம் ஆத்மி அரசு, கடந்த 2021 நவம்பரில் புதிய மதுபான கொள்கையை அமல்படுத்தியது. இந்த புதிய மதுபான கொள்கையில் முறைகேடு நடைபெற்றதாகவும், இதன் மூலம் அரசுக்கு ரூ.2,800 கோடி வரை இழப்பு ஏற்பட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டது. இதுதொடர்பாக, சிபிஐ, அமலாக்கத் துறை தனித்தனியாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றன.
இந்த வழக்கில், டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா, முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோரும் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.