கடமையை செய்ததற்கு காசா..? ரூ.1 கோடி இழப்பீட்டு தொகையை வாங்க மறுத்து தேசத்தையே நெகிழ வைத்த மருத்துவரின் தந்தை

By karthikeyan VFirst Published May 31, 2021, 11:06 PM IST
Highlights

கொரோனா சிகிச்சையளித்து உயிர்நீத்த மருத்துவர்..! டெல்லி அரசு வழங்கிய ரூ.1 கோடி இழப்பீட்டு தொகையை வாங்க மறுத்த தந்தை
 

கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளித்த டெல்லியை சேர்ந்த 26 வயதே ஆன இளம் மருத்துவர் கொரோனாவால் உயிரிழந்ததையடுத்து, அவரது குடும்பத்திற்கு டெல்லி அரசு வழங்கிய ரூ.1 கோடி இழப்பீட்டு தொகையை அந்த மருத்துவரின் தந்தை வாங்க மறுத்த சம்பவம், தேசம் முழுக்க நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

இந்தியாவில் கொரோனா 2ம் அலை அதிதீவிரமாக பரவி, தினசரி பாதிப்பு உச்சபட்சமாக 4 லட்சத்தை கடந்து, இப்போது படிப்படியாக குறைந்துவருகிறது. தினசரி பாதிப்பு ஒன்றரை லட்சம் எனுமளவிற்கு குறைந்துள்ளது.

கொரோனாவுக்கு எதிரான போரில் மருத்துவர்கள், மருத்துவ பணியாளர்கள், செவிலியர்கள், தூய்மை பணியாளர்கள் ஆகிய முன்கள பணியாளர்கள் தங்கள் உயிரை பணயம் வைத்து சேவையாற்றிவருகின்றனர். அவர்கள் போற்றப்பட வேண்டியவர்கள்.

கொரோனாவுக்கு எதிரான போரில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளித்து காப்பாற்றும் பணியில் ஈடுபடும் மருத்துவர்கள், செவிலியர்கள் ஆகியோருக்கும் கொரோனா தொற்று ஏற்படுவதுடன், அவர்களில் சிலர் உயிரிழந்தும் இருக்கின்றனர். அப்படி கொரோனா பணியில் ஈடுபட்டு உயிரிழக்கும் முன்கள பணியாளர்களுக்கு மத்திய, மாநில அரசுகள் உரிய நிவாரணம் வழங்கிவருகின்றன.

அந்தவகையில், டெல்லியில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளித்துவந்த 26 வயதே ஆன இளம் மருத்துவர் அனஸ் முஜாஹித் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். கொரோனா பணியில் உயிரிழந்ததால், மருத்துவர் அனஸின் குடும்பத்திற்கு ரூ.1 கோடி இழப்பீட்டு தொகை வழங்கப்படும் என்று அறிவித்திருந்த டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால், அந்த தொகைக்கான காசோலையுடன், அனஸ் முஜாஹித்தின் வீட்டிற்கு சென்றார்.

ஆனால், நாட்டுக்காக சேவையாற்றி உயிர்நீத்த தன் மகனின் இறப்புக்கு நிவாரண தொகை வேண்டாம் என்று கூறி, அந்த தொகையை ஏற்க மறுத்த மருத்துவர் அனஸின் தந்தை, தன் மகன் அவரது கடமையைத்தான் செய்தார் என்று கூறி அந்த தொகையை பெற மறுத்துவிட்டார்.

”நாட்டுக்காக சேவையாற்றி மரணம் அடைந்திருக்கிறார் என் மகன். கடமையை செய்த என் மகனின் உயிருக்கு என்னால் இழப்பீடு பெற முடியாது” என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலிடம் நேருக்கு நேராக கூறிவிட்டார் அனஸ் முஜாஹித்தின் தந்தை முஜாஹித் இஸ்லாம்.

மேலும், எனக்கு இன்னும் 2 மகன்கள் மற்றும் ஒரு மகள் இருக்கிறார்கள். அவர்களையும் நாட்டுக்கு சேவையாற்றவே தயார் செய்துகொண்டிருக்கிறேன். இதைவிட எனக்கு வேறு எந்த பெருமையும் இல்லை என்று கூறி, டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலை மட்டுமல்லாது ஒட்டுமொத்த தேசத்தையும் நெகிழவைத்துவிட்டார் மருத்துவர் அனஸின் தந்தையான முஜாஹித் இஸ்லாம்.

ஒரு மகத்தான இந்தியரை சந்தித்ததில் மகிழ்ச்சி என்று கூறிவிட்டு திரும்பியுள்ளார் டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால். 
 

click me!