மே.வங்க தலைமைச் செயலாளரை தூக்கிய மோடி அரசு.. அவரை ஆலோசகராக நியமித்து பதிலடி கொடுத்த மம்தா அரசு..!

By Asianet TamilFirst Published May 31, 2021, 9:38 PM IST
Highlights

மேற்கு வங்க தலைமைச் செயலாளரை மத்திய அரசு பணிக்கு மாற்றிய விவகாரத்தில் அவரை விடுவிக்க முடியாது என்று பிரதமர் மோடிக்கு முதல்வர் மம்தா பானர்ஜி கடிதம் எழுதியுள்ளார்.
 

யாஸ் புயல் மற்றும் மழையால் பாதிக்கப்பட்ட மேற்கு வங்காளம் மற்றும் ஒடிசா ஆகிய மாநிலங்களுக்கு பிரதமர் மோடி சில தினங்களுக்கு பயணம் மேற்கொண்டிருந்தார். முதலில் ஒடிசாவில் பயணம் மேற்கொண்ட மோடி, பின்னர் நடந்த ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்றார். இக்கூட்டத்தில் ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் உள்பட அதிகாரிகள் பங்கேற்றனர். பின்னர் பிரதமர் மோடி மேற்குவங்காளம் சென்றார். புயல் பாதிப்புகளை விமானம் மூலம் மோடி பார்வையிட்டார்.
பின்னர் ஆய்வுக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இக்கூட்டத்தில் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி உள்பட அதிகாரிகள் பங்குபெறுவதாக இருந்தது. இக்கூட்டத்தில் பங்கேற்க மேற்கு வங்க சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவர் சுவேந்து அதிகாரியும் அழைக்கப்பட்டிருந்தார். இதனால் மம்தா பானர்ஜி அதிருப்தி அடைந்தார். பிரதமர் மோடி பங்கேற்ற அக்கூட்டத்திற்கு அரைமணி நேரம் தாமதமாகவே மம்தா பானர்ஜி வந்தார். முதல்வரின் வருகைக்காக பிரதமர் மோடி, ஆளுநர் ஜெகதீப் தங்கர் ஆகியோர் காத்திருந்ததாகக் கூறப்படுகிறது.


மம்தா மட்டுமல்ல, மேற்குவங்க மாநில அதிகாரிகளும் தாமதமாகவே கூட்டத்துக்கு வந்தனர். மேலும் இக்கூட்டத்தில் பங்கேற்காத மம்தா பானர்ஜி, பிரதமரை தனியாக 15 நிமிடங்கள் மட்டும் சந்தித்து பேசி விட்டு கூட்டத்தைப் புறக்கணித்து வெளியேறினார். முதல்வர் மம்தாவின் இந்தச் செயல் பெரும் சர்ச்சையானது. இந்நிலையில் மேற்குவங்க மாநில தலைமைச் செயலாளர் அலபன் பந்தோபத்யாவை திரும்பப் பெறுவதாக மத்திய உள்துறை அமைச்சகம் அதிரடியாக மேற்கு வங்க அரசுக்கு கடிதம் எழுதியது.
அவரை தலைமைச் செயலாளர் பதவியிலிருந்து விடுவித்து டெல்லியில் உள்ள பணியாளர் மற்றும் பயற்சித் துறைக்கு மே 31-ம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டது. இந்நிலையில் மத்திய அரசு உத்தரவிட்டதைப் போல மேற்கு வங்க தலைமைச் செயலாளர் அலபன் பண்டோபாத்யா உள்துறை அமைச்சகம் அமைந்துள்ள டெல்லி நார்த் பிளாக்கில் ஆஜராகவில்லை. அதேவேளையில் முதல்வர் மம்தா பானர்ஜி, பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியிருக்கிறார்.
அக்கடிதத்தில், “இந்திய அரசால் அனுப்பப்பட்ட ஒருதலைப்பட்ச உத்தரவைக் கண்டு நான் அதிர்ந்தேன். எங்களிடம் எந்த ஆலோசனையும் செய்யாமல், சம்பந்தப்பட்ட அதிகாரியின் விருப்பமும் இல்லாமல் அமைந்த இந்த உத்தரவை சட்டப்பூர்வமாக ஏற்க முடியாது. இதற்கு முன் இப்படி நடந்ததாக முன்னுதாரணம் இல்லை. இது அரசியலமைப்புக்கு விரோதமானது. இந்த முக்கியமான நேரத்தில் தலைமைச் செயலாளரை எங்களால் விடுவிக்க முடியாது. ஆகவே, உங்கள் முடிவை திரும்பப் பெறுங்கள்” என்று மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். இதற்கிடையே இன்று ஓய்வு பெற்ற தலைமைச் செயலாளரை, தன்னுடைய அரசுக்கு ஆலோசகராக நியமித்து மம்தா பானர்ஜி மத்திய அரசுக்கு பதிலடி கொடுத்திருக்கிறார்.

click me!