
தலைநகர் டெல்லியில் காற்றின் தரம் ஞாயிற்றுக்கிழமை 'கடுமையான' பிரிவுக்கு சரிந்தது. காலை 7 மணியளவில் ஒட்டுமொத்த காற்றுத் தரக் குறியீடு (AQI) 391 ஆகப் பதிவாகியுள்ளது என மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் (CPCB) தரவுகள் தெரிவிக்கின்றன. நகரின் பல பகுதிகளில் காற்றுத் தரக் குறியீடு 400-ஐ தாண்டி, அபாயகரமான மாசின் அளவுகள் பதிவாகியுள்ளன.
CPCB தரவுகளின்படி, ஆனந்த் விஹாரில் AQI 412 ஆகவும், அலிப்பூரில் 415 ஆகவும், பவானாவில் அதிகபட்சமாக 436 ஆகவும் பதிவாகியுள்ளது. சாந்தினி சவுக்கில் AQI 409 ஆகவும், ஆர்.கே. புரம் மற்றும் பட்பர்கஞ்சில் முறையே 422 மற்றும் 425 ஆகவும் பதிவாகியுள்ளது. சோனியா விஹாரிலும் 'கடுமையான' பிரிவில் AQI 415 ஆகப் பதிவாகியுள்ளது, இது நகரம் முழுவதும் அபாயகரமான காற்றுச் சூழலைக் குறிக்கிறது.
முன்னதாக நேற்று காலை டெல்லியில் காற்றின் தரம் 'மிகவும் மோசம்' பிரிவில் நீடித்தது. காலை 8 மணியளவில் டெல்லியின் ஒட்டுமொத்த காற்றுத் தரக் குறியீடு (AQI) 355 ஆக இருந்தது. நேற்று முன்தினம் காற்றின் தரம் 'மிகவும் மோசம்' பிரிவுக்கு சரிந்தது. டெல்லியின் ஒட்டுமொத்த காற்றுத் தரக் குறியீடு (AQI) 312 ஆக இருந்தது என மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் (CPCB) தெரிவித்துள்ளது.
தீபாவளிக்கு பிறகு மோசம்
வியாழக்கிழமை, காலை 8 மணியளவில் டெல்லியின் ஒட்டுமொத்த AQI 271 ஆகப் பதிவாகி, 'மோசம்' என வகைப்படுத்தப்பட்டது என CPCB தரவுகள் தெரிவிக்கின்றன. கடந்த வாரம் முழுவதும் நகரின் பல கண்காணிப்பு நிலையங்கள் தொடர்ந்து 'மிகவும் மோசம்' என்ற காற்றுத் தர அளவுகளைப் பதிவு செய்தன. தீபாவளி பண்டிகைக்கு பிறகு டெல்லி மற்றும் NCRபல பகுதிகளில் காற்றுத் தரக் குறியீடு (AQI) 'மோசம்' மற்றும் 'மிகவும் மோசம்' பிரிவுகளில் இருந்து வருகிறது.
GRAP அமலில் இருந்தும் இந்த நிலை
தரப்படுத்தப்பட்ட பதில் செயல் திட்டத்தின் (GRAP) நிலை 2 அமலில் இருந்தபோதிலும் இது தொடர்கிறது. மோசமடைந்து வரும் காற்றின் தரத்தைக் கருத்தில் கொண்டு, தரப்படுத்தப்பட்ட பதில் செயல் திட்டத்தின் (GRAP) நிலை II செயல்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, தேசிய தலைநகர் முழுவதும் பார்க்கிங் கட்டணங்களை இரட்டிப்பாக்குவதாக புது தில்லி முனிசிபல் கவுன்சில் (NDMC) ஏற்கனவே அறிவித்துள்ளது.