
இந்தியாவில் தூய்மை மற்றும் சுகாதாரத்தை முன்னெடுத்துச் செல்லும் “ஸ்வச்ச் சர்வேக்ஷன் 2025” (Swachh Survekshan) முடிவுகள் வெளியாகியுள்ளன. ஆண்டுதோறும் வீட்டு மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம் (MoHUA) நடத்திய இந்த ஆய்வு, நாட்டின் நகர்ப்புற அமைப்புகள் சுகாதாரம், கழிவு மேலாண்மை மற்றும் பொது தூய்மையில் எவ்வளவு முன்னேற்றம் கண்டுள்ளது என்பதை மதிப்பிடுகிறது. ஸ்வச் பாரத் மிஷன் (நகர்ப்புறம்) திட்டத்தின் முக்கிய அங்கமாக, இந்த தரவரிசை நகரங்களுக்கு இடையே ஆரோக்கியமான போட்டியை உருவாக்கி, இந்தியாவின் நகரங்கள் சுத்தமாக மாற உதவியுள்ளது.
தூய்மையான நகரங்களில் முதலிடம்
தொடர்ச்சியாக எட்டாவது முறையாக இந்தியாவின் தூய்மையான நகரம் என்ற பெருமையைப் பெற்றுள்ளது இந்தூர். வீடு தோறும் குப்பை சேகரிப்பு, திறம்பட செயல்படும் கழிவு மறுசுழற்சி நிலையங்கள், மற்றும் மக்கள் பங்கேற்பு ஆகியவை இதன் வெற்றிக்குக் காரணம். சுத்தமான நகரமாக மட்டும் அல்லாமல், “நிலைத்திருக்கும் கழிவு மேலாண்மைக்கான இந்திய மாடல்” எனப் போற்றப்படுகிறது.
சூரத்
குஜராத்தின் வணிக இதயம் என்று அழைக்கப்படும் சூரத் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. நகரின் சாலைகள், பொதுத் தளங்கள், மற்றும் மார்க்கெட்டுகள் அனைத்தும் நவீன தொழில்நுட்பம் மூலம் சுத்தம் செய்யப்படுகின்றன. குப்பை மேலாண்மை முறையில் சூரத் எடுத்த புதுமையான முயற்சிகள், நகரம் முழுவதும் ஒரே தரமான தூய்மையை உருவாக்கியுள்ளது. திட்டமிட்ட நகர்ப்புற நிர்வாகத்தின் வெற்றிக்கு இது சிறந்த எடுத்துக்காட்டாக திகழ்கிறது.
நவி மும்பை
மூன்றாவது இடத்தில் நவி மும்பை (Navi Mumbai) இடம் பெற்றுள்ளது. ஒழுங்கமைக்க திட்டமிடல், பராமரிக்கப்பட்ட பூங்காக்கள், கழிவு மறுசுழற்சி மையங்கள் மற்றும் சுத்தமான சாலைகள் ஆகியவை இதன் சிறப்பம்சமாகும். பசுமை, தூய்மை மற்றும் நகரமைப்பை ஒருங்கிணைத்து ஒரு சீரான வாழ்க்கை சூழலை உருவாக்கியுள்ள நவி மும்பை, நகர வளர்ச்சிக்கும் சுற்றுச்சூழலுக்கும் சமநிலை கொண்ட நகரமாக திகழ்கிறது.
விசாகப்பட்டினம் மற்றும் விஜயவாடா
விசாகப்பட்டினம் கடற்கரை பகுதிகளை தூய்மையாக வைத்திருக்கும் முயற்சிக்காக பாராட்டப்பட்டது. மேலும், விஜயவாடா நகரமும் பொது இடங்கள், மார்க்கெட்டுகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் தூய்மையை கடைபிடித்து தென்னிந்தியாவில் முன்னிலையில் பெறுகிறது.
போபால் மற்றும் திருப்பதி
மத்தியபிரதேசத்தின் தலைநகர் போபால், நகர சேவைகள் மற்றும் சுகாதார அம்சங்களை மேம்படுத்துதல் தொடர்ந்து தரவரிசையில் முன்னேறி வருகிறது. திருப்பதி ஒரு முக்கிய ஆன்மீக ஸ்தலம் என்பதால் தினசரி ஆயிரக்கணக்கான பக்தர்களை வரவேற்கிறது. இதனிடையே தூய்மையைப் பேணுவதில் நகராட்சி எடுத்த நடவடிக்கைகள் பாராட்டத்தக்கவை.
மைசூர் மற்றும் புது டெல்லி
மைசூர் தனது பாரம்பரிய நகர அழகையும் தூய்மையையும் ஒன்றாக பேணுகிறது. அதேசமயம், புது டெல்லி NDMC பகுதி அரசு நிர்வாக மையமாக இருந்தாலும், அதே தரத்தில் தூய்மையையும் ஒழுங்குபடுத்துகிறது. இவை இரண்டும் சிறந்த நிர்வாகத்தின் இடங்களாக மாறியுள்ளது.
அம்பிகாபூர்
பட்டியலில் அம்பிகாபூர் பத்தாவது இடத்தைப் பெற்றுள்ளது. இந்த நகரம் SLRM (Solid & Liquid Resource Management) மையங்களை உருவாக்கி, கழிவுகளை முறையாக சீரமைக்கும் தனித்துவமான மாடலை நடைமுறைப்படுத்தியுள்ளது. இது சிறிய நகரங்களும் பெரிய சாதனைகளைப் படைக்க முடியும் என்பதை நிரூபிக்கிறது.
இந்தியாவின் தூய்மையான நகரங்கள் 2025
இந்த பட்டியல் வெறும் தரவரிசை அல்ல இது இந்திய நகரங்களின் சுத்தம், சுகாதாரம், மற்றும் நிலை வளர்ச்சி நோக்கில் ஏற்பட்டுள்ள பண்பாட்டு மாற்றத்தின் சின்னமாகும். ஸ்வச் சர்வேக்ஷன் 2025 போட்டி, நகரங்களை ஆரோக்கியமான மற்றும் சுற்றுச்சூழல் நேயமான திசையில் முன்னெடுத்து செல்கிறது. இந்த தரவரிசையின் முதல் 10 இடங்களில் தமிழ்நாடும், தமிழ்நாட்டை சேர்ந்த எந்த பகுதிகளும் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.