Bipin rawat : ராவத்துக்கு மரியாதை செய்த உத்தராகண்ட் அரசு… பல்கலைக்கழகத்திற்கு அவரது பெயர் சூட்ட முடிவு!!

Published : Dec 10, 2021, 07:43 PM IST
Bipin rawat : ராவத்துக்கு மரியாதை செய்த உத்தராகண்ட் அரசு… பல்கலைக்கழகத்திற்கு அவரது பெயர் சூட்ட முடிவு!!

சுருக்கம்

உத்தராகண்ட் மாநிலத்தில் புதிதாக அமைக்கப்பட்டு வரும் பல்கலைக்கழகத்திற்கு மறைந்த முப்படைத் தளபதி பிபின் ராவத்தின் பெயரைச் சூட்ட அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது. 

உத்தராகண்ட் மாநிலத்தில் புதிதாக அமைக்கப்பட்டு வரும் பல்கலைக்கழகத்திற்கு மறைந்த முப்படைத் தளபதி பிபின் ராவத்தின் பெயரைச் சூட்ட அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது. கோவை மாவட்டம் சூலூர் விமானப்படை தளத்தில் இருந்து நீலகிரி மாவட்டத்தில் உள்ள வெலிங்டன் ராணுவ மையத்துக்கு Mi-17V5 ராணுவ ஹெலிகாப்டர் புறப்பட்டுச் சென்றது. இந்த ஹெலிகாப்டரில் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் மற்றும் அவரது மனைவி உள்ளிட்ட 14 பேர் பயணம் செய்தனர். அப்போது கடும் பனிமூட்டம் காரணமாக காட்டேரி மலைப்பகுதியில் உள்ள மலை முகடு ஒன்றில் மோதி ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி உள்ளிட்ட 13 பேர் உயிரிழந்தனர்.

கேப்டன் வருண் சிங் 80 சதவீதத் தீக்காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.  இந்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. வெலிங்டன் ராணுவ சதுக்கத்தில் வைக்கப்பட்ட முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உட்பட 13 பேரின் உடலுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், முப்படைகளின் தளபதிகள், தெலங்கானா ஆளுநர் தமிழிசை செளந்தராஜன், அமைச்சர்கள், அதிகாரிகள் அஞ்சலி செலுத்தினர். பின்னர் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உட்பட 13 பேரின் உடலுக்கு இறுதி மரியாதை செலுத்தப்பட்ட நிகழ்வு முடிந்து 13 பேரின் உடல்களும் 13 ஆம்புலன்ஸ்களில் ஏற்றப்பட்டு சூலூர் விமானப்படை தளத்திற்கு சாலை மார்க்கமாக கொண்டு செல்லப்பட்டது. சூலூர் விமானப்படை தளத்தில் இருந்து சிறப்பு ராணுவம் விமானம் மூலம்  அனுப்பப்பட்ட 13 இராணுவ வீரர்களின் உடல்கள் டெல்லி கொண்டு செல்லப்பட்டன. டெல்லி பாலம் விமான நிலையத்தில் பிபின் ராவத் உள்ளிட்ட 13 பேர் உடல்களும் அஞ்சலிக்காக வைக்கப்பட்டன. அங்கு பிரதமர் மோடி, பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், இணை அமைச்சர் அஜய் பட், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல்,  ராணுவ தளபதி நரவானே உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினார்.

அதை தொடர்ந்து இன்று 7 பீரங்கி குண்டுகள் முழங்க ஒரே தகன மேடையில் வைக்கப்பட்டிருந்த பிபின் ராவத், மதுலிகா ராவத் உடல்களுக்கு அவர்களின் மகள்கள் க்ரித்திகா, தாரிணி இருவரும் இறுதிச் சடங்குகள் செய்து உடல்களுக்கு தீமூட்டினர். இதற்கிடையே நாடு முழுவதும் உள்ள மக்கள் பிபின் ராவத்துக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்த நிலையில் உத்தராகண்ட் மாநிலத்தில் புதிதாக அமைக்கப்பட்டுவரும் பல்கலைக்கழகத்திற்கு மறைந்த முப்படைத் தளபதி பிபின் ராவத்தின் பெயரைச் சூட்ட அம்மாநில அரசால் முடிவு செய்யப்பட்டுள்ளது.

பிபின் ராவத், பிறப்பால் உத்தராகண்ட் மாநிலத்தை சேர்ந்தவர் என்பதால் அவருக்கு மரியாதை செய்யும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள தேவபிரயாகை என்கிற இடத்தில் புதிய சமஸ்கிருத பல்கலைக்கழகம் தொடங்குவதற்கான பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன. இந்தப் பல்கலைக்கழகத்திற்கு தளபதி ராவத் பெயரை சூட்ட வேண்டும் என தேவப்பிரயாகை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வினோத் கண்டூரி நேற்று (வியாழக்கிழமையன்று) மாநில சட்டசபையில் முன்மொழிந்தார். இந்த தீர்மானத்தை உத்தராகண்ட் சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஒருமனதாக ஆதரித்து இன்று ஏற்றுக்கொண்டுள்ளனர். பல்கலைக்கழகம் மட்டுமன்றி, உத்தராகண்ட் மாநிலத்தில் தலைநகர் டேராடூன் அருகே ராணுவ தியாகிகளுக்காக கட்டமைக்கப்படும் நினைவிடத்துக்கும் தளபதி பிபின் ராவத் பெயரை சூட்ட வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

PREV
click me!

Recommended Stories

Ola–Uber-க்கு டஃப் போட்டி.. மத்திய அரசின் பாரத் டாக்ஸி.. பயணிகளுக்கு குறைந்த கட்டணம்!
தண்ணீர் பிரச்சினை தீர்ந்தது! 4 ஆண்டுகளுக்குப் பிறகு முடியை இறக்கி சபதத்தை நிறைவேற்றிய பாஜக எம்.எல்.ஏ!