இளங்கலை நீட் தேர்வு 2024இல் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட கருணை மதிப்பெண்கள் ரத்து செய்யப்பட்டு, அவர்களுக்கு மறுதேர்வு நடத்த முடிவு செய்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது
அகில இந்திய அளவில் மருத்துவ படிப்புகளில் சேர்வதற்கு நீட் நுழைவுத் தேர்வு கட்டாயமாக்கப்பட்டு ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. இந்த தேர்வினை தேசிய தேர்வு முகமை நடத்துகிறது. அந்த வகையில், 2024-25 கல்வியாண்டுக்கான இளநிலை மருத்துவப்படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு கடந்த மே மாதம் 5ஆம் தேதி நடத்தப்பட்டு ஜூன் 4ஆம் தேதி முடிவுகள் வெளியிடப்பட்டன.
ஆனால், தேர்வு முடிவுகளில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றதாக தேர்வு எழுதிய மாணவர்கள் குற்றம் சாட்டினார். வினாத்தாள் கசிவு, ஆள்மாறாட்டம், தேர்வு எழுதியவர்களில் 1536 பேருக்கு கருணை மதிப்பெண்கள் அளிக்கப்பட்டது, இதுவரை இல்லாத அளவுக்கு 67 பேர், 720 என்ற முழு மதிப்பெண்களை பெற்றது, குறிப்பாக ஒரே மையத்தில் தேர்வு எழுதிய 6 மாணவர்கள் 720 / 720 மதிப்பெண் பெற்று முதலிடம் பிடித்திருப்பது என நீட் தேர்வு முடிவுகள் தேசிய அளவில் கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.
நீட் தேர்வில் முறைகேடுகள் தொடர்பாக அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மறு தேர்வு நடத்தப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டு வருகிறது. இதுதொடர்பாகவும் உச்ச நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அந்த வகையில், நீட் தேர்வை ரத்து செய்து மறு தேர்வு நடத்தப்பட வேண்டும், கருணை மனுக்கள் வழங்கியது போன்றவற்றுக்கு எதிரான மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.
குவைத் தீ விபத்து: கருகி போன உடல்கள்... டி.என்.ஏ. சோதனை - தயார் நிலையில் விமானப்படை விமானம்!
வழக்கு விசாரணையின்போது, இளங்கலை நீட் தேர்வு 2024இல் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட கருணை மதிப்பெண்கள் ரத்து செய்யப்படுவதாகவும், நீட் 2024 தேர்வில் கருணை மதிப்பெண்கள் பெற்ற 1,563 மாணவர்களுக்கு மறுதேர்வு நடத்த உள்ளதாகவும் தேசிய தேர்வு முகமை உச்ச நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது.
முன்னதாக, நீட் தேர்வுக்கு எதிரான வழக்கு விசாரணையின் போது, குளறுபடிகளால் நீட் தேர்வின் புனித தன்மை பாதிக்கபட்டுள்ளதாக தாங்கள் கருதுகிறோம் என உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.