குவைத் தீ விபத்தில் பலியானவர்களின் உடல்கள் கருகி போயுள்ளதால் அவர்களை அடையாளம் காண டி.என்.ஏ. சோதனை நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
குவைத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்த இந்தியர்களில் சிலரின் உடல்கள் அடையாளம் காண முடியாத அளவுக்கு கருகிவிட்டதாகவும், பாதிக்கப்பட்டவர்களின் அடையாளத்தை உறுதிப்படுத்த டிஎன்ஏ சோதனை நடைபெற்று வருவதாகவும் மத்திய வெளியுறவுத்துறை இணையமைச்சர் கீர்த்தி வர்தன் சிங் தெரிவித்துள்ளார். உயிரிழந்தவர்களின் உடல்களை அடையாளம் காண அதிகாரிகளுக்கு உயிர் பிழைத்தவர்கள் உதவி வருகின்றனர்.
தீ விபத்து ஏற்பட்டதைத் தொடர்ந்து, மத்திய வெளியுறவுத்துறை இணையமைச்சராக பொறுப்பேற்ற உடனேயே குவைத்துக்கு விரைந்த அவர், உயிரிழந்தவர்களின் உடல்களை இந்தியா கொண்டு வர இந்திய விமானப்படை விமானம் தயாராக உள்ளதாகவும் தகவல் தெரிவித்துள்ளார்.
“உடல்கள் அடையாளம் காணப்பட்டவுடன், அவர்களின் உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்படும். விமானப்படை விமானம் உடல்களை இந்தியாவுக்கு கொண்டு வரும். அந்த விமானங்கள் தயாரக உள்ளன.” என்றார்.
குவைத்தின் தெற்கு மங்காஃப் மாவட்டத்தில் கேரள தொழிலதிபர் கேஜி ஆபிரகாமுக்கு சொந்தமான NBTC குழுமத்திற்கு சொந்தமான கட்டிடத்தில் நேற்று ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கி இதுவரை 48 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களில் 42 பேர் இந்தியர்கள் என்று நம்பப்படுகிறது.
தீ விபத்துக்குள்ளான கட்டிடத்தில் கேரளா மற்றும் தமிழகத்தை சேர்ந்த தொழிலாளர்கள் உட்பட சுமார் 195 தொழிலாளர்கள் இருந்ததாக கூறப்படுகிறது. அதிகாலை சமையல் அறையில் ஏற்பட்ட தீ விபத்து மளமளவெனெ கட்டிடம் முழுவதும் பரவியது. உயிரிழந்த பெரும்பாலானோர் புகையை உள் இழுத்ததால் ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு பேரனின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?
முன்னதாக, குவைத் தீ விபத்து தொடர்பாக பிரதமர் மோடி அதிகாரிகளுடன் தனது இல்லத்தில் ஆலோசனை நடத்தினார். தொடர்ந்து, தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர் மோடி, உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் எனவும் அறிவித்துள்ளார்.
விபத்து தொடர்பான உதவிக்கு 965-65505246 என்ற எண்ணை தொடர்பு கொள்ளுமாறு குவைத்தில் உள்ள இந்திய தூதரகம் அறிவித்துள்ளது. அதேபோல், இவ்விபத்து தொடர்பாக தமிழ்நாடு அரசின் அயலகத் தமிழர் நலத்துறையுன் உதவி எண்களை அறிவித்துள்ளது. அதன்படி, இந்தியாவிற்குள் - +91 1800 309 3793 என்ற எண்ணையும், வெளிநாடு - +91 80 6900 9900, +91 80 6900 9901 ஆகிய எண்களையும் தொடர்புகொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.