
மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை 1 சதவீதம் உயர்த்துவதற்கு மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்தது. இதன் மூலம் 48.85 லட்சம் ஊழியர்களும், 55.51 லட்சம் ஓய்வூதியதாரர்களும் பயன்பெறுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
.பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் தில்லியில் நேற்று நடைபெற்றது. அப்போது அரசு ஊழியர்களுக்கும், ஓய்வூதியதாரர்களுக்கும் அகவிலைப்படியை 4 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக உயர்த்த முடிவு செய்யப்பட்டது.
ஊழியர்கள், ஓய்வூதியதாரர்கள் ஆகியோருக்கான இந்த அகவிலைப்படி உயர்வு காரணமாக மத்திய அரசுக்கு ஆண்டுதோறும் ரூ.3,068.26 கோடியும், 2017-18ஆம் நிதியாண்டில் ரூ. 2,045.50 கோடியும் செலவாகும் என்று அரசு அறிவித்துள்ளது.
இதனிடையே, அமைப்பு சார்ந்த பணியாளர்களுக்கு வரிப் பிடித்தம் இல்லாத பணிக்கொடையை (கிராஜுவிட்டி) இரண்டு மடங்காக உயர்த்துவதற்கு வழிவகுக்கும் சட்டத் திருத்த மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.
இதன் மூலம் அந்தப் பணியாளர்களுக்கு ரூ.20 லட்சம் வரை பணிக்கொடை வழங்குவதற்கான மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு, நிறைவேற வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
பொதுத் துறை மற்றும் தனியார் துறையில் பணிபுரியும் அமைப்பு சார்ந்த பணியாளர்களுக்கான பணிக்கொடை உச்ச வரம்பு தற்போது ரூ.10 லட்சமாக உள்ளது. அதை இரண்டு மடங்காக்க மத்திய அரசு முடிவு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.