'ஸ்வச் பாரத் மல்லாக்க கவிழ்ந்தது ஏன்?' சர்வேக்கு பின்னே ஷாக்...

First Published May 26, 2017, 1:18 PM IST
Highlights
D St marks Modi 3 years with 448 point sensex rally


3 ஆண்டுகளை நிறைவு செய்திருக்கிறது மோடி அரசு. கொண்டாட்டத்தில் மோடி அண்ட் கோ இருக்க, இந்த மூன்றாண்டு செயல்பாடுகளை பற்றி நடத்தப்பட்ட சர்வேக்களில் ஒன்று ‘தூய்மை இந்தியா திட்டம் தோல்வியடைந்ததாக 57%பேர் சொல்கிறார்கள்.’ என்று போட்டுத்தாக்கி இருக்கிறது. 

பிரதமரின் மனதுக்கு நெருக்கமான திட்டமாக அறிவிக்கப்பட்ட ஸ்வச் பாரத் எனும் தூய்மை இந்தியா திட்டம் தோல்வியா? என்று ஷாக் ஆக வேண்டியதில்லை. அது இப்போது வரை தோல்வி நிலையில்தான் இருக்கிறதென்பது நம் வீதியில் பொங்கும் குப்பைகள் சொல்கின்றன. 

ஆனால் ஏன் தோல்வி? என்கிற காரணத்தை ஆராய்கையில்தான் ஷாக் அடிக்கிறது. பாரதம் சுத்தமாகாமல் அழுக்காவே  கிடக்க யாரெல்லாம் காரணம்! பார்க்கலாமா...
பல நூறு கோடிகளை ஒதுக்கி ஸ்வச் பாரத்தை அறிமுகப்படுத்தினார்கள். பிரதமரே துடைப்பத்தோடு போஸ் கொடுத்தார். பிரதமர் மட்டுமா கொடுத்தார்? அமிதாப், சச்சின், ஷாரூக், தீபிகா படுகோனே என்று ஆளாளுக்கு சீமாரை எடுத்து சீன்  போட்டார்கள். ஆனால் துவக்கவிழாவுக்கு துடைத்ததோடு சரி. 

தமிழகத்திலும் இந்த சீன்களுக்கு பஞ்சமில்லை. நம் உலக நாயகனை கூட இந்த திட்டத்துக்கான அம்பாஸிடம் ஆக்கினார்கள். அவரும் விழாவெல்லாம் எடுத்து ’பிசிராந்தையார் காலத்திலேயே விளக்குமாறும், வெற்றுடம்புமாக வீதியொழுக்கத்துக்கு வகை சொன்ன இனம்தான் இது. ஆலயங்களில் உளவாரலை விட சாலைகளில் நிழலாறும் வகையிலான சுத்தத்தை மேம்படுத்தலாமென்பது கற்றறிந்த அவையோர்க்கு மத்தியில் எளியவனான இந்த கமலின் சிரம் தாழ்ந்த சிந்தனை.’ என்று வழுகல் தமிழில் மொழு மொழுவென பேசியபோது தெறித்தது கூட்டம். 

இப்படியாக பவுடர் பார்ட்டிகளை வைத்தே ப்ரமோ கொடுக்கப்பட்டாலும் அடிப்படையில் நல்ல சிந்தனையுடன் துவக்கப்பட்ட திட்டம் இது. ஆனால் நிதி ஒதுக்குவதாலும், கேமெராக்கள் முன்பாக நட்சத்திரங்கள் பேசுவதாலும் மட்டுமே வெற்றியடைந்திட முடியாது இந்த திட்டம். 

பாரதம் சுத்தமாக வேண்டுமென்றால் பிரதமர் முதல் உங்கள் பக்கத்து வீட்டு பிச்சுமணி வரை அத்தனை பேரும் தனித்தனியாக சுத்த லட்சியம் எடுத்திருக்க வேண்டும். அது நிகழ்ந்ததா என்றால் இல்லை!

அரசாங்கம் இலவசமாக கொடுத்த ‘மக்கும் குப்பைகளுக்கான டப்பா, ‘மக்காத குப்பைகளுக்கான டப்பா’ இரண்டையும் வாங்கி ஒன்றை டாய்லெட் பக்கெட்டாக மாற்றினோம் இன்னொன்றில் மண்ணை கொட்டி வீட்டுக்குள் மணி பிளான்ட் வளர்த்தோம். அப்படின்னா குப்பை? அதை பரோட்டா வாங்கிய பார்சல்  கவரில் அடைத்து தூக்கி எறிந்தோம். அதையாவது ஒழுக்கமாக தெருவில் இருக்கும் குப்பை தொட்டியில் போட்டோமா? இல்லை. விராட் கோஹ்லியை நோக்கி மலிங்கா வீசும் தாறுமாறான பந்து போல் தூக்கி எறிகிறோம். அது மிக சரியாக தொட்டிக்கு வெளியே விழுந்து சிதறி தெரு நாய்களுக்கு ட்ரீட் கொடுக்கிறது. 

புறநகர் மரத்தடிகளை வெட்டவெளி பார் ஆக மாற்றி சரக்கடிக்கிறோம். பாட்டிலையும், மிக்சர் பாக்கெட்டுகளையும் அப்படியே மல்லாக்க போட்டுவிட்டு மப்பில் வீடுபோய் சேர்கிறோம். ஏரியாவுக்கு ஏரியா ஒருங்கிணைந்த சுகாதார வளாகம் இருந்தாலும் கூட ஒரு பெரும் கூட்டமே கக்கா போவதென்னவோ சாலையோரங்களில்தான். கேட்டா ‘பழகிப்போச்சு!’ என்று பகுமானமாக பதில் வருகிறது. 

பொது இடத்தில் ஊதித்தள்ளுகிறோம், அணையாத சிகரெட்டின் மிச்சத்தை நடு ரோட்டில் வீசியெறிந்து ஃபயர் டான்ஸ் ஆட வைக்கிறோம். வீட்டுக் குப்பை, நிறுவன குப்பை, கம்பெனி குப்பை, மருத்துவ குப்பை, தியேட்டர் குப்பை, பார் குப்பை, ஹோட்டல் குப்பை, பலான குப்பை, பாலியல் குப்பை என்று அசிங்கங்களை கொட்டிக் கொண்டே இருக்கிறோம். 
இதை செய்வது நடுத்தர மக்களும், வறுமைப் பேர்வழிகளும் மட்டுமில்லை. மன்னாரு குடும்பத்தில் துவங்கி மில்லியனர்களின் குடும்பங்கள் வரை இதே புத்திதான். 
சுத்தமான பாரதம் எனும் ‘ஸ்வச் பாரத்’ திட்டத்திற்கு முன் மோடி ‘ஸ்வச் மன்’ அதாவது ’தூய்மையான மனம்’ எனும் திட்டத்தை கொண்டு வர வேண்டியது அவசியம்.

click me!