
சர்வதேச யோகா தினத்தை சிறப்பாக கொண்டாட மத்திய அரசு தயாராகி வரும் நிலையில், 100 யோகா பூங்காக்களை நிறுவ மத்தியஅரசு முடிவு செய்துள்ளது.
சர்வதேச யோகா தினம்
வரும் ஜூன் 21 ஆம் தேதி சர்வதேச யோகா தினம் கொண்டாடப்படுகிறது. உத்தர பிரதேச தலைநகர் லக்னோவில் நடைபெறும் மிகப் பிரம்மாண்டமான யோகா தின நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். 150 நாடுகள் இந்த யோகாவைகொண்டாடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்த நாடுகளில் உள்ள இந்தியதுதரங்கள் இந்த நிகழ்ச்சியை ஒருங்கிணைக்கிறது.
பாரீசின் ஈபிள் டவர், லண்டனில் உள்ள டிராபல்கர் சதுக்கம், நியூயார்க்கில் உள்ள செண்ட்ரல் பார்க் ஆகிய இடங்களில் யோகா தினம் கடைபிடிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
190 நாடுகள்
இது குறித்து மத்திய ஆயுஷ் அமைச்சகத்தின் இணை அமைச்சர் பிரசாத் யெஸ்ஸோ நாயக் கூறுகையில், “ இந்த உலகமே யோகா கலையில் இந்தியா சிறப்பானது என்று ஏற்றுக்கொண்டுவிட்ட நிலையல், இதை பெரிதாகச் சொல்ல வேண்டியது இல்லை.கடந்த 2 ஆண்டுகளாக சர்வதேச யோகா தினம், 190க்கும்அதிகமான நாடுகளில் கொண்டாடப்பட்டுள்ளது.
100 யோகா பூங்கா
யோகா கலையின் வளர்ச்சிக்கும், அதை ஊக்கப்படுத்தும் வகையில் சர்வதேச அளவில், உள்நாட்டு அளவில் சிறப்பாகச் செயலாற்றிய அமைப்புகள் மற்றும் தனிநபர்களுக்கு பிரதமர் விருது வழங்கப்பட உள்ளது. ஆயுஷ் அமைச்சகத்தின் செயலாளர்கள் விருந்துக்குரிய நபர்களின் பெயர்களை பரிந்துரை செய்து, இறுதியாக அமைச்சரவை செயலாளர் தலைமையிலான குழு 4 வெற்றியாளர்களை முடிவு செய்வார்கள். மேலும், நாடுமுழுவதும் 100 யோகா பூங்காக்களை உருவாக்கவும் அரசு முடிவு செய்துள்ளது.
லக்னோவில் பிரதமர் கலந்து கொள்ளும் யோகா நிகழ்ச்சியில் உத்தர பிரதேச முதல் அமைச்சர், மத்திய அமைச்சர்கள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களும் கலந்து கொள்கின்றனர்’’ என்று அவர் தெரிவித்தார்.