
யானைப் பசிக்கு சோளப்பொரி…வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு வெறும் 487 கோடி மட்டும் தான் …
பிரதமரின் பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு வறட்சி நிவாரண நிதியாக வெறும் 487 கோடி ரூபாய் மட்டும் ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. சென்னை நீங்கலாக அனைத்து மாவட்டங்களிலும் வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு வழங்கப்படவுள்ளது.
இயற்கை சீற்றங்களால் விவசாயத்தில் ஏற்படும் இழப்புகளிலிருந்தும், அதனால் ஏற்படும் நிச்சயமற்ற தன்மையிலிருந்தும், விவசாயிகளை பாதுகாக்க பிரதம மந்திர பயிர்க் காப்பீட்டுத் திட்டம் என்ற புதிய மேம்படுத்தப்பட்ட பயிர் காப்பீட்டுத் திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தும் என கடந்த மார்ச் மாதம் நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதனையொட்டி, பிரதமர் பயிர்க்காப்பீட்டு திட்டத்தின்கீழ், தமிழகத்திற்கு, 487 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து ஆணை வெளியிடப்பட்டுள்ளது.
சென்னை நீங்கலாக அனைத்து மாவட்டங்களுக்கும் வழங்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
30.33 லட்சம் ஏக்கர் பரப்பளவு நிலங்கள் இந்த பயிர்க் காப்பீடு திட்டத்தினால் பயன்பெறும் என்றும், வறட்சி, இயற்கை சீற்றங்களால் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் சுமையை குறைக்க இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் யானைப்பசிக்கு சோளப் பொரிதான் இந்த நிவாரணத் தொகை என விவசாயிகள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.