
சி.பி.எஸ்.இ தேர்வு முடிவுகள் எப்போது வெளியிடப்படும் ? என்ன சொல்கிறார் பிரகாஷ் ஜவடேகர் ?
சி.பி.எஸ்.இ தேர்வு முடிவுகள் விரைவில் வெளியிடப்படும் என்றும் எந்தவொரு மாணவருக்கும் அநீதி இழைக்கப்படாது என்பதால் யாரும் அச்சப்படத் தேவையில்லை என்றும் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.
சி.பி.எஸ்.இ +2 பொதுத்தேர்வில், கருணை மதிப்பெண் வழங்கும் முடிவை ரத்து செய்வதாக கடந்த ஏப்ரல் மாதம் சி.பி.எஸ்.இ அறிவித்தது.
இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம், சி.பி.எஸ்.இ.யின் அறிவிப்பை ரத்து செய்ததுடன், கருணை மதிப்பெண் முறையை பின்பற்ற வேண்டும் என்றும் உத்தரவிட்டது.
இதனையடுத்து, நீதிமன்ற உத்தரவை அமல்படுத்துவது குறித்து சி.பி.எஸ்.இ நிர்வாகம் ஆலோசனை மேற்கொண்டது.
டெல்லி உயர்நீதிமன்ற உத்தரவு காரணமாக வெளியாகவிருந்த சி.பி.எஸ்.இ +2 தேர்வு முடிவுகள் வெளியிடப்படவில்லை.
இந்நிலையில், செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், சி.பி.எஸ்.இ தேர்வு முடிவுகள்வெளியிடப்படும் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று தெரிவித்தார்.
மாணவர்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை என்றும் , எந்தவொரு மாணவருக்கும் அநீதி இழைக்கப்பட மாட்டாது என்றும் ஜவடேகர் குறிப்பிட்டார்.