பிபர்ஜோய் புயல் மேலும் தீவிரமடைந்து, அடுத்த 3 நாட்களுக்கு அதிதீவிரமாக இருக்கும்.. வானிலை மையம் எச்சரிக்கை..

By Ramya sFirst Published Jun 8, 2023, 8:53 PM IST
Highlights

அரபிக்கடலில் நிலை கொண்டிருக்கும் பிபர்ஜோய் என்ற 'மிக தீவிரமான புயல் அடுத்த மூன்று நாட்களில் தீவிரம் அடைய வாய்ப்புள்ளது என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தென்கிழக்கு அரபிக்கடலில் ஜூன் 5-ம் தேதி மாலை குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி 12 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. ஜூன் 6 ஆம் தேதி காலை 11.30 மணியளவில், இது தென்கிழக்கு மற்றும் கிழக்கு-மத்திய அரபிக்கடலை ஒட்டி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. ஜூன் 7ஆம் தேதி மாலை 5.30 மணியளவில் அது புயலாக மாறியது. இந்த புயலுக்கு பிபர்ஜோய் என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த அடுத்த 12 மணி நேரத்தில், அதே பகுதியில் 'மிகவும் தீவிர புயலாக மாறியது.

300 அடி ஆழ்துளை கிணற்றில் விழுந்து, 55 மணி நேரத்துக்குப் பின் மீட்கப்பட்ட சிறுமி உயிரிழப்பு..

இந்த நிலையில் அரபிக்கடலில் நிலை கொண்டிருக்கும் பிபர்ஜோய் என்ற 'மிக தீவிரமான புயல் அடுத்த மூன்று நாட்களில் தீவிரம் அடைய வாய்ப்புள்ளது என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. ஆனால் அது வடக்கு-வடமேற்கு நோக்கி நகர்வதால் இந்தியக் கடற்கரையிலிருந்து விலகி இருக்கும் என்று தெரிவித்துள்ளது. மேலும் இந்த புயல், வேகமாக தீவிரமடைந்து வருவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மூத்த விஞ்ஞானியும் இந்திய வானிலை மையத்தின் புனே மண்டல தலைவருமான டாக்டர் கே.எஸ்.ஹோசாலிகர் இதுகுறித்து பேசிய போது "தற்போதைய நிலவரப்படி கடலோரப் பகுதிகளில் நேரடியான தாக்கத்தை நாங்கள் எதிர்பார்க்கவில்லை. சமீபத்திய முன்னறிவிப்பு, புயல் கரையை விட்டு வடக்கு மற்றும் வடமேற்கு திசையில் நகரக்கூடும் என்று காட்டுகிறது. தற்போது, கடற்கரைக்கு அது நெருங்கி வரும் என்று எந்த முன்னறிவிப்பும் இல்லை. ஆனால் மீனவர்களுக்கான எச்சரிக்கைகள் நடைமுறையில் உள்ளன, மேலும் கடல் சீற்றமாக இருப்பதால் மேற்கு கடற்கரையோரங்களில் உரிய எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்" என்று தெரிவித்தார்.

இன்று (08.06.2023) பிற்பகல் நிலவரப்படி, கிழக்கு-மத்திய அரபிக்கடலில் 'மிகக் கடுமையான' புயலின்  தீவிரத்துடன் புயல் தொடர்ந்து சீற்றமாக உள்ளது. மணிக்கு 135-145 கிமீ வேகத்தில் காற்று வீசுவதுடன், மணிக்கு 160 கிமீ வேகத்தில் காற்று வீசும், மேலும் ஜூன் 10 ஆம் தேதிக்குள் மணிக்கு 170 கிமீ வேகத்தில் உச்சம் அடையும்.

பிபர்ஜோய் புயல் கோவாவிலிருந்து மேற்கு-தென்மேற்கே 850 கிமீ தொலைவிலும், மும்பையில் இருந்து தென்மேற்கே 890 கிமீ தொலைவிலும், போர்பந்தருக்கு 900 கிமீ தெற்கே-தென்மேற்கிலும் மையம் கொண்டிருந்ததாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது அடுத்த 24 மணி நேரத்தில் படிப்படியாக தீவிரமடைந்து அடுத்த மூன்று நாட்களில் கிட்டத்தட்ட வடக்கு-வடமேற்கு நோக்கி நகரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிபர்ஜோய் புயல் மேற்கு கடற்கரையில் இருந்து பல நூறு கிலோமீட்டர் தொலைவில் இருந்தாலும், கோவா, கர்நாடகா, மகாராஷ்டிரா மற்றும் குஜராத்தில் உஷார் நிலையில் அதிகாரிகள் உள்ளனர். நேரடி பாதிப்புகள் ஏதும் ஏற்படாது என்றாலும், கடல் சீற்றமாக இருப்பதால், ஜூன் 14ஆம் தேதிக்கு மீன்பிடி நடவடிக்கைகள் எதுவும் மேற்கொள்ளக் கூடாது என்று வானிலை மையம் எச்சரித்துள்ளது.

ஜூன் 11-ம் தேதி முதல் கர்நாடகா-கோவா-மகாராஷ்டிரா மற்றும் குஜராத் கடற்கரையை ஒட்டி கடல் சீற்றத்துடன் காணப்படும். ஜூன் 13-ஆம் தேதி வரை மத்திய அரபிக்கடலுக்கும், ஜூன் 12-ஆம் தேதி முதல் வடக்கு அரபிக்கடலுக்கும் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என மீனவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. கடலில் இருந்தவர்கள் திரும்பி வருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அடுத்த 3 முதல் 4 நாட்களில் மகாராஷ்டிரா-குஜராத் கடற்கரையில் மணிக்கு 35 முதல் 45 கிமீ வேகத்தில் காற்று வீசக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

ஜூன் மாதத்தில் அரபிக்கடலில் ஏற்படும் புயல்கள் இயல்பானது தான்.  ஆனால் சூடான கடல் மேற்பரப்பு வெப்பநிலை இந்தியப் பெருங்கடலில் தீவிரமான புயல்களை தூண்டி வருகிறது, இதனால் புயல்கள் முன்பை விட வேகமாக தீவிரமடைந்து வருகின்றன. அரேபியக் கடலில் புயல்கள் மற்றும் 'மிகக் கடுமையான' புயல்களின் தீவிரம், அதிர்வெண் மற்றும் கால அளவு அதிகரித்து வரும் போக்கையும் சமீபத்திய ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன.

மும்பை ஐஐடி பேராசிரியர் ரகு முர்துகுடே இதுகுறித்து பேசிய போது "காலநிலை மாற்றத்தின் காரணமாக கடல்கள் ஏற்கனவே வெப்பமாகிவிட்டன. உண்மையில், மார்ச் மாதத்தில் இருந்து அரபிக் கடல் கிட்டத்தட்ட 1.2 டிகிரி செல்சியஸ் வெப்பமடைந்துள்ளதாக சமீபத்திய ஆய்வு காட்டுகிறது” என்று தெரிவித்தார். 

அரசு பள்ளிகளில் வேலை நாட்கள் 198ல் இருந்து 205 ஆக உயர்வு.. மாநில அரசு அதிரடி உத்தரவு..

click me!