நாடு முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று காங்கிரஸ் காரிய கமிட்டி ஒருமனதாக முடிவு செய்துள்ளதாக ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்
காங்கிரஸ் கட்சியில் உச்சபட்ச முடிவெடுக்கும் அதிகாரம் கொண்ட அமைப்பாக காங்கிரஸ் காரிய கமிட்டி உள்ளது. அந்த கமிட்டியின் கூட்டம் தலைநகர் டெல்லியில் இன்று கூடியது. காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, சோனியா, ராகுல் உள்ளிட்ட தலைவர்கள் அக்கூட்டத்தில் பங்கேற்றனர்.
அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைமையகத்தில், சுமார் 4 மணி நேரம் நடைபெற்ற அக்கூட்டத்தில், மகளிர் இடஒதுக்கீடு மசோதா நிறைவேற்றம், நாடு தழுவிய சாதிவாரி கணக்கெடுப்பு கோரிக்கை மற்றும் ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல்கள் உள்ளிட்ட பல்வேறி விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.
undefined
அதன் தொடர்ச்சியாக, செய்தியாளர்களை சந்தித்த ராகுல்காந்தி, நாடு முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று காங்கிரஸ் காரிய கமிட்டி ஒருமனதாக முடிவு செய்துள்ளதாக தெரிவித்தார். சாதிவாரி கணக்கெடுப்பானது, நாட்டில் உள்ள ஏழைகளின் நலனுக்கான சக்திவாய்ந்த முற்போக்கான நடவடிக்கை எனவும் அவர் கூறினார். இது மதம், சாதி சார்ந்தது அல்ல. நம் நாட்டின் ஏழைகளைப் பற்றியது எனவும் ராகுல் காந்தி தெளிவுபடுத்தினார்.
சாதிவாரி கணக்கெடுப்பு விவகாரத்தில் பிரதமர் மோடியை கடுமையாக சாடிய ராகுல் காந்தி, “சாதிவாரி கணக்கெடுப்பை செய்ய பிரதமர் தகுதியற்றவராக இருக்கிறார். காங்கிரஸ் கட்சியின் 4 முதல்வர்களில் 3 பேர் ஓபிசி பிரிவைச் சேர்ந்தவர்கள். பாஜகவின் 10 முதல்வர்களில் ஒரே ஒரு முதல்வர் மட்டுமே ஓபிசி பிரிவைச் சேர்ந்தவர்.” என்று சுட்டிக்காட்டினார்.
பாஜகவில் ஓபிசி பிரிவைச் சேர்ந்த எத்தனை முதல்வர்கள் இருக்கிறார்கள் என கேள்வி எழுப்பிய ராகுல் காந்தி, ஓபிசி மக்களுக்காக பிரதமர் மோடி வேலை செய்யவில்லை, ஆனால் முக்கிய பிரச்சினைகளில் இருந்து அவர்களை திசை திருப்புகிறார் என குற்றம் சாட்டினார்.
இந்தியாவிலேயே முதன்முறையாக சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்தி முடித்ததுடன், அதன் விவரங்களையும் பீகார் மாநில அரசு வெளியிட்டிருக்கிறது. இதன் மூலம், மாநிலத்தில் நடத்தப்பட்ட சாதிவாரி கணக்கெடுப்பின் மூலம் அம்மாநிலத்தில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் 27.10%, மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் 36%, பட்டியலினத்தவர் 19.7%, பழங்குடியினர் 1.70%, இட ஒதுக்கீடு இல்லாத வகுப்பினர் 15.50% இருப்பது தெரியவந்துள்ளது.
சிக்கிம் வெள்ளம்: உயிரிழப்பு 34ஆக அதிகரிப்பு!
பீகாருக்கு முன்பே காங்கிரஸ் முதல்வர் சித்தராமையாவின் முந்தைய ஆட்சி காலத்தில் கர்நாடக மாநிலத்தில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்ட போதிலும், அதன் முடிவுகள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை. இதனை வெளியிடுவதற்கான நடவடிக்கைகளில் அம்மாநில முதல்வர் சித்தராமையா இறங்கியுள்ளார்.
மேலும், நாடு முழுவதும் சாதி வாரிக் கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என காங்கிரஸ் கட்சி வலியுறுத்தி வருகிறது. சாதி வாரிக் கணக்கெடுப்பு நடத்த ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் அரசு உத்தரவிட்டுள்ளது. சத்தீஸ்கர், மத்தியப்பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைத்தால் சாதி வாரிக் கணக்கெடுப்பு நடத்தப்படும் என அக்கட்சி உறுதியளித்துள்ளது.
ஆனால், மண்டல் கமிஷன் அறிக்கைக்கு மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி எதிர்ப்பு தெரிவித்ததாக, சாதி வாரி கணக்கெடுப்பு விவகாரத்தில் காங்கிரஸ் கட்சியை பாஜக கடுமையாக சாடி வரும் நிலையில், நாடு முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று காங்கிரஸ் காரிய கமிட்டி ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.