எப்படி தெற்கு, மேற்கு மாநிலங்கள் 50 ஆண்டுகள் வடக்கு, கிழக்கு மாநிலங்களின் செலவில் வளர்ந்தன என்று, எல்லோரும் மறந்து விட்ட சரித்திரத்தை நினைவு கூர்கிறோம்.
‘தங்கள் மாநிலங்களிலிருந்து வசூலிக்கும் வரியைவிடத் தங்களுக்கு மத்தியிலிருந்து கிடைக்கும் நிதி ஒதுக்கீடு குறைவாக இருக்கிறது; வடமாநிலங்களிலிருந்து வசூலிக்கப்படும் வரியை விட அம்மாநிலங்களுக்கு அதிக அளவில் ஒதுக்கீடு கிடைக்கிறது’ என்றும் மத்திய அரசைக் குற்றம்சாட்டி, தாங்கள் வஞ்சிக்கப்படுவதாக கேரளா, தமிழகம், கர்நாடக மாநிலங்கள் பேசத் தொடங்கியிருக்கின்றன. விஷயமறிந்தவரான சசி தரூர் கூட, துக்ளக் ஆண்டு விழாவில் கல்வி, தொழில், பொருளாதாரத்தில் தேர்ச்சி பெற்ற தென் மாநிலங்களுக்கு அநீதி என்று கூறி, அதை வடக்கு - தெற்கு அரசியல் பிரச்னையாக்கிப் பேசினார். அது பற்றி நாம் கருத்து கூறுவோம் என்று எச்சரிக்கை பகுதியில் கூறியிருந்தோம். சமீபத்திய புள்ளி விபரங்களை வைத்து பேசிய சசி தரூருக்கு மறுப்புக் கூறுவதற்கு முன், எப்படி தெற்கு, மேற்கு மாநிலங்கள் 50 ஆண்டுகள் வடக்கு, கிழக்கு மாநிலங்களின் செலவில் வளர்ந்தன என்று, எல்லோரும் மறந்து விட்ட சரித்திரத்தை நினைவு கூர்கிறோம். இது சசி தரூர் போன்றவர்களை அதிர வைக்கும் சரித்திரம்.
2024-ல் பிரதமர் மோடி கூறியதும்,1957-92-ல் நடந்ததும்
இதைக் கூறுவதற்கு முன், நிதிப் பங்கீட்டில் வடக்கு - தெற்குப் பிரிவினை பேசுகிறவர்களுக்கு, பிரதமர் நாடாளுமன்ற இறுதிக் கூட்டத்தில் கூறிய பதிலை இங்கு நினைவு கூர்வது அவசியம். “என் மாநிலத்தில் வசூலாகும் வரி எங்களுக்கே என்பது- எங்கள் மாநிலத்தில் உருவாகும் நதி நீர் எங்களுக்கே, எங்கள் மாநிலத்தில் இருக்கும் கனிமவளம் எங்களுக்கே, எங்கள் மாநிலத்தில் விளையும் உணவு எங்களுக்கே என்பதற்கு சமம். அது தேச ஒற்றுமையைக் குலைக்கும் சிந்தனை” என்று விளக்கினார். அவர் கூறியது எவ்வளவு உண்மை என்பதை அனுபவ பூர்வமாக உணரலாம்.
சுதந்திரத்துக்குப் பின், பின்தங்கிய மாநிலங்களாகக் கருதப்படும் கனிமவளம் மிகுந்த உ.பி., பிஹார், ம.பி., ஜார்கண்ட், சத்திஸ்கர், மேற்கு வங்கத்தின் கனிமவளங்கள், அம்மாநிலங்களின் வளர்ச்சிக்கு மட்டும் பயன்படாமல், தெற்கு - மேற்கு மாநிலங்களுக்கும் பயன்படும்படியான கொள்கைகளை வகுத்தது மத்திய அரசு. 1957 முதல் 1992 வரை 35 ஆண்டுகள் அந்தக் கொள்கை அமலில் இருந்தது. அதன் விளைவாக, வடக்கு - கிழக்கு மாநிலங்களின் வளர்ச்சி குறைந்து, தெற்கு - மேற்கு மாநிலங்கள் ஏராளமாக வளர்ந்து, இன்று அவை வளர்ந்த மாநிலங்களாக இருக்கின்றன.
Freight Equalisation Scheme [FES] என்ற அந்தக் கொள்கை, வடக்கு - கிழக்கு மாநிலங்களின் வளர்ச்சியைத் தடுத்து, எப்படி தெற்கு - மேற்கு மாநிலங்களை வளர்த்தது என்று விளக்கினால், தென்மாநிலங்களைச் சுரண்டி வடமாநிலங்களுக்கு நிதி அளிக்கப்படுகிறது என்று பிதற்றுபவர்களின் கன்னத்தில் அடித்தது போல் இருக்கும். கனிமவளம் மிகுந்த மாநிலங்கள், ஐயோ எங்கள் கனிமவளத்தை வைத்து மற்றவர்கள் வளருகிறார்களே என்று கூச்சலிட்டு, FES கொள்கையைத் தடுத்திருந்தால் இன்று தெற்கு - மேற்கு மாநிலங்கள் வளர்ச்சி பெற்றிருக்காது. தெற்கு - மேற்கு மாநிலங்களை வளரவைத்த FES கொள்கை, வடமாநிலங்களின் வளர்ச்சியை அழித்தது என்றால் அது மிகையாகாது.
வட கிழக்கு மாநிலங்களை அழித்து, தெற்கு-மேற்கு மாநிலங்களை வளர்த்த FES
உ.பி., பிஹார், ம.பி., மேற்கு வங்கம், சத்திஸ்கர், ஜார்கண்ட் மாநிலங்கள்தான் நாட்டிலேயே நிலக்கரி, இரும்பு தாது, டோலோமைட், சுண்ணாம்புக் கல் போன்ற கனிமவளங்கள் ஏராளமாக உள்ள மாநிலங்கள். கனிமவளச் சுரங்கங்களின் அருகில் எஃகுத் தொழிற்சாலை, அனல் மின்உற்பத்தி நிலையங்கள், சிமென்ட் உற்பத்தி தொழில்கள் அமையும். அங்குதான் எஃகு, மின்சாரம், சிமென்ட் உற்பத்திக்குத் தேவையான மூலப் பொருள்கள் அருகிலேயே எளிதாகக் கிடைக்கும். அதனால்தான் மும்பையில் இருந்த டாடா குழுமம் 1907-ல் பிஹாரிலுள்ள ஜாம்ஷெட்பூரில், தனது எஃகு தொழிற்சாலையை அமைத்தது- Indian Iron and Steel Company (IISCO). அரசு நிறுவனமான Steel Authority of India Limited (SAIL) நிறுவனம் உ.பி.யில் பண்டா, சத்திஸ்கரில் பிலாய், ஒடிஸாவில் ரூர்கேலா, மேற்கு வங்கத்தில் துர்காபூர், ஜார்கண்டில் பொகாரோ போன்ற இடங்களில் எஃகு தொழிற்சாலைகளையும், அதற்கான அனல் மின் நிலையங்களையும் அமைத்தன.
இயற்கை வளங்கள் மிகுந்த அந்த மாநிலங்களில் அந்த காலகட்டத்தில் எஃகு, மின்சாரம் சிமென்ட் தொழில்கள் பெருகி, அது சார்ந்த தொழில் மற்றும் வியாபாரங்கள் அபிவிருத்தி அடைந்ததால், 1950, 60-களில் அந்த மாநிலங்கள் பெரும் வளர்ச்சி காணத் தொடங்கின. ஆனால் 1960-களின் பின்பகுதி தொடங்கி, அந்த மாநிலங்களின் வளர்ச்சி திடீரென்று நின்று, அங்கு அமையும் எஃகு, மின்சாரம், சிமென்ட் தொழிற்சாலைகள் தெற்கு - மேற்கு மாநிலங்களுக்குச் சென்றன. அந்த மாநிலங்களிலிருந்து மூலப்பொருள்களை வெளிமாநிலங்களுக்கு நகர்த்த ஆகும் செலவை ஈடுகட்ட, நேரு தலைமையிலான அரசாங்கம் வகுத்த சலுகைக் கொள்கைதான் FES. இதன் கீழ் மூலப் பொருள்கள் கிடைக்காத தூரத்து தெற்கு, மேற்கு மாநிலங்களில் அதை அமைத்தாலும், அகவிலை அதிகமாகாது என்ற நிலை உருவாகியது. எனவே, அந்தப் பகுதிகளில் உற்பத்தி, வளர்ச்சி ஸ்தம்பித்தது.
தெற்கு, மேற்கு மாநிலங்கள் வளர்ந்த ரகசியம்
FES.-ன் நோக்கம் உன்னதமானது. ஒரு மாநிலத்தின் இயற்கைவளம் அந்த மாநிலத்துக்கு மட்டுமல்ல, முழுநாட்டுக்கே சொந்தம். அதை அங்கிருந்து கொண்டு சென்று, கனிமவளம் இல்லாத பகுதிகளும் சீரான வளர்ச்சி காணவேண்டும் என்பதே அதன் நோக்கம். ஆனால், அதன் விளைவு விபரீதமாக இருந்தது. FES முறையால் இயற்கை வளம் உள்ள மாநிலங்களில்தான் தொழில் வளர்ச்சி ஏற்படும் என்பது மாறி, எங்கு வேண்டுமானாலும் கனிம வளத்தை சலுகை விலையில் கொண்டு செல்ல முடிந்தது. அந்தத் தொழில்கள் தெற்கு, மேற்கு, பஞ்சாப் போன்ற வடக்கு மாநிலங்களுக்கும் சென்றன. காரணம், பங்குச் சந்தை, நிதி, கல்வி அதிகம் இருந்த மேற்கு - தெற்கு பகுதியில் தொழிலதிபர்கள் இருப்பது தான். தொழிலதிபரான டாடா, பிஹார் சென்றது போல், FES வந்தபிறகு, தொழிலதிபர்கள் அந்த மாநிலங்களுக்குப் போக வேண்டிய அவசியமே இல்லாமல், அவரவர் மாநிலங்களிலேயே தொழில்களை நிறுவினர்.
இதனால் தொழில், பொருளாதாரம், வரி வருமானம், தனிநபர் வருமானம், அனைத்திலும் தெற்கு - மேற்கு மாநிலங்கள் வளர்ச்சி பெற்றன. கனிம வளம் உள்ள மாநிலங்கள் பின்தங்கின. இதுதான் கடந்த 50 ஆண்டுகளில் தெற்கு - மேற்கு மாநிலங்கள் வளர்ந்த ரகசியம். 1957 முதல் 1992 வரை அமலில் இருந்த இந்தக் கொள்கை, தாராள மயமாக்கல் திட்டத்தின் கீழ் கைவிடப்பட்டது. அதன் பிறகு அங்கிருந்து வெளியேறிய எஃகு, மின்சாரம் முதலான உற்பத்தித் தொழில்கள் மீண்டும் கனிமவள மாநிலங்களுக்கே திரும்ப ஆரம்பித்தன. ஆனால் 1957-லிருந்து 1992 வரை 35 ஆண்டு கால FES கொள்கை காரணமாக அடிவாங்கிய அந்த மாநிலங்களின் பொருளாதாரம் இன்னும் மீளவே இல்லை. அந்த மாநிலங்களின் செலவில்தான் தெற்கு - மேற்கு மாநிலங்கள் வளர்ச்சி பெற்றன என்பதை ஒன்றல்ல, பல ஆய்வுகள் கூறுகின்றன. அதன் விபரத்தை (‘வஞ்சிக்கப்பட்ட வடக்கு, கிழக்கு மாநிலங்கள்’) பெட்டிச் செய்தியில் காணலாம்.
வடக்கு-தெற்கு அரசியல் தவறு, அபத்தம், ஆபத்து
மத்திய-மாநில நிதி ஒதுக்கீடு பிரச்னையை வடக்கு - தெற்கு பிரச்னையாக்கி சசி தரூர் பேசியது தவறு, அதை ஏற்க முடியாது. எந்த மாநிலத்தில் வரி வசூலாகிறதோ, அது அந்த மாநிலத்துக்குச் சொந்தம் என்பது எவ்வளவு தவறானது என்பதை சுலபமாகவே நிரூபித்துவிடலாம். உதாரணமாக, மொத்தம் வசூலாகும் நேர்முக வரி ரூ.16.63 லட்சம் கோடி. மஹாராஷ்டிராவில் ரூ.6.05 லட்சம் கோடி, டெல்லியில் ரூ.2.22 லட்சம் கோடி, கர்நாடகாவில் ரூ.2.08 லட்சம் கோடி, தமிழகத்தில் ரூ.1.07 லட்சம் கோடி. ஆக மொத்தம் 11.42 லட்சம் கோடி (அதாவது 69%), இந்த நான்கு மாநிலங்களில் வசூலாகிறது. இதற்கு அர்த்தம் என்ன? அந்த வருமானம் ஈட்டும் கம்பெனிகள், நபர்கள் அங்கு இருக்கிறார்கள் என்பதே.
அந்த நான்கு மாநிலங்களில் வசூலாகும் அந்த வரியைக் கட்டுபவர்கள், அந்த வருமானத்தை அந்த மாநிலங்களில் லாபம் ஈட்டி மட்டும் கட்டவில்லை. பெரும்பாலோர் நாடு முழுவதும் தொழில் செய்து லாபம் ஈட்டி, தங்கள் மாநிலங்களில் கட்டுகிறார்கள். டெல்லியில் வசூலாகும் ரூ.2.22 லட்சம் கோடி, டெல்லி மாநிலத்தில் மட்டும் ஈட்டப்படும் லாபத்தில் கட்டவில்லை. நாடு முழுவதும் தொழில் செய்து லாபம் ஈட்டுபவர்கள் டெல்லியில் வரி கட்டுவதால், அந்த வரிப்பணம் டெல்லிக்கே சொந்தம் என்பது எவ்வளவு அபத்தம். டெல்லியில் மத்திய அரசு ஊழியர்கள் ஏராளமான பேர் வரி கட்டுகிறார்கள். அந்தப் பணம் டெல்லி மாநிலத்துக்குச் சொந்தமா?
அதுபோல் தமிழகத்தில் சென்னை, மஹாராஷ்டிராவில் மும்பை, கர்நாடகாவில் பெங்களூரு மூன்றிலும்தான் அந்தந்த மாநிலங்களின் முக்கால் பங்கு வரி வசூலாகிறது. அங்கு வரி செலுத்துபவர்கள், அங்கு லாபம் ஈட்டி மட்டுமே வரி கட்டவில்லை. நாடு முழுவதும் தொழில் வியாபாரம் செய்ய உரிமை தரும் அரசியல் சாஸனம், அதன் மூலம் ஈட்டப்படும் லாபத்தில் கட்டிய வரியை அனைத்து மாநிலங்களுக்கும் பங்கீடு செய்கிறது.
எனவே, தமிழகத்தில் வசூலாகும் வரி தமிழகத்துக்கு என்பது தவறு, அபத்தம். அதுபோலத்தான் மறைமுக வரியும். சென்னையிலிருக்கும் கம்பெனி, பிஹாரில் விற்று முதல் செய்து, அங்கு பொருள் வாங்குபவரிடம் வரியை வசூல் செய்து, சென்னையில் ஜி.எஸ்.டி. கட்டும். அந்த வரி தமிழகத்துக்குச் சொந்தம் என்று கூறுவது அபத்தம். எனவே, வரி வசூலாகும் மாநிலத்தை வைத்து அந்த வரி அந்த மாநிலத்துக்குச் சொந்தம் என்ற அடிப்படையில், வடக்கு - தெற்கு அரசியல் செய்வது தவறு, அபத்தம். தவறான அடிப்படையில் வடக்கு - தெற்கு அரசியல் செய்வது ஆபத்து.
அண்ணாமலை பதில்
சசி தரூரின் வாதம், மக்கள் தொகை அதிகமான வட மாநிலங்களே அதிகம் நிதி பெறுகின்றன என்பது. அதற்கு தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை துக்ளக் ஆண்டுவிழாவில் ஆணித்தரமாகப் பதில் அளித்தார். 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை அரசியல் சாஸன விதிகளின்படி நியமிக்கப்படும் நிதி கமிஷன் தான், மத்திய - மாநிலங்களுக்கிடையே வருமானங்களைப் பங்கீடு செய்ய, மாநிலங்களை கலந்தாலோசித்து, தகுதி நிர்ணயம் செய்கிறது. 2021-ல் அமைந்த 15-ஆவது நிதிக் கமிஷன் மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்ய (1) மாநிலங்களுக்குள் தனிநபர் வருமான வித்தியாசம் - 45 புள்ளிகள், (2) நிலப்பரப்பு - 15 புள்ளிகள், (3) மக்கள் தொகை - 15 புள்ளிகள், (4) குடும்பக் கட்டுப்பாடு - 12.5 புள்ளிகள், (5) காடு வளர்ப்பு, சுற்றுச்சூழல் - 10 புள்ளிகள், (6) நிதித்துறை கட்டுப்பாடு - 2.5 புள்ளிகள் - என்று தகுதி அடிப் படைகளை வகுத்தது. இதில் மக்கள் தொகையான 15 புள்ளிகள்தான் முக்கியத்துவம் என்பதைக் குறிப்பிட்டு, 1970-களில் இந்திரா ஆட்சியில், காட்கில் தலைமையில் நிதிக் கமிஷன் வகுத்த தகுதிகளின்படி நிதிப் பங்கீட்டில் மக்கள் தொகைக்கு 50% முக்கியத்துவம் கொடுக்கப்பட்டதைச் சுட்டிக்காட்டி, அது 2021-ல் 15% ஆகியிருக்கிறது என்று கூறினார் அண்ணாமலை.
கூடுதல் மக்கள் தொகையை வைத்து வட மாநிலங்களுக்கு, காங்கிரஸ் ஆட்சி காலத்தில் அதிக நிதி ஒதுக்கப்பட்ட நிலை இப்போது இல்லை. மக்கள் தொகைக்கு அளிக்கப்படும் 15 புள்ளிகளால் வடமாநிலங்களுக்குச் சாதகமான நிலை என்றால், குடும்பக் கட்டுப்பாட்டுக்கு கொடுக்கப்படும் 12.5 புள்ளிகள் தென் மாநிலங்களுக்கு அதை ஈடுகட்டுகிறது என்றும் கூறினார் அண்ணாமலை.
மேலும் சில மாநிலங்களுக்குக் கூடுதல், சில மாநிலங்களுக்குக் குறைவு என்பது எவ்வளவு அபத்தம் என்பதையும் அண்ணாமலை சுட்டிக் காட்டினார். தமிழகத்தின் 6 மேற்கு மாவட்டங்கள் 54% வருமானம் ஈட்டுகின்றன. அதிலிருந்து பெறும் நிதியைத்தான் வளராத மாவட்டங்களுக்குத் தமிழக அரசு செலவிடுகிறது. இல்லையென்றால் தமிழக வளர்ச்சி எப்படி சீராகும் என்று கேட்டார் அண்ணாமலை. இதுபோலவே நாட்டில் பஞ்சாப், உ.பி., உத்தராகண்ட், ராஜஸ்தான், மேற்கு வங்கம், வடகிழக்கு போன்ற மாநிலங்கள் எல்லை மாநிலங்கள். அதற்கு தனி கவனம், ஒதுக்கீடு தேவை. அதுபோல் தனது கனிமவளங்களை தெற்கு - மேற்கு மாநிலங்களுக்கு சலுகையில் தந்து, அம்மாநிலங்கள் வளர்ந்து, தங்கள் வளர்ச்சியை இழந்து பின்தங்கிய உ.பி., பிஹார், ஜார்கண்ட், சத்திஸ்கர், மேற்கு வங்கம், ம.பி. போன்ற மாநிலங்களுக்கு அதிகம் ஒதுக்கீடு தேவை என்பதையும் மறுக்க முடியாது.
இதிலிருந்து என்ன தெரிகிறது? நிதி ஒதுக்கீடு சம்பந்தமாக அபத்தமாகப் பேசுகிறவர்கள் அரைகுறை விபரங்களை வைத்து பேசி, வடக்கு - தெற்கு அரசியல் செய்கிறார்கள். முழு ஆதாரங்களுடன் நாம் கூறிய விளக்கத்துக்கு அவர்கள் பதில் கூறவேண்டும். இல்லையேல், தங்கள் ஆபத்தான அரசியலை அவர்கள் நிறுத்த வேண்டும்.
வஞ்சிக்கப்பட்ட வடக்கு, கிழக்கு மாநிலங்கள்
எப்படி இயற்கை வளம் மிக்க ஆஃபிரிக்க நாடுகள் தங்கள் கனிமவளத்தை கச்சா பொருள்களாக விற்று, தங்கள் வளர்ச்சியை இழந்து வஞ்சிக்கப்பட்டனவோ, அதுபோல் கனிமவளம் மிக்க வடக்கு, கிழக்கு இந்தியா FES கொள்கையால் வளர்ச்சியை இழந்தது என்று கூறினார் ஸ்டுவர்ட் கார்ப்ரிட்ஜ் என்ற பிரிட்டிஷ் நிபுணர். FES கொள்கையால், குறைவான விலையில் வடக்கு- கிழக்கு இந்தியாவிலிருந்து சலுகை விலையில் மூலப்பொருள்களை மலிவாக வாங்கி, குஜராத், மஹாராஷ்டிரா, தென்னிந்தியா, பஞ்சாப் மாநிலங்கள் சிமென்ட் உற்பத்தியைப் பெருக்கின. இதனால் மேற்கு வங்கம், பிஹார், ஜார்கண்ட், ம.பி., சத்திஸ்கர், உ.பி., ஒடிஸா மாநிலங்கள் தங்களுக்கு இருந்த இயற்கை வள ஆதாயங்களை இழந்து நொடிந்து, தொழில் வளர்ச்சியில் பின்னடைந்தன.
1992-ல் FES கொள்கை ரத்து ஆனபிறகு கூட அந்த மாநிலங்கள், வளர்ந்த மாநிலங்களை எட்ட முடியவில்லை. FES கொள்கையைக் கைவிட்ட பிறகும், அதனால் கனிமவள மாநிலங்களுக்கு இழைத்த அநீதியை ஈடுகட்ட முடியவில்லை என்று 1996-ல் மேற்கு வங்க தொழில் துறை வணிக அமைச்சர் கூறினார்.
Freight Equalisation Policy என்ற தலைப்பில் விக்கிபீடியா கட்டுரையில், மேலே கூறியதற்கு ஆதாரங்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றன (1)). மேலும் ஜான் ஃபிர்த் என்ற பிரெஞ்சு நாட்டு நிபுணரும், எர்னஸ்ட் லியு என்ற அமெரிக்க நிபுணரும் சேர்ந்து செய்த Manufacturing under development. India's Freight Equalisation Scheme என்ற ஆய்வில் FES கொள்கை வடக்கு, கிழக்கு இந்தியாவில் உற்பத்தியை குறைத்து, 50 ஆண்டுகளில் தெற்கு - மேற்கு இந்தியாவின் வளர்ச்சியை ஊக்குவித்தது என்று கூறினர் (2).