
இந்த நாட்டின் புனிதமான சொத்து பசு. தாய், கடவுளுக்கு மாற்றானது பசு. அதைக் கொல்பவர்களை ஜாமீனில் வெளிவரமுடியாத குற்றம் செய்தவர்களாக மாற்ற சட்டத் திருத்தம் கொண்டுவாருங்கள் என்று தெலங்கானா, ஆந்திர மாநிலத்துக்கு ஐதராபாத் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நல்கொண்டாவைச் சேர்ந்த மாடு வியாபாரி ராமாவத் ஹனுமா என்பவர், பக்ரீத் பண்டிகையின் போது இறைச்சிக்காக விற்பனை செய்ய விவசாயிகளிடம் இருந்து 63 பசுக்களையும், 2 எருதுகளையும் வாங்கி லாரியில் கொண்டு வந்தார். அப்போது காஞ்சினப்பள்ளி அருகே வந்தபோது போலீசார் அந்த லாரியைமடக்கிப் பிடித்து, பசுவதை, பாதுகாப்பு சட்டத்தின் கீழ் பசுக்களை பறிமுதல் செய்தனர். மேலும், உள்ளூர் நீதிமன்றத்தின் உத்தரவுப்படி அந்த பசுக்களையும், எருதுகளையும் அருகில் உள்ள கோசாலை மடத்தில் சேர்க்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதைத் எதிர்த்து ராமாவத் ஹனுமா ஐதராபாத் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து இருந்தார். இந்த வழக்கின் விசாரணை முடிந்து வெள்ளிக்கிழமை(நேற்று) நீதிபதி பி.சிவ சங்கர ராவ் தீர்ப்பளித்தார். அந்த தீர்ப்பில் கூறியிருப்பதாவது-
ஆரோக்கியமாக, நன்றாக பால்தரும் நிலையில் இருக்கும் பசுக்களை கொல்வதற்கு முஸ்லிம்களுக்கு எந்தவிதமான அடிப்படை உரிமையும் இல்லை என்று உச்ச நீதிமன்றமே தெரிவித்துள்ளது.
இந்த பாரத நாட்டில் பெரும்பாலான மக்களுக்கு பசு தான் தாயாகவும், கடவுளாகவும் இருந்து வருகிறது. இந்த நாட்டில் பசு என்பது புனிதமான சொத்து. கொல்லப்பட வேண்டிய மிருகம் இல்லை. இதை யாரும் கொல்வதற்கோ, இறைச்சிக்காக விற்பனை செய்வதற்கோ உரிமை இல்லை.
ஆந்திரா, தெலங்கானாவில் உள்ள கால்நடை மருத்துவர்கள் பால்தரும் நிலையில் உள்ள, ஆரோக்கியமான பசுக்களைக்கூட நோய்வாய்பட்டது என்று பொய்யான சான்றிதழ் அளித்து அதை வதைக்கூடத்துக்கு அனுப்புகிறார்கள்.
முகலாய வம்சத்தின் மன்னர் பாபர், தனது மகன் ஹூமாயுனிடம் இறக்கும் தருவாயில், ஒன்றைக் கூறினார், இந்த நாட்டில் பசுக்கள் என்பது இந்துக்களின் புனிதமாக இருக்கிறது,ஆதலால், இதை வதை செய்யாதீர்கள் என்று கூயிருந்தார். அதைப்பின்பற்றியே ஹூமாயுன், அக்பர், ஜகாங்கீர், அகமது ஷா ஆகியோர் பசுக்களை கொல்லக்கூடாது என்று சட்டம் விதித்துஇருந்தனர்.
பசுக்களை கொல்பவர்கள், அது ஆரோக்கியமற்றது என்று பொய் சான்றிதழ் அளிப்பவர்கள் ஆகியோரை ஜாமினில் வெளிவராத குற்றம் செய்ததாக கருத வேண்டும். இதற்கு தெலங்கானா, ஆந்திர அரசுகள் ஐ.பி.சி. 429-பிரிவில் சட்டத்திருத்தம் கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும். விசாரணை நீதிமன்றத்தின் உத்தரவில் தலையிடவில்லை என்பதால், இந்த மனுவை தள்ளுபடி செய்கிறேன்.இவ்வாறு அவர் தீர்ப்பளித்தார்.