இந்தியாவின் தடுப்பூசிகளுக்கு அங்கீகாரம்… கோவேக்சின், கோவிஷீல்டுக்கு 110 நாடுகள் ஒப்புதல்!!

By Narendran SFirst Published Nov 20, 2021, 10:37 AM IST
Highlights

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கோவாக்சின், கோவிஷீல்டு தடுப்பூசிகளுக்கு 110 நாடுகள் ஒப்புதல் அளித்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

கொரோனா என்னும் கொடிய வைரஸ் உலகம் முழுவதும் பரவி பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு தடுப்பூசி ஒன்றே தீர்வு என்னும் நிலையில் பல்வேறு நாடுகள் தடுப்பூசிகளை உருவாக்கியுள்ளது. அந்த தடுப்பூசிகளுக்கு உலக சுகாதார மையம் அவசர அனுமதி அளித்து வருகிறது. அந்த வகையில் மாடர்னா, கோவிஷீல்ட், ஃபைசர் தொடங்கி உலகம் முழுக்க பல்வேறு வேக்சின்களுக்கு உலக சுகாதார மையம் அனுமதி அளித்துள்ளது. இந்த நிலையில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கோவாக்சினுக்கு அனுமதி அளிப்பதில் தாமதம் ஏற்பட்டு வந்தது. ஹைதராபாத்தை சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனம் மூலம் கோவாக்சின் தயாரிக்கப்பட்டு உலக சுகாதார மையத்தின் அவசர அனுமதிக்கு விண்ணப்பிக்கப்பட்டது. கடந்த மார்ச் மாதத்தில் அவசர அனுமதிக்காக பாரத் பயோடெக் நிறுவனம் விண்ணப்பித்தது. ஆனால் உலக சுகாதார மையம் கடந்த 8 மாதங்களாக கோவாக்சினுக்கு அனுமதி அளிக்காமல் காலம் தாழ்த்தி வந்த நிலையில் கோவாக்சின் குறித்த தகவல்கள் போதிய அளவில் இல்லை எனவும் கூடுதல் தரவுகளை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் உலக சுகாதார நிறுவனம் தெரிவித்தது. இதையடுத்து இன்று கோவாக்சினுக்கு அனுமதி தருவது தொடர்பாக நடைபெற்ற ஐந்தாவது ஆலோசனையில், உலக சுகாதார மையம் கோவாக்சின் தடுப்பூசிக்கு அவசர அனுமதி அளித்தது.

இந்த நிலையில் இந்தியாவின் தடுப்பூசிகளான கோவேக்சின் மற்றும் கோவிஷீல்ட் ஆகிய இரண்டு தடுப்பூசிகளுக்கும் 110 நாடுகள் அங்கீகாரம் அளித்துள்ளதாக ஒன்றிய சுகாதார துறை தெரிவித்துள்ளது. இந்தியாவின் உள்நாட்டு தயாரிப்பான பாரத் பயோடெக் தயாரித்த கோவாக்சின் தடுப்பூசி மற்றும் சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா தயாரித்த கோவிஷீல்டு தடுப்பூசிகள் மக்களுக்கு போடப்பட்டு வருகிறது. இன்றுவரை நாடு முழுவதும் 115 கோடிக்கும் அதிகமான கொரோனா தடுப்பூசிகள் மக்களுக்கு போடப்பட்டுள்ளன. கிட்டத்தட்ட 76.19 கோடி பேருக்கு முதல் டோஸும், 39.08 கோடி பேருக்கு இரண்டாம் டோஸும் போடப்பட்டுள்ளது. மேற்கண்ட தடுப்பூசிகளை உள்நாட்டு தேவைக்கு மட்டுமின்றி வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டுகிறுது. அந்த நாடுகளின் மருத்துவ குழுக்கள் அனுமதி அளித்த பின்னர், இந்தியாவில் இருந்து அனுப்பி வைக்கப்படுகிறது. அந்த வகையில் கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு ஆகிய இரு தடுப்பூசிகளையும் உலகம் முழுவதும் 110 நாடுகள் அங்கீகரித்துள்ளன.

இதுகுறித்து ஒன்றிய சுகாதார துறை அதிகாரிகள் கூறுகையில், இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கோவாக்சின், கோவிஷீல்டு தடுப்பூசிகளுக்கு 110 நாடுகள் ஒப்புதல் அளித்துள்ளன. மற்ற நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. உலகளவில் பல நாடுகள் இந்தியாவுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தின்படி மேற்கண்ட இரு தடுப்பூசிகளை போட்டுக் கொண்டதற்கான சான்றிதழை காட்டினால், சம்பந்தப்பட்ட நாடுகளுக்கு எளிதில் சென்று வர முடியும் என்று தெரிவித்துள்ளது. இந்தியாவிலிருந்து வருவோர் முழுமையாகத் தடுப்பூசி செலுத்தியிருந்தால், அல்லது உலக சுகாதார அமைப்பால் அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசி செலுத்தியிருந்தால் அவர்களைத் தங்கள் நாட்டுக்குள் விமான நிலையத்தை விட்டு வெளியேறவும் சில நாடுகள் அனுமதிக்கின்றன. வீடுகளில் தனிமைப்படுத்திக் கொள்ளத் தேவையில்லை எனவும் தெரிவித்துள்ளன. அதேநேரம் தங்கள் நாட்டுக்குள் வந்தபின் அடுத்த 14 நாட்களுக்கு தங்கள் உடல்நிலையைத் தாங்களே கண்காணித்துக் கொள்ளவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

click me!