
நீதிமன்ற நடவடிக்கைகளை நேரடி ஒளிபரப்பு செய்ய வேண்டும் என கோரி மூத்த வழக்கறிஞர்கள் இருவர், உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.
நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டமன்றங்களின் நடவடிக்கைகளும் செயல்பாடுகளும் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது. அதேபோன்று நீதித்துறை செயல்பாடுகளும் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாக இருந்துவருகிறது.
நீதிமன்றங்களுக்கு சென்றவர்களைத் தவிர மற்றவர்களுக்கு நீதிமன்ற நடவடிக்கைகள், செயல்பாடுகள், விவாதங்கள் எவ்வாறு நடைபெறும், என்ன கருத்துகள் தெரிவிக்கப்பட்டன என்பன எல்லாம் தெரியாது. ஊடகங்களின் வாயிலாகத்தான், பொதுநலன் சார்ந்த வழக்குகளின் தீர்ப்பை மக்கள் அறிந்துகொள்ள முடிகிறது.
எனவே நீதித்துறை செயல்பாடுகளையும் நேரடி ஒளிபரப்பு செய்ய வேண்டும் என்ற குரல்கள் எழுந்தன. இதுதொடர்பாக கடந்த 2015ம் ஆண்டு தொடரப்பட்ட பொதுநல வழக்குகளை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
உச்சநீதிமன்றத்தில் நிர்வாகம் சரியில்லை, ஜனநாயகம் இல்லை. வழக்குகளை ஒதுக்குவதில் பாரபட்சம் காட்டப்படுகிறது என தலைமை நீதிபதிக்கு எதிராக 4 அதிருப்தி நீதிபதிகள், போர்க்கொடி தூக்கி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர். இந்நிலையில், மூத்த வழக்கறிஞர்கள் இருவர், நீதிமன்ற செயல்பாடுகளை நேரடி ஒளிபரப்பு செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.
மேத்யூவ் நெதும்பரா என்ற வழக்கறிஞர் தாக்கல் செய்துள்ள மனுவில், அடிப்படை கொள்கைகளின்படியே நீதித்துறை செயல்பட்டு வருகிறது. அதனால் நீதிமன்ற செயல்பாடுகளும் வெளிப்படையாக இருக்க வேண்டும். மக்கள் யார் விரும்பினாலும் நீதிமன்றத்திற்கு வந்து வழக்கு விசாரணைகளை பார்க்க உரிமை வழங்கப்பட வேண்டும். நீதிமன்றத்தில் என்ன நடக்கிறது என்பதை தெரிந்துகொள்ளும் உரிமை மக்களுக்கு உண்டும். எனவே நீதிமன்ற செயல்பாடுகளை நேரடி ஒளிபரப்பு செய்ய வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
மற்றொரு வழக்கறிஞர் ஜெய்சிங் தாக்கல் செய்துள்ள மனுவில், உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புகள் ஒவ்வொரு இந்திய குடிமகனையும் பாதிக்கிறது. அதனால் எதன் அடிப்படையில் முடிவுகள் எடுக்கப்படுகின்றன என்பதையும் நீதிமன்ற செயல்பாடுகளையும் அறிந்துகொள்ளும் உரிமை ஒவ்வொரு குடிமகனுக்கும் உண்டு. எனவே நீதிமன்ற செயல்பாடுகளை நேரடி ஒளிபரப்பு செய்ய வேண்டும் என கோரியுள்ளார்.
இந்த பொதுநல மனுக்கள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா முன்னிலையில் விரைவில் விசாரிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.