கொரோனாவுக்கு பயந்து தற்கொலை செய்தவர்களுக்கு நிவாரணம் எவ்வளவு..? உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு உறுதி….!

By manimegalai aFirst Published Sep 23, 2021, 7:49 PM IST
Highlights

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு தற்கொலை செய்துகொண்டவர்கள் குடும்பத்தினருக்கும் நிவாரணம் வழங்கப்படும் என்று மத்திய அரசு உறுதியளித்துள்ளது.

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு தற்கொலை செய்துகொண்டவர்கள் குடும்பத்தினருக்கும் நிவாரணம் வழங்கப்படும் என்று மத்திய அரசு உறுதியளித்துள்ளது.

நாட்டையே சீர்குலைத்த கொரோனா வைரஸால் ஏற்பட்ட மரணங்களுக்கு இழப்பீடு வழங்க மத்திய, மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் ஏற்கெனவே அறிவுறுத்தியுள்ளது. இதனிடையே, கொரோனாவால் ஏற்பட்ட பல உயிரிழப்புகள் கொரோனா மரணங்களாக கருதப்படவில்லை. இதனால் பெரும்பாலான குடும்பங்களுக்கு நிவாரணம் கிடைக்காமல் போவதை தடுக்க புதிய வழிமுறைகளை வெளியிடுமாறு மத்திய அரசுக்கு உத்தரவிடக்கோரி உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, கொரோனா பாதிப்பு ஏற்பட்டு 30 நாட்களுக்குள் ஏற்படும் உயிரிழப்புகள்  மட்டுமே கொரோனா மரணமாக கருதப்படும். 30 நாட்களுக்கு மேல் கொரோனாவிற்காக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும்போது உயிரிழந்தவர்களுக்கு நிபந்தனைகள் அடிப்படையில் "கொரோனா மரணம்" பட்டியலில் சேர்க்கப்படுவர். ஆனால் கொரோன பாதிப்பு ஏற்பட்டு விபத்து மற்றும் தற்கொலை செய்து இறப்பவர்களின் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்க முடியாது என மத்திய அரசு  கூறியிருந்தது. ஆனால் கொரோனாவால் ஏற்படும் மன உளைச்சலே நோயாளிகளை தற்கொலைக்கு தூண்டுவதாக தெரிவித்த நீதிபதிகள், அதற்கும் இழப்பீடு வழங்குவது குறித்து மறுபரிசீலனை செய்ய மத்திய அரசுக்கு உத்தரவிட்டனர்.

இந்தநிலையில் மத்திய அரசு நேற்றைய தினம் உச்சநீதிமன்றத்தில் பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்துள்ளது. அதில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு  50,000 ரூபாய் நிவாரணமாக மாநில பேரிடர் நிதியிலிருந்து வழங்கப்படும். கொரோனா பாதிப்பு ஏற்பட்டு 30 நாட்களுக்குள் தற்கொலை செய்துகொண்டவர்களின் குடும்பத்திற்கும் இந்த நிவாரணம் வழங்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

click me!