ஒரே நாளில் 1,553 பேருக்கு பாதிப்பு..! இந்தியாவில் எகிறும் கொடூர கொரோனா..!

By Manikandan S R SFirst Published Apr 20, 2020, 9:59 AM IST
Highlights

இந்தியாவில் அதிகபட்சமாக மகாராஸ்டிராவில் கொரோனா பாதிப்பு 4 ஆயிரத்தை கடந்துள்ளது. அங்கு இதுவரை 4,203 பேர் பாதிக்கப்பட்டு 223 பேர் உயிரிழந்துள்ளனர். சிகிச்சையில் இருப்பவர்களில் 507 பேர் நலமடைந்து வீடு திரும்பி இருக்கின்றனர். 

உலக அளவில் பெரும் நாசங்களை விளைவித்து வரும் கொடிய கொரோனா வைரஸ் நோய் இந்தியாவிலும் அசுர வேகம் எடுத்து இருக்கிறது. தினமும் 500 நபர்களுக்கு மிகாமல் கொரோனா பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டு வரும் நிலையில் பலியானவர்களின் எண்ணிக்கையும் கணிசமான அளவில் உயர்ந்து வருகிறது. இன்றைய நிலவரப்படி இந்தியாவில் 17,265 மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பதாக சுகாதாரத்துறை அமைச்சகம் தற்போது அறிவித்திருக்கிறது. அவர்கள் தனிமை சிகிச்சையில் வைக்கப்பட்டிருக்கும் நிலையில் கொரோனா நோய்க்கு தாக்கு பிடிக்க முடியாமல் 543 பேர் பலியாகி இருக்கின்றனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 1,553 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிபடுத்தப்பட்டு 36 பேர் பலியாகி உள்ளனர்.

இந்தியாவில் அதிகபட்சமாக மகாராஸ்டிராவில் கொரோனா பாதிப்பு 4 ஆயிரத்தை கடந்துள்ளது. அங்கு இதுவரை 4,203 பேர் பாதிக்கப்பட்டு 223 பேர் உயிரிழந்துள்ளனர். சிகிச்சையில் இருப்பவர்களில் 507 பேர் நலமடைந்து வீடு திரும்பி இருக்கின்றனர். அதற்கடுத்தபடியாக டெல்லியில் 2,003 பேரும், குஜராத்தில் 1,743 பேரும், தமிழ்நாட்டில் 1,477 பேரும், ராஜஸ்தானில் 1,478 பேரும் கொரோனாவால் பாதிப்படைந்துள்ளனர். பிற மாநிலங்களிலும் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஆறுதல் தரும் செய்தியாக கொரோனாவிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. நாடுமுழுவதும் கொரோனாவில் இருந்து 2,547 மக்கள் பூரண நலம் பெற்று தங்கள் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். நேற்று மட்டும் 316 மக்கள் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

கொரோனா பாதிப்புகள் இந்தியாவில் தொடர்ந்து அதிகரித்து வருவதால் மக்கள் கடும் அச்சத்தில் உள்ளனர். கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் மத்திய, மாநில அரசுகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. பிற நாடுகளுடன் ஒப்பிடுகையில் கொரோனா பாதிப்பு இந்தியாவில் கட்டுக்குள் வைக்கப்பட்டுள்ளதாகவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு நடவடிக்கையால் நாட்டில் சமூக பரவல் ஏற்படவில்லை எனவும் வல்லுநர்கள் கருத்துகள் தெரிவிக்கின்றனர். நாளுக்கு நாள் உயர்ந்து வரும் கொரோனா வைரஸின் பாதிப்பை கட்டுப்படுத்த நாடு முழுவதும் அமலில் இருந்த 21 நாட்கள் ஊரடங்கு மேலும் 19 நாட்களுக்கு நீட்டிக்கப்படுவதாக பிரதமர் அறிவித்தார். அதன்படி வருகிற மே3ம் தேதி வரையில் தேசிய ஊரடங்கு அமலில் இருக்கும் என மத்திய அரசு அறிவித்திருக்கிறது. இதனிடையே பாதிப்பு குறைவாக இருக்கும் பகுதிகளில் இன்று முதல் ஊரடங்கு நடைமுறைகளில் தளர்வுகள் மேற்கொள்ளப்பட இருப்பது குறிப்பிடத்தக்கது.

click me!