
காளஹஸ்தி கோவில் அர்ச்சகர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது செய்யப்பட்ட சம்பவம் பக்தர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா ஊரடங்கையொட்டி காளஹஸ்தி சிவன் கோவிலில் கடந்த மார்ச் 20-ம் தேதி முதல் சாமி தரிசனம் செய்வதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. தற்போது 5ம் கட்ட ஊரடங்கு அமலில் இருந்தாலும் மத்திய அரசு பல்வேறு தளர்வுகளை செய்துள்ளது. தற்போது ஊரடங்கில் தளர்வு அளித்ததால் இன்று முதல் சோதனை முறையில் கோவில் அதிகாரிகள், ஊழியர்கள் மற்றும் அர்ச்சகர்கள் சாமி தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன் கோவிலில் பணிபுரியும் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் 71 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதன் முடிவுகள் நேற்று மாலை வெளியானது. இதில் கோவில் அர்ச்சகர் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது. இதனால் இன்று முதல் சாமி தரிசனம் செய்ய பக்தர்களை அனுமதிக்க இருந்த முடிவை தற்காலிகமாக நிறுத்தி வைத்ததாக நிர்வாக அதிகாரிகள் தெரிவித்தனர்.