“மீண்டும் எழுவோம்” ஆவணப்படம்..! லாக்டவுன் இந்தியாவை அருமையாக காட்சிப்படுத்திய இயக்குநர் பரத் பாலா.. வீடியோ

By karthikeyan VFirst Published Jun 10, 2020, 12:32 PM IST
Highlights

ஊரடங்கு காலத்தில் இந்தியா எப்படி ஸ்தம்பித்தது என்பதை இயக்குநர் பரத் பாலா, மீண்டும் எழுவோம் என்ற பெயரில் வீடியோவாக உருவாக்கியுள்ளார். 
 

கொரோனாவால் உலகமே இதற்கு முன் எதிர்கொள்ளாத அளவிற்கு ஒரு அசாதாரண சூழலை எதிர்கொண்டுள்ளது. அதற்கு இந்தியாவும் விதிவிலக்கல்ல. கொரோனா அச்சுறுத்தலால் நாடு முழுவதும் மார்ச் 25ம் தேதியிலிருந்து மே 31ம் தேதி வரை லாக்டவுன் அமலில் இருந்தது. 

ஒட்டுமொத்த தேசமும் லாக்டவுனால் ஸ்தம்பித்தது. இது வரலாற்று சம்பவம். நாடு முழுவதும் எப்போதுமே கூட்டநெரிசலுடன் காணப்படும் கடைவீதிகள் எல்லாம் லாக்டவுனில் காற்று வாங்கின. காற்று மாசும், ஒலி மாசும் இல்லாத சுற்றுச்சூழல், வாகனங்கள் இல்லாத சாலைகள், மக்கள் கூட்டம் இல்லாத ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள், விமான நிலையங்கள் என ஒட்டுமொத்த தேசமும் லாக்டவுனில் ஸ்தம்பித்தது. 

இந்தியா ஸ்தம்பித்த, இந்த வரலாற்று தருணத்தை எதிர்கால சந்ததியினர் பார்த்து தெரிந்துகொள்ளும் விதமாக, லாக்டனில் இந்தியா எப்படி இருந்ததை இயக்குநர் பரத் பாலா புதிய கோணத்தில் காட்சிப்படுத்தி ஆவணப்படுத்தியுள்ளார். தனுஷை வைத்து மரியான் திரைப்படத்தை இயக்கியவர் பரத் பாலா. 

ஒவ்வொரு முறையும் இந்தியாவை எல்லா தலைமுறையினருக்காகவும் புதிய கோணத்தில் காட்சிப்படுத்தியவர் இயக்குநர் பரத் பாலா. இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானுடன் இணைந்து ”வந்தே மாதரம்”, “ஜன கண மன” மற்றும் காமன்வெல்த் விளையாட்டுகளுக்கான ஆவணப்படம் ஆகியவற்றை உருவாக்கியுள்ளார்.

இந்நிலையில், இந்தியாவில் 130 கோடி மக்களும் லாக்டவுனில் முடங்கிய நிலையில், இந்தியா லாக்டவுனில் எப்படி இருந்தது என்பதை இயக்குநர் பரத் பாலா காட்சிப்படுத்தி, “மீண்டும் எழுவோம்” என்ற பெயரில் ஆவணப்படுத்தியுள்ளார். 117 பேரை 15 குழுக்களாக பிரித்து, நாடு முழுவதும் 14 மாநிலங்களில் பல்லாயிரம் கிலோமீட்டர்கள் பயணித்து காட்சிப்படுத்தியுள்ளனர். 

தமிழ்நாடு, கர்நாடகா, மகாராஷ்டிரா, டெல்லி, கேரளா, அசாம், உத்தர பிரதேசம், உத்தரகண்ட், ஜம்மு காஷ்மீர், குஜராத் உள்ளிட்ட 14 மாநிலங்களில் லாக்டவுனை வித்தியாசமான மற்றும் ரசிக்கும்படியான கோணங்களில் அருமையாக படம்பிடித்துள்ளனர். பரத் பாலாவுடன் வாட்ஸ் அப் வீடியோ கால் மற்றும் ஜூம் காலில் தொடர்புகொண்டு காட்சிப்படுத்தியுள்ளனர். 

ஒட்டுமொத்த இந்தியாவும் அமைதியாக இருக்கும் அரிய நிகழ்வை தொழில்நுட்ப வளர்ச்சி உதவியுடன், கேமராக்களை வைத்து ஜாலம் செய்து காட்சிப்படுத்தியுள்ளனர். ”மீண்டும் எழுவோம்” என்ற ஆவண வீடியோ, வரலாற்று நிகழ்வான லாக்டவுனை எதிர்கால சந்ததியினர் பார்த்து தெரிந்துகொள்ள உதவும். 

மத்திய, மாநில அரசுகளின் உதவியுடனும், மக்களின் தன்னம்பிக்கையுடனும் இந்தியா கண்டிப்பாக மீண்டு எழும்.

click me!