10ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து.. அனைத்து மாணவர்களும் ஆல் பாஸ்..! தெலுங்கானா அமைச்சரவை கூட்டத்தில் முடிவு

By karthikeyan VFirst Published Jun 8, 2020, 6:13 PM IST
Highlights

தெலுங்கானாவில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்தாமல் அனைத்து மாணவர்களையும் ஆல் பாஸ் செய்வது என அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. 
 

கொரோனா அச்சுறுத்தலால் தமிழ்நாடு, தெலுங்கானா உள்ளிட்ட பல மாநிலங்களில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வை திட்டமிட்டபடி நடத்த முடியவில்லை. நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் இருந்ததால் 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டிருந்தன. 

நான்கு கட்ட ஊரடங்கு முடிந்த நிலையிலும், இந்தியாவில் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வரவில்லை. அதனால் ஜூன் ஒன்றாம் தேதி முதல் ஏராளமான தளர்வுகளுடன் கூடிய பொதுமுடக்கம் அமலில் உள்ளது. 

பள்ளி, கல்லூரிகள் ஆக்ஸ்ட் மாதத்திற்கு பிறகுதான் திறக்கப்படும் என மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் தெளிவுபடுத்திவிட்டார். ஆனால் 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகளை நடத்துவதுதான் சிக்கலாக உள்ளது. 

தமிழ்நாட்டில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ஏற்கனவே இரண்டு முறை ஒத்திவைக்கப்பட்டுவிட்ட நிலையில், ஜூன் 15ம் தேதி தொடங்குவதாக இருந்தது. ஆனால் ஆசிரியர் சங்கம் சார்பில், 10ம் வகுப்பு பொதுத்தேர்வை தள்ளிவைக்க வேண்டும் எனக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் நலன் கருதி பொதுத்தேர்வை ஒத்திவைப்பது குறித்து முடிவெடுக்குமாறு அறிவுறுத்தி, அதுகுறித்த விளக்கமான அறிக்கையை தாக்கல் செய்யுமாறு தமிழக அரசுக்கு உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை வரும் 11ம் தேதி ஒத்திவைத்துள்ளது. 

தமிழ்நாடு அரசு, 10ம் வகுப்பு பொதுத்தேர்வை நடத்தியே தீர வேண்டும் என்ற முனைப்பில் உள்ள அதேவேளையில், தெலுங்கானா மாநிலத்தில், 10ம் வகுப்பு பொதுத்தேர்வை நடத்தாமலேயே அனைத்து மாணவர்களையும் ஆல் பாஸ் செய்ய அம்மாநிலத்தின் அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. 

தமிழ்நாட்டில் 31667 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் தெலுங்கானாவில் 3,650 பேர் மட்டுமே கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டை விட பன்மடங்கு கொரோனா பாதிப்பு குறைவாகவுள்ள தெலுங்கானாவிலேயே 10ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. ஆனால் தமிழ்நாட்டில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வை ஒத்திவைக்கக்கூட தமிழக அரசு முன்வர தயங்குகிறது. 

தமிழ்நாட்டிலும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்திவருவது குறிப்பிடத்தக்கது.

click me!