கூட்டணிக்கு கூவிகூவி அழைக்கும் முதல்வர்... கண்டுகொள்ளாத காங்கிரஸ்..!

By Asianet TamilFirst Published Feb 15, 2019, 5:33 PM IST
Highlights

டெல்லியில் கூட்டணி அமைக்க காங்கிரஸ் கட்சி முன்வர வேண்டும் என்று ஆம் ஆத்மி கட்சி நிறுவனரும் டெல்லி முதல்வருமான அர்விந்த் கெஜ்ரிவால் அழைப்பு விடுத்துள்ளார்.

டெல்லியில் கூட்டணி அமைக்க காங்கிரஸ் கட்சி முன்வர வேண்டும் என்று ஆம் ஆத்மி கட்சி நிறுவனரும் டெல்லி முதல்வருமான அர்விந்த் கெஜ்ரிவால் அழைப்பு விடுத்துள்ளார். 

பாஜகவுக்கு எதிராக காங்கிரஸ் தலைமையில் மெகா கூட்டணி அமைக்கும் முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. ஆனால், உத்தரப்பிரதேசத்தில் பகுஜன் சமாஜ் கட்சியும் - சமாஜ்வாடியும் கூட்டணி அமைத்து காங்கிரஸை கழற்றிவிட்டுவிட்டன. மேற்கு வங்காளத்தில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியுடன் காங்கிரஸ் கூட்டணி அமைக்க தொடக்கத்தில் ஆர்வம் காட்டியது. ஆனால், மம்தாவுடன் கூட்டணி சேர மேற்கு வங்க காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இதனால், சிபிஎம்-வுடன் காங்கிரஸ் கூட்டணி அமைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

இதேபோல டெல்லியில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைக்க ஆம் ஆத்மி தலைவர் கெஜ்ரிவால் ஆர்வம் காட்டிவந்தார். ஆனால், டெல்லி பிரதேச காங்கிரஸார் எதிர்ப்பு தெரிவித்தது மட்டுமல்லாமல், ஆம் ஆத்மியுடன் கூட்டணி இல்லை என்றும் அறிவித்துவிட்டார்கள். அதேவேளையில் மெகா கூட்டணி தொடர்பான கூட்டணி, பேரணி, ஆலோசனைக் கூட்டங்களில் எல்லாம் ராகுல் காந்தியுடன் கெஜ்ரிவாலும் பங்கேற்று வருகிறார்.

 

நாடாளுமன்றத் தேர்தலில் டெல்லியில் பாஜக வெற்றி பெறும் வாய்ப்புகள் இருப்பதாக கருத்துக்கணிப்புகள் தொடர்ந்து கூறுவதால், காங்கிரஸுடன் கூட்டணி அமைக்க ஆம் ஆத்மி தொடர்ந்து தனது விருப்பத்தை தெரிவித்து வருகிறது. இதுபற்றி டெல்லி முதல்வரும் ஆம் ஆத்மி நிறுவனருமான கெஜ்ரிவால் செய்தியாளர்களிடம் பேசும் போது, “மேற்கு வங்காளத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியுடனும் டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியுடனும் காங்கிரஸ் இணைந்து செயல்பட வேண்டும். பாஜகவுக்கு எதிரான வாக்குகள் சிதறக் கூடாது என்பதே எங்களுடைய நோக்கம். ஆனால், இதில் உறுதியான முடிவு எதுவும் இதுவரை எட்டப்படவில்லை. 

டெல்லியில் இரு கட்சிகளும் இணைந்து செயல்படுவதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவுதான். எங்களுடைய முடிவை ஏற்க காங்கிரஸ் கட்சி தயக்கம் காட்டுகிறது. இதனால், பாஜக பலம் பெறும் சூழல் உள்ளது. இதனை காங்கிரஸ் தலைவர்கள் உணர்ந்து செயல்பட வேண்டும்.” என்று தெரிவித்திருக்கிறார்.

  

ஆம் ஆத்மி வெளிப்படையாக காங்கிரஸ் கூட்டணிக்கு அழைப்பு விடுத்தும் காங்கிரஸ் கண்டுகொள்ளாமல் இருப்பதற்கு காரணம் இல்லாமல் இல்லை. டெல்லியில் தொடர்ச்சியாக மூன்று முறை காங்கிரஸ் ஆட்சி அமைத்த நிலையில், கடந்த முறை காங்கிரஸை பூஜ்ஜியத்துக்கு தள்ளினார் கெஜ்ரிவால். தற்போது அந்தக் கட்சியுடன் கூட்டணி அமைத்தால், இருக்கும் வாக்கு வங்கியும் இல்லாமல் போய்விடும் என்ற அச்சம் காரணமாகவே கூட்டணியைத் தவிர்க்க காரணம் என்கிறார்கள் காங்கிரஸார்.

click me!