காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி மாநிலங்களவைக்கு போட்டியின்றி தேர்வாகியுள்ளார்
நாடு முழுவதும் 15 மாநிலங்களில் உள்ள 56 ராஜ்யசபா எம்பிக்களின் பதவிக்காலம் நிறைவடைகிறது. இந்த இடங்களை நிரப்புவதற்காக வருகிற 27 ஆம் தேதி ராஜ்யசபா தேர்தல் நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கையும் அதே நாளில் நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன. ராஜ்யசபா தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் முடிவடைந்துள்ளது. வேட்புமனுக்களை திரும்பப் பெறுவதற்கான காலக்கெடு இன்றுடன் முடிவடைகிறது.
இந்த நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, ராஜஸ்தானில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராக போட்டியின்றி தேர்வாகியுள்ளார். இந்த தகவலை சட்டமன்ற செயலாளர் மஹாவீர் பிரசாத் சர்மா தெரிவித்துள்ளார். ஏற்கனவே 5 முறை மக்களவை தேர்தலில் நின்று வெற்றி பெற்ற சோனியா காந்தி முதல்முறையாக மாநிலங்களவை எம்.பி. ஆகவுள்ளார். உடல்நிலை கருதி மக்களவை தேர்தலில் போட்டியிடவில்லை என தெரிவித்துள்ள சோனியா காந்தி தனது ரேபரேலி தொகுதி மக்களுக்கு இதுகுறித்து உருக்கமான கடிதமும் எழுதியிருந்தார்.
undefined
சோனியா காந்தியுடன் பாஜக தலைவர்கள் சன்னிலால் கராசியா மற்றும் மதன் ரத்தோர் ஆகியோரும் ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து மாநிலங்களவைக்கு போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். வேட்புமனுக்களை வாபஸ் பெற இன்று கடைசி நாள். தேர்தலில் போட்டியிட வேறு யாரும் வேட்புமனு தாக்கல் செய்யாததால், மூன்று தலைவர்களும் போட்டியின்றி ராஜ்யசபாவுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக ராஜஸ்தான் மாநில சட்டமன்ற செயலாளர் மஹாவீர் பிரசாத் சர்மா தெரிவித்துள்ளார்.
சண்டிகர் மேயர் தேர்தலில் பாஜக வெற்றி செல்லாது; ஆம் ஆத்மி வேட்பாளர் வெற்றி - உச்ச நீதிமன்றம்!
ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்வான மன்மோகன் சிங் (காங்கிரஸ்) மற்றும் பூபேந்திர யாதவ் (பாஜக) ஆகியோரின் பதவிக்காலம் ஏப்ரல் 3ஆம் தேதியுடன் முடிவடைகிறது. பாஜக எம்பி கிரோடி லால் மீனா அம்மாநில எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டதால், கடந்த டிசம்பர் மாதம் ராஜினாமா செய்தார். இதனால், அம்மாநிலத்தில் இருந்து 3 இடங்கள் காலியாகி உள்ளன.
மொத்தம் 200 உறுப்பினர்களைக் கொண்ட ராஜஸ்தான் சட்டப்பேரவையில், பாஜகவுக்கு 115 இடங்களும், காங்கிரஸ் கட்சிக்கு 70 இடங்களும் உள்ளன. ராஜஸ்தானுக்கு மொத்தம் 10 ராஜ்யசபா இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. தற்போதைய நிலவரப்படி, ராஜஸ்தானில் இருந்து மாநிலங்களவையில் காங்கிரஸுக்கு 6 உறுப்பினர்களும், பாஜகவுக்கு 4 உறுப்பினர்களும் உள்ளனர்.