சமாஜ்வாதி கட்சியின் தமிழ்நாடு பிரிவை கலைத்து அக்கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் உத்தரவிட்டுள்ளார்
ஜனதா தளம், பல பிராந்தியக் கட்சிகளாகப் பிரிந்தபோது உருவான பல கட்சிகளில் சமாஜ்வாதி கட்சியும் ஒன்று. 1992ஆம் ஆண்டில் முலாயம் சிங் யாதவ் மற்றும் பெனி பிரசாத் வர்மா ஆகியோரால் சமாஜ்வாதி கட்சி நிறுவப்பட்டது. இதில் பெனி பிரசாத் வர்மா காங்கிரஸுக்கு சென்று மீண்டும் சமாஜ்வாதி கட்சிக்கு திரும்பியவர்.
சமாஜ்வாதி கட்சியின் நீண்டகால தலைவராக இருந்தவர் உத்தரப்பிரதேச மாநிலத்தின் மறைந்த முன்னாள் முதல்வர் முலாயம் சிங் யாதவ். அவர் உடல்நலிவுற்ற போது, அவரது மகன் அகிலேஷ் யாதவ் கட்டுப்பாட்டில் கட்சி வந்தது. 2017 ஆம் ஆண்டு நடைபெற்ற அக்கட்சியின் தேசிய மாநாட்டில் சமாஜ்வாடி கட்சி தலைவராக முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ் தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர், அவரது தலைமையில் அக்கட்சி தற்போது உள்ளது.
உத்தரபிரதேச மாநிலத்தில் சமாஜ்வாதி கட்சி 4 முறை ஆட்சி அதிகாரத்தில் இருந்துள்ளது. அம்மாநிலத்தில் தற்போது பிரதான எதிர்க்கட்சியாகவும் செயல்பட்டு வருகிறது. அம்மாநிலத்தில் மிகப்பெரிய வாக்கு சதவீதத்தை கொண்டிருக்கும் சமாஜ்வாதி கட்சி, உத்தரப்பிரதேசம் மட்டுமல்லாது உத்தராகண்ட், மத்திய பிரதேசம் உட்பட வட மாநிலங்களில் கணிசமாக உள்ளது. தமிழ்நாடு, ஆந்திரா உள்ளிட்ட தென் மாநிலங்களிலும் அக்கட்சிக்கு அமைப்புகள் உள்ளன.
இந்த நிலையில், சமாஜ்வாதி கட்சியின் தமிழ்நாடு பிரிவை கலைத்து அக்கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் உத்தரவிட்டுள்ளார். அதன் தமிழ்நாடு தலைவரும் பதவிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டு மக்களிடையே கட்சிக்கு போதிய வரவேற்பு இல்லாத காரணத்தினால் கட்சி கலைக்கப்பட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது.
காங்கிரஸுக்கு 17 தொகுதிகளை ஒதுக்கும் சமாஜ்வாதி: இதுதான் கடைசி ஆஃபர்!
சமாஜ்வாதி கட்சியின் தமிழ்நாடு பிரிவு தலைவராக சிதம்பரத்தைச் சேர்ந்த என்.இளங்கோ செயல்பட்டு வந்தார். அவரது செயல்பாடுகள் சரியில்லாததன் காரணமாக அவர் மாநில தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாகவும், சமாஜ்வாதி கட்சியின் தமிழ்நாடு பிரிவு கலைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது.
அகிலேஷ் யாதவ், பாஜகவுக்கு எதிரான இந்தியா கூட்டணியின் முக்கிய தலைவராக உள்ளார். உத்தரப்பிரதேச மாநிலத்தில் வலுவாக உள்ள அவரது சமாஜ்வாதி கட்சி, மக்களவைத் தேர்தலில் அம்மாநிலத்தில் காங்கிரஸ் கட்சிக்கு 17 தொகுதிகளை ஒதுக்க முன்வந்துள்ளது.