பிரதமர் மோடிக்கு எதிராக தேர்தல் ஆணையத்தில் காங்கிரஸ் புகார்!

By Manikanda Prabu  |  First Published Apr 8, 2024, 4:24 PM IST

நாட்டில் பிரிவினையை ஏற்படுத்தும் வகையில் பிரதமர் தேர்தல் பிரசாரங்களில் ஈடுபடுவதாக தேர்தல் ஆணையத்தில் காங்கிரஸ் கட்சி புகார் அளித்துள்ளது


நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெறவுள்ளது. தேர்தல் அறிவிப்பு வெளியாகியுள்ளதால், தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளன. இதனை மீறுவோர் மீது தேர்தல் அதிகாரிகளிடம் புகார்கள் அளிக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், நாட்டில் பிரிவினையை ஏற்படுத்தும் வகையில் பிரதமர் தேர்தல் பிரசாரங்களில் ஈடுபடுவதாக தேர்தல் ஆணையத்தில் காங்கிரஸ் கட்சி புகார் அளித்துள்ளது. முன்னாள் மத்திய அமைச்சர் சல்மான் குர்ஷித், ராஜ்யசபா எம்.பி. முகுல் வாஸ்னிக், பவன் கேரா, குர்தீப் ஆகியோர் கொண்ட காங்கிரஸ் கட்சியை சேர்ந்த குழுவினர் இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தில் அதிகாரிகளை சந்தித்து தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி செயல்படுவதாக பிரதமர் மீது புகார் அளித்துள்ளனர்.

Tap to resize

Latest Videos

தேர்தல் பிரச்சாரத்தின் போது பிரதமர் மோடி ராணுவ விமானங்களை பயன்படுத்துவதற்கு எதிராக புகார் அளித்துள்ள காங்கிரஸ் கட்சி, தேர்தல் பிரமாணப் பத்திரத்தில் தனது நிதி நிலை குறித்து தவறான தகவலை கூறியதாக திருவனந்தபுரம் பாஜக வேட்பாளர் ராஜீவ் சந்திரசேகர் மீதும் புகார் அளித்துள்ளது.

குறிப்பாக, காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் முஸ்லிம் லீக் கட்சியின் சிந்தனைகள் பிரதிபலிப்பதாக கூறி பிரதமர் மோடி பிரசாரம் செய்து வருவதற்கு எதிராகவும் காங்கிரஸ் கட்சி தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்துள்ளது

முன்னதாக, கடந்த 6 ஆம் தேதி ராஜஸ்தானின் அஜ்மீரில் நடந்த தேர்தல் பிரசாரக் கூட்டத்தின்போது காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை பொய்களின் மூட்டை எனவும், அதன் ஒவ்வொரு பக்கமும் இந்தியாவை துண்டு துண்டாக உடைக்கும் முயற்சி என்றும் பிரதமர் மோடி விமர்சித்தார். “முஸ்லிம் லீக்கின் முத்திரையை தாங்கியுள்ள காங்கிரஸின் தேர்தல் அறிக்கையில் எஞ்சியிருப்பதை இடதுசாரிகள் கைப்பற்றியுள்ளனர். இன்று காங்கிரசுக்கு கொள்கைகளே கிடையாது. காங்கிரஸ் தங்களது முழுக் கட்சியையும் அவுட்சோர்ஸ் செய்துவிட்டது போல் தெரிகிறது. எல்லாவற்றையும் ஒப்பந்தம் போட்டு கொடுத்து விட்டது.” என பிரதமர் மோடி விமர்சித்தார்.

ஒட்டுமொத்தமாக வளர்ச்சியடைந்துள்ள வடகிழக்கு பகுதி: பிரதமர் மோடி பெருமிதம்!

அதன் தொடர்ச்சியாக, நாட்டில் பிரிவினையை ஏற்படுத்தும் வகையில் பிரதமர் தேர்தல் பிரசாரங்களில் ஈடுபட்டு வருகிறார். அவரது பேச்சுகள் தேர்தல் நடத்தை விதிமுறைகளுக்கு எதிரானதாக இருக்கிறது என காங்கிரஸ் கட்சி இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளது.

நாட்டின் பிரிவினைக்கு காரணமாக இருந்த முஸ்லிம் லீக் கட்சியை தங்களது தேர்தல் அறிக்கையுடன் ஒப்பிடுவதாகவும், குறிப்பிட்ட இனம் சார்ந்த பிரசாரங்களில் பிரதமர் மோடி ஈடுபடுவதாகவும் தனது புகாரில் காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.

click me!