டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை பதவி நீக்கம் செய்யக் கோரிய வழக்கில் டெல்லி உயர் நீதிமன்றம் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது
டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கு தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரித்து வரும் அமலாக்கத்துறை, முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை கைது செய்துள்ளது. அரவிந்த் கெஜ்ரிவாலை ஏப்ரல் 15ம் தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க டெல்லி ரோஸ் அவன்யூ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி, டெல்லி திகார் சிறையில் அவர் அடைக்கப்பட்டுள்ளார்.
இதனிடையே, டெல்லி முதல்வர் பதவிலிருந்து அரவிந்த் கெஜ்ரிவாலை நீக்கக் கோரி பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டு வருகின்றன. அந்த வகையில், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை பதவி நீக்கம் செய்யக் கோரி ஆம் ஆத்மி கட்சியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரான சந்தீப் குமார் என்பவர் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
அந்த வழக்கை விசாரித்த டெல்லி உயர் நீதிமன்றம், அரவிந்த் கெஜ்ரிவாலை பதவி நீக்கம் செய்யக் கோரிய மனுவை தள்ளுபடி செய்ததுடன், மனுதாரருக்கு கடுமையான எச்சரிக்கை விடுத்தது. முன்னதாக, சுர்ஜித் சிங் யாதவ் மற்றும் விஷ்ணு குப்தா ஆகியோர் தாக்கல் செய்திருந்த மனுக்களை விசாரிக்க டெல்லி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி மறுப்பு தெரிவித்திருந்த நிலையில், 3ஆவதாக மீண்டும் அரவிந்த் கெஜ்ரிவாலை பதவி நீக்கம் செய்யக் கோரி மனுத்தாக்கல் செய்யப்பட்டதால், டெல்லி உயர் நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
டெல்லி முதல்வர் பதவிலிருந்து அரவிந்த் கெஜ்ரிவாலை நீக்கக் கோரி சுர்ஜித் சிங் யாதவ் என்பவர் டெல்லி உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனுத்தாக்கல் செய்தார். அந்த வழக்கை விசாரித்த டெல்லி உயர் நீதிமன்றம், இந்த விஷயத்தில் நீதிமன்றம் தலையிட முடியாது, துணைநிலை ஆளுநர் மற்றும் குடியரசுத் தலைவருக்கு தான் இதில் அதிகாரம் உள்ளது என கூறி அந்த மனுவை தள்ளுபடி செய்தது.
ஒட்டுமொத்தமாக வளர்ச்சியடைந்துள்ள வடகிழக்கு பகுதி: பிரதமர் மோடி பெருமிதம்!
அதன் தொடர்ச்சியாக, டெல்லி முதல்வர் பதவிலிருந்து அரவிந்த் கெஜ்ரிவாலை நீக்கக் கோரி இந்து சேனா என்ற அமைப்பின் தேசிய தலைவர் விஷ்ணு குப்தா என்பவர் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மற்றொரு மனுவை தாக்கல் செய்தார். அந்த மனுவையும் நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில், 3ஆவது மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
இதனிடையே, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தனது பதவியை ராஜினாமா செய்ய மாட்டார் என அமைச்சர் அதிஷி தெரிவித்துள்ளார். குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டு தண்டனை பெற்றால்தான் ராஜினாமா செய்ய வேண்டும். ஜெஜ்ரிவால் ராஜினாமா செய்தால் டெல்லியில் ஆட்சியை கவிழ்பது பாஜகவுக்கு எளிதாகி விடும். எனவே, அவர் ராஜினாமா செய்ய மாட்டார் என அவர் விளக்கம் அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.