
நிலக்கரி பற்றாக்குறை
நிலக்கரி பற்றாக்குறையால் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டு ஏற்பட்டு மின் வெட்டினால், குஜராத், மகாராஷ்டிரா, உத்தரபிரதேசம் உள்ளிட்ட 12 மாநிலங்கள் இருளில் மூழ்கும் ஆபத்து உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் நிலக்கரி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் பல்வேறு மாநிலங்களில் மின் வெட்டு பிரச்சனை நிலவி வருகிறது. நாடு முழுவதும் உள்ள 178 அனல் மின் நிலையங்களில் சுமார் 100-ல் மிகவும் குறைவான அளவில் நிலக்கரி கையிருப்பு உள்ளது. அதனால் குஜராத், மகாராஷ்டிரா, உத்தரபிரதேசம் உள்ளிட்ட 12 மாநிலங்கள் இருளில் மூழ்கும் ஆபத்து உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மத்திய அரசின் மின்சாரம்,நிலக்கரி மற்றும் ரயில்வே ஆகிய மூன்று துறைகளுக்கு இடையே போதிய ஒத்துழைப்பு இல்லாததே இதற்கு காரணம் என்றும் கூறப்படுகிறது. எனவே விரைவில் பல்வேறு மாநிலங்களில் மின் தடை ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. இது மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மின் உற்பத்தி பாதிப்பு:
கடந்த சில தினங்களுக்கு முன்பு செய்தியாளர்களை சந்தித்த மகாரஷ்டிரா மின்துறை அமைச்சர் நிதின் ராவத், "நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக மகாராஷ்டிராவில் மட்டும் அல்ல, இந்தியாவின் 12 மாநிலங்களில் மின் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. தொழில்துறை நுகர்வோருக்கு மின்சாரம் வழங்குவதற்கு குஜராத் மாநிலம் முழு மின் நிறுத்த நாளை அறிவித்துள்ளது. ஆந்திரப் பிரதேசம் 40% மின் விநியோகத்தை குறைப்பதாக அறிவித்துள்ளது. பஞ்சாப் மற்றும் ஹரியானாவிலும் இதே நிலை உள்ளது. இத்தகைய சூழலில் மைக்ரோ லெவல் திட்டமிடல் மூலம் மின் பற்றாக்குறையை குறைக்க மாநில மின்சார துறை செயல்பட்டு வருகிறது'' என்று பேசினார்.
மின் வெட்டு - மக்கள் அவதி:
பஞ்சாப் மாநிலத்தில் நிலக்கரி தட்டுபாடு காரணமாக ஏற்கனவே கிராமங்களில் 5 முதல் 6 மணி நேரம் மின் தடையும் நகரபகுதிகளில் 1 முதல் 2 மணி நேரம் மின் தடையும் இருக்கும் நிலையில் வரும் காலங்களில் இந்த நிலை இன்னும் அதிகரிக்கக்கூடும் என்று தெரிவிக்கப்படுகிறது. நிலக்கரி பற்றாக்குறை காரணமாக தனியார் அனல் மின் நிலையங்கள் மூடப்பட்டால், மேலும் மின் பற்றாக்குறை அதிகரித்து மாநிலத்தில் மின்வெட்டு நேரமும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.
இந்நிலையில் நாடுமுழுவதும் பல்வேறு மாநிலங்களில் நிலக்கரி தட்டுப்பாடு ஏற்பட்டு மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இதஒயடுத்து கோல் இந்திய நிறுவனத்திற்கும், இந்திய இரயில்வே துறைக்கும் இடையே நிலவும் முரண்பாடுகளை தவிர்த்து நிலக்கரியை பயன்படுத்தி மின்சாரத்தை தயாரிக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்கக்கோரி மத்திய அரசுக்கு எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.
எதிர்க்கட்சிகள் விமர்சனம்:
மேலும் வெறுப்புணர்வை பரப்புவதை நிறுத்திவிட்டு, மின் உற்பத்தி நிலையங்களை மத்திய அரசு திறக்க வேண்டும் என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். 8 ஆண்டுகளாக பேசிய பேச்சுகள், 8 நாள் மட்டுமே நிலக்கரி கையிருப்பு என்ற நிலைமைக்கு இந்தியாவை கொண்டுவந்து நிறுத்தியுள்ளது என்று டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
இதனிடையே மாநிலங்களில் நிலக்கரி இருப்பு மற்றும் தேவை குறித்து, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மத்திய மின்சாரத்துறை அமைச்சர் ஆர்.கே.சிங், ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷணவ், நிலக்கரி அமைச்சர் பிரஹலாத் ஜோஷி மற்றும் துறை சார்ந்த அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.
மேலும் படிக்க:தமிழகத்தில் திடீர் மின்வெட்டு.. என்ன தான் காரணம்? அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம்..!