
நடிகர் விஜய் நடித்த மெர்சல் திரைப்படம் தமிழகம் மட்டுமல்லாது உலகம் எங்கும் பல திரையரங்குகளில் தீபாவளி ரிலீஸாக நேற்று வெளியானது. விஜய் நடித்த தமிழ்ப் படமான இந்தப் படத்தை கர்நாடகத்தில் வெளியிட எதிர்ப்பு தெரிவித்து கன்னட அமைப்புகள் பெங்களூரு, மைசூரு ஆகிய இடங்களில் போராட்டம் நடத்தின.
கன்னட அமைப்பினர் பெருமளவில் குவிந்து, தியேட்டர்கள் முன் போராட்டம் நடத்தினர். இதனால், அங்கே சினிமா பார்க்கக் குவிந்திருந்த விஜய் ரசிகர்களுக்கும் கன்னட அமைப்பினருக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது.
பெங்களூரு மல்லேஸ்வரம் பகுதியில் உள்ள ராதாகிருஷ்ணா திரையரங்கில் மெர்சல் படம் திரையிடப்பட்டது. மெர்சலுக்கு வரவேற்பு தெரிவித்து, விஜய் ரசிகர்கள் பெரிய அளவிலான கட் அவுட்களை திரையரங்கு முன்னர் வைத்திருந்தனர். ஆனால், கர்நாடகாவில் தமிழ்த் திரைப்படங்களை வெளியிடக் கூடாது என்று கூறி, தமிழ்ப் படங்களுக்கு எதிராக முழக்கமிட்டபடி கன்னட அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். திரையரங்கு முன் வந்த அவர்கள், விஜய் ரசிகர்கள் வைத்திருந்த கட் அவுட்டுகளை அகற்றினர். இதனால், விஜய் ரசிகர்களுக்கும் கன்னட அமைப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த கலாட்டாவால், நேற்று காலை மெர்சல் படம் அங்கே திரையிடப்படவில்லை.
கர்நாடகத்தின் இன்னொரு முக்கிய நகரான மைசூருவிலும் இதே நிலை ஏற்பட்டது. அங்கேயும் மெர்சல் படம் திரையிடப்படும் திரையரங்கு முன் குவிந்த கன்னட அமைப்பினர் போராட்டம் நடத்தியதால், அங்கும் மெர்சல் திரையிடப்படவில்லை. இதனால் விஜய் ரசிகர்கள் பெரும் சோகத்தில் இருந்தனர்.