பயணிகளின் வசதிக்கே முன்னுரிமை அளிக்கப்படும் என புதிய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடு தெரிவித்துள்ளார்
நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி மத்தியில் மீண்டும் ஆட்சி அமைத்துள்ளது. நரேந்திர மோடி 3ஆவது முறையாக பிரதமராக பதவியேற்றுக் கொண்டார். அவருடன் சேர்ந்து 71 அமைச்சர்களும் பொறுப்பேற்றுக் கொண்டனர். புதிய அமைச்சர்களுக்கான இலாக்காக்கள் நேற்று அறிவிக்கப்பட்டன.
அதன்படி, தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்த ராம் மோகன் நாயுடுவுக்கு மத்திய சிவில் விமான போக்குவரத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த துறையை ஏற்கனவே தன் வசம் வைத்திருந்த முன்னாள் காங்கிரஸ் உறுப்பினரான ஜோதிராதித்ய சிந்தியா, தொலைத்தொடர்பு மற்றும் வடகிழக்கு பிராந்தியத்தின் வளர்ச்சி ஆகிய இரண்டு அமைச்சகங்களுக்கு பொறுப்பேற்றுள்ளார்.
ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் மக்களவைத் தொகுதியில் இருந்து தொடர்ந்து மூன்றாவது முறையாக வெற்றி பெற்று மக்களவை எம்.பி.யாகியுள்ள 36 வயதான ராம் மோகன் நாயுடு, மோடி 3.0 அமைச்சரவையின் மிகவும் இளம் வயது அமைச்சராவார். இந்த நிலையில், துறை ரீதியான தனது எதிர்கால திட்டங்கள் குறித்து பேசிய விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடு, பயணிகளின் பாதுகாப்புக்கும், வசதிக்குமே முன்னுரிமை அளிக்கப்படும் என்றார்.
“நான் மிகவும் உற்சாகமாக இருக்கிறேன். இந்த அமைச்சகத்திற்கு நிறைய திறன்கள் இருப்பதாக நான் ஏற்கனவே அறிந்திருக்கிறேன். பிரதமர் மோடியுடனான சந்திப்பின்போதும், இதனை அவர் வலியுறுத்திக் கூறினார். பிரதமர் மோடியுடனான சந்திப்புக்கு பிறகு நான் கூடுதல் உற்சாகத்துடன் இருகிறேன்.” என்றார்.
‘நீங்கள் இந்த அமைச்சரவையில் இளையவர்களில் ஒருவர், இது ஒரு நம்பிக்கைக்குரிய அமைச்சகம் உலகத்தின் பார்வையை கொண்டுள்ளது. எனவே, நீங்கள் பொறுப்பேற்க வேண்டும்’ என பிரதமர் மோடி தன்னிடம் கூறியதாக ராம் மோகன் நாயுடு தெரிவித்துள்ளார். எனக்கு 10 ஆண்டுகால நாடாளுமன்ற அனுபவம் உள்ளது. இந்த அமைச்சகத்திற்கு அற்புதங்களைச் செய்ய அதைப் பயன்படுத்துவேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
நீட் தேர்வின் புனித தன்மை பாதிக்கபட்டுள்ளது: உச்ச நீதிமன்றம்!
தொடர்ந்து பேசிய ராம் மோகன் நாயுடு, “பயணிகளைக் கவனித்துக் கொள்வது முதன்மையானது. நான் அடிக்கடி விமானத்தில் செல்வதால் அதன் கவலைகள் எனக்கு புரியும். வாடிக்கையாளர்களை திருப்திப்படுத்த குறைகளை நிவர்த்தி செய்யும் அமைப்பை நாங்கள் உருவாக்கப் போகிறோம்.” என்றார். விமான நிறுவனங்களை கையாள்வது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அவர், நான் இன்னும் பொறுப்பேற்க வேண்டும் என கூறி கவனமாக அந்த கேள்விக்கு பதிலளிக்க தவிர்த்து விட்டார்.
விமானங்கள் மற்றும் பயணிகளின் பாதுகாப்பு தொடர்பான பல சம்பவங்கள் தலைப்பு செய்தியாகி வரும் சவாலான நேரத்தில், விமானப் போக்குவரத்து துறைக்கு ராம் மோகன் நாயுடு பதவியேற்றுள்ளார் என்பது கவனிக்கத்தக்கது.
2024 மக்களவைத் தேர்தலில் ஆந்திர மாநிலத்தில் மொத்தமுள்ள 25 இடங்களில் தெலுங்கு தேசம் கட்சி 16 இடங்களில் வெற்றி பெற்று பாஜக கூட்டணி கட்சிகளில் முக்கியமானதாக உருவெடுத்துள்ளது. நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் ஆட்சியமைக்க தேவையாக 272 இடங்கள் பாஜகவுக்கு கிடைக்கவில்லை. அந்த கட்சி 240 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. எனவே, ஆட்சியமைப்பதற்கு 32 இடங்கள் கூடுதலாக தேவைப்பட்டதால் தடுமாறிய பாஜகவுக்கு, தெலுங்கு தேசத்தின் 16 எம்.பி.க்கள், ஐக்கிய ஜனதாதளத்தின் 12 எம்.பி.க்களின் ஆதரவு தேவைப்பட்டது. அதன்படி, அந்த கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் மத்தியில் பாஜக மீண்டும் ஆட்சியமைத்துள்ளது. புதிய அரசு அமைந்ததில் தெலுங்கு தேசம் கட்சியின் முக்கிய பங்கிற்கு வெகுமதி அளிக்கும் வகையில், ஒரு கேபினட் அந்தஸ்து அமைச்சர் (விமான போக்குவரத்து துறை - ராம் மோகன் நாயுடு) பதவியும், இரண்டு இணையமைச்சர் பதவிகளும் அக்கட்சிக்கு வழங்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.