விமான விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிவாரணம்..! மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் அறிவிப்பு

By karthikeyan VFirst Published Aug 8, 2020, 3:21 PM IST
Highlights

கேரள விமான விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கபப்டும் என விமான போக்குவரத்துத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி அறிவித்துள்ளார். 
 

கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் வெளிநாடுகளில் சிக்கியுள்ள இந்தியர்கள் வந்தே பாரத் என்ற திட்டத்தின் மூலம் இந்தியாவிற்கு அழைத்துவரப்படுகின்றனர். அந்தவகையில் துபாயிலிருந்து 174 பயணிகள், 10 குழந்தைகள், 5 பணிப்பெண்கள், 2 விமானிகளுடன் கேரளாவின் காரிப்பூர் விமான நிலையத்திற்கு வந்த ஏர் இந்தியா விமானம், இரவு 7.40 மணிக்கு தரையிறங்கும்போது விபத்துக்குள்ளானது. விமானம் இரண்டாக உடைந்த கோரமான விபத்து இது.

இதையடுத்து உடனடியாக தேசிய பேரிடர் மீட்புப்படையினர், தீயணைப்புப்படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்புப்பணிகளை மேற்கொண்டனர். விமான விபத்து குறித்த தங்களது மனவேதனையை பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் வெளிப்படுத்தியிருந்தனர். சம்பவம் பற்றி அறிந்ததும், உடனடியாக கேரள முதல்வர் பினராயி விஜயனை தொலைபேசியில் தொடர்புகொண்டு பிரதமர் மோடி பேசினார். 

இந்த கோர விபத்தில் 17 பேர் பலியாகியுள்ளனர். மற்றவர்களில் பலர் படுகாயங்களும் சிலர் சாதாரண காயங்களும் அடைந்துள்ளனர். அனைவரும் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகின்றனர். இந்த கோர விமான விபத்து சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது. 

இந்நிலையில், விமான விபத்தில் உயிரிழந்தவர்களில் 12 வயதுக்கு மேற்பட்டவர்களின் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சமும், படுகாயமடைந்தவர்களின் குடும்பத்துக்கு ரூ.2 லட்சம் மற்றும் சிறு காயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரமும் நிவாரண தொகையாக வழங்கப்படும் என மத்திய விமான போக்குவரத்துத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார்.
 

click me!