நீதிமன்றங்களுக்குச் செல்ல பொதுமக்கள் பயப்படக் கூடாது என்று தலைமை நீதிபதி டி.ஒய் சந்திரசூட் தெரிவித்துள்ளார்
நீதிமன்றங்களுக்குச் செல்ல பொதுமக்கள் பயப்படக் கூடாது என்றும், அதனை கடைசி வாய்ப்பாக பார்க்கக் கூடாது என்றும் தெரிவித்த தலைமை நீதிபதி டி.ஒய் சந்திரசூட், உச்ச நீதிமன்றம் ஒரு மக்கள் நீதிமன்றமாக செயல்பட்டு வருவதாக தெரிவித்தார்.
அரசியல் வேறுபாடுகளை நிறுவப்பட்ட ஜனநாயக அமைப்புகள் மற்றும் செயல்முறைகள் மூலம் தீர்க்க அரசியலமைப்பு அனுமதிப்பது போல், நிறுவப்பட்ட கொள்கைகள் மற்றும் செயல்முறைகள் மூலம் பல கருத்து வேறுபாடுகளைத் தீர்க்க நீதிமன்ற அமைப்பு உதவுகிறது. “இந்த வகையில், நாட்டில் உள்ள ஒவ்வொரு நீதிமன்றத்திலும் உள்ள ஒவ்வொரு வழக்கும் அரசியலமைப்பு நிர்வாகத்தின் நீட்டிப்பாகும்” என்று உச்ச நீதிமன்றத்தில் அரசியலமைப்பு தின கொண்டாட்டங்களைத் தொடக்கி வைத்து தலைமை நீதிபதி கூறினார்.
இந்நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு தொடக்க உரை நிகழ்த்தினார். உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சஞ்சய் கிஷன் கவுல், சஞ்சீவ் கண்ணா, சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் பேசிய தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், “கடந்த 70 ஆண்டுகளில் இந்திய உச்ச நீதிமன்றம் மக்கள் நீதிமன்றமாக செயல்பட்டது. ஆயிரக்கணக்கான குடிமக்கள் இந்த அமைப்பின் மூலம் தங்களுக்கு நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் அதன் கதவுகளை அணுகியுள்ளனர்.” என்றார்.
மேலும், குடிமக்கள் தங்கள் தனிப்பட்ட சுதந்திரத்தைப் பாதுகாப்பதற்கும், சட்டவிரோதக் கைதுகளுக்கு எதிராகவும், கொத்தடிமைத் தொழிலாளர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கும், பழங்குடியினர் தங்கள் தாயகத்தைப் பாதுகாக்கவும், மனிதக் கழிவுகளை மனிதனே அகற்றுதல் போன்ற சமூகத் தீமைகளைத் தடுக்கவும், தூய்மையான காற்று கிடைக்கவும் கூட நீதிமன்றத்திற்கு மக்கள் வருகிறார்கள் என்றார்.
“"இந்த வழக்குகள் நீதிமன்றத்திற்கான மேற்கோள்கள் அல்லது புள்ளிவிவரங்கள் அல்ல. இந்த வழக்குகள் உச்ச நீதிமன்றத்தின் மக்களின் எதிர்பார்ப்புகளையும், குடிமக்களுக்கு நீதி வழங்குவதற்கான நீதிமன்றத்தின் சொந்த உறுதிப்பாட்டையும் ஒத்திருக்கிறது.” என்று தலைமை நீதிபதி டி.ஒய் சந்திரசூட் தெரிவித்தார்.
கடந்த ஆண்டு அரசியலமைப்பு தினத்தன்று குடியரசுத் தலைவரால் எழுப்பப்பட்ட சிறைச்சாலைகளில் நெரிசல் பிரச்சினையைக் கையாள்வதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை எடுத்துரைத்த தலைமை நீதிபதி, நீதித்துறையின் அரசியலமைப்பு ஸ்தாபனம் தங்களுக்காக வேலை செய்கிறது என்பதை மக்கள் உணர வேண்டும் என்பதே இந்த முயற்சிகளின் பின்னணியில் உள்ள நோக்கமாகும் என்றார்.
உத்தரகாண்ட் சுரங்க மீட்பு: பிளான் ‘பி’ தொடங்கியது!
“தனிநபர்கள் நீதிமன்றங்களுக்குச் செல்வதற்குப் பயப்படவோ அல்லது கடைசி முயற்சியாகக் கருதவோ கூடாது. மாறாக, நமது முயற்சியால், ஒவ்வொரு வர்க்கம், சாதி, மதம் சார்ந்த குடிமக்களும் நமது நீதிமன்ற அமைப்பு மீது நம்பிக்கை வைத்து, தங்கள் உரிமைகளைச் செயல்படுத்துவதற்கான நியாயமான மற்றும் பயனுள்ள மன்றமாக அதைப் பார்க்க முடியும் என்பது எனது நம்பிக்கை.” எனவும் தலைமை நீதிபதி கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், “சில சமயங்களில், ஒரு சமூகமாக நாம் வழக்கை சந்திப்பது அவமானகரமானதாக கருதலாம். ஆனால் அரசியலமைப்புச் சட்டம் நிறுவப்பட்ட ஜனநாயக நிறுவனங்கள் மற்றும் செயல்முறைகள் மூலம் நமது அரசியல் வேறுபாடுகளைத் தீர்க்க அனுமதிப்பது போல், நிறுவப்பட்ட கொள்கைகள் மற்றும் செயல்முறைகள் மூலம் நமது பல கருத்து வேறுபாடுகளைத் தீர்க்க நமது நீதிமன்ற அமைப்பு உதவுகிறது.” என்றார்.