பிரதமர் எனது சேவையை பாராட்டியது மிகப்பெரிய அங்கீகாரம்: கோவை கூலி தொழிலாளி நெகிழ்ச்சி!

By Manikanda Prabu  |  First Published Nov 26, 2023, 2:26 PM IST

மனதின் குரல்' நிகழ்ச்சியில் தனது சேவை குறித்து பேசி பாராட்டியதற்காக பிரதமருக்கு கோவையைச் சேர்ந்த தினக்கூலி தொழிலாளி லோகநாதன் நன்றி தெரிவித்துள்ளார்.
 


மாதம்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் பிரதமர் நரேந்திர மோடி 'மனதின் குரல்' நிகழ்ச்சி வாயிலாக பொதுமக்களோடு உரையாடியும், பல்வேறு சேவைகள் புரியும் தன்னார்வலர்களை பாராட்டியும் பேசி வருகிறார்.

அந்த வகையில், இன்று ஒலிபரப்பாகிய 'மனதின் குரல்' நிகழ்ச்சியில், கோயம்புத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த தினக்கூலி தொழிலாளியான லோகநாதன் குறித்தும், அவரது சேவை பற்றியும் பிரதமர் பாராட்டி பேசியுள்ளார்.

Tap to resize

Latest Videos

சூலூர் பகுதியில் வசித்து வரும் 59 வயதாகிய ஆ.லோகநாதன், கடந்த 22 வருடங்களாக வறுமையில் வாடும் குழந்தைகளுக்கும், ஏழை எளிய மக்களுக்கும் பல்வேறு வகையில் உதவி செய்து வருகிறார். குறிப்பாக கழிவறைகளை சுத்தம் செய்வதில் கிடைக்கும் பணத்தை வைத்து இந்த உதவிகளை அவர் செய்து வருகிறார். 

மேலும், பயன்படுத்தப்பட்ட உடைகளை பல்வேறு பகுதிகளில் இருந்து பெற்று, அதனை ஏழை எளிய குழந்தைகளுக்கு வழங்கும் சேவையையும் தொடர்ந்து செய்து வருகிறார். இதற்காக பல்வேறு தன்னார்வ அமைப்புகளிடம் இருந்து விருதுகளையும் இவர் பெற்றுள்ளார்.

இந்த நிலையில், இவரது சேவையை மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பாராட்டி பேசியுள்ளார். பாரத பிரதமர் தனது சேவை குறித்து பேசியது இத்தனை ஆண்டுகளாக தாம் செய்த சேவைக்கான மிகப் பெரிய அங்கீகாரம் என கூறுகிறார் லோகநாதன்.

தூர்தர்ஷன் மற்றும் அகில இந்திய வானொலி செய்திக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் அவர் கூறியதாவது: “நான் ஐந்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ளேன். வறுமை காரணமாக என்னால் படிக்க முடியவில்லை. எனவே, வெல்டிங் வேலை மற்றும் தினக்கூலி வேலைகளை செய்து வருகிறேன். இதில் கிடைக்கும் வருமானம் குடும்பத்தை நடத்த மட்டுமே போதுமானதாக இருக்கும். இருந்தபோதும், வறுமையில் வாடும் மக்களுக்காக சேவை செய்ய வேண்டும் என்பது எனது ஆர்வம். அதற்காக கழிப்பறைகளை சுத்தம் செய்வதில் கிடைக்கும் பணத்தை சேமித்து ஏழை எளிய மக்களுக்கு உதவி செய்து வருகிறேன். இது மட்டுமின்றி பயன்படுத்தப்பட்ட உடைகளை பெற்று ஏழை எளிய மக்களுக்கு வழங்கி வருகிறேன்.” என்றார்.

அமைச்சர் செந்தில் பாலாஜி எப்போது டிஸ்சார்ஜ்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்!

இந்த சேவைக்காக பல்வேறு தன்னார்வ அமைப்புகளிடமிருந்து பல விருதுகள் பெற்ற போதும், பிரதமர் மோடி, 'மனதின் குரல்' நிகழ்ச்சியில் எனது சேவையை குறிப்பிட்டு பேசியதை மிகப்பெரிய அங்கீகாரமாக கருதுகிறேன் எனவும் லோகநாதன் கூறியுள்ளார். இந்த பாராட்டையும் பெருமையும் கோயம்புத்தூர் மாவட்ட மக்களுக்கு சமர்ப்பிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

“நாட்டின் ஏதோ ஒரு பகுதியில், தூய்மை பணியை செய்து கொண்டு, மக்கள் சேவை செய்து வரும் என்னை உலகம் முழுக்க தெரியும் வகையில் அறிமுகப்படுத்திய பிரதமருக்கு எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். பிரதமரின் பாராட்டு மேலும் பல சேவைகள் செய்ய என்னை ஊக்குவித்துள்ளது.” எனவும் லோகநாதன் தெரிவித்துள்ளார்.

click me!