#UnmaskingChina: சீனாவின் அடிமடியில் கைவைத்த இந்தியா.! ஆத்திரம் தாங்க முடியாமல் மிரட்டி பார்க்கும் சீனா

By karthikeyan VFirst Published Jun 19, 2020, 10:03 AM IST
Highlights

இந்தியா மீதான நீண்டகால கோபத்தையும் வெறுப்பையும், கொரோனா ஏற்படுத்தியுள்ள இந்த இக்கட்டான சூழலை பயன்படுத்தி ராணுவ தாக்குதல் மூலம் வெளிப்படுத்தியுள்ளது சீனா. 
 

இந்தியா - சீனா எல்லை பகுதியான கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில், இந்திய ராணுவ வீரர்கள் மீது வேண்டுமென்றே தாக்குதல் நடத்தியுள்ளது சீனா. போர் நிறுத்த ஒப்பந்தத்தை மதிக்காமல் சீனா அத்துமீறி நடத்திய தாக்குதலில் இந்திய ராணுவ வீரர்கள் 20 பேர் வீர மரணம் அடைந்தனர். 

சீனா இந்த தாக்குதலை நிதானமாக திட்டமிட்டு வேண்டுமென்றே தான் நடத்தியது. அதற்கு பல காரணங்கள் உள்ளன. காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசியல் சாசன பிரிவு 370ஐ இந்திய அரசாங்கம் நீக்கியது, அதைத்தொடர்ந்து பாராளுமன்றத்தில் உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் பேச்சு, சீன எல்லையில் அந்நாட்டிற்கு சவால் விடும் வகையில் இந்தியா உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தியது, கொரோனாவால் சீனாவின் மீது அதிருப்தியில் இருக்கும் மேலை நாடுகள் சீனாவிலிருந்து முதலீடுகளை இந்தியாவிற்கு மாற்ற நினைப்பது உள்ளிட்ட பல காரணங்கள் உள்ளன. அவை குறித்து விரிவாக பார்ப்போம். 

ஜம்மு காஷ்மீரின் கில்ஜித் - பல்திஸ்தான் பகுதிகள் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு செய்துள்ளது. அதேபோல காஷ்மீரின் கிழக்கு பகுதியான அக்சய் சின் பகுதியை சீனா ஆக்கிரமித்துள்ளது. இந்நிலையில், ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசியல் சாசன பிரிவு 370ஐ கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 5ம் தேதி இந்திய அரசு நீக்கியது. ஜம்மு காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியே; இந்தியாவின் மற்ற மாநிலங்களுக்கு பொருந்தும் விஷயங்கள் ஜம்மு காஷ்மீருக்கும் பொருந்தும் என்பதை பறைசாற்றும் வகையில், அரசியல் சாசன பிரிவு 370 நீக்கப்பட்டது. 

அதற்கு மறுநாள் ஆகஸ்ட் 6ம் தேதி பாராளுமன்றத்தில் பேசிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ”பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதி கண்டிப்பாக மீண்டும் இந்தியாவுடன் இணைக்கப்படும். பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் என்று நான் குறிப்பிடுவதில், சீனா கைப்பற்றியுள்ள அக்சய் சின் பகுதியும் அடங்கும்” என்று வெளிப்படையாக தெரிவித்தார். அண்மைக்காலத்தில் பாராளுமன்றத்தில் அமைச்சர் ஒருவர் அதிகாரப்பூர்வமாக, அக்சய் சின் இந்தியாவுடன் இணைக்கப்படும் என்று பேசியது இதுதான். தாங்கள் ஆக்கிரமித்து வைத்திருக்கும் அக்சய் சின் பகுதி இந்தியாவுடன் இணைக்கப்படும் என அமித் ஷா பாராளுமன்றத்தில் பேசியது, சீனாவிற்கு கண்டிப்பாக கடுங்கோபத்தை ஏற்படுத்தியிருக்கும். 

தெற்காசியாவில் சீனாவிற்கு ராணுவ ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் சவால் விடும் ஒரே நாடு இந்தியா மட்டும்தான். அதனால் இந்தியாவின் மற்ற அண்டைநாடுகளை தங்களின் எடுபிடிகளாக வைத்துக்கொண்டு இந்தியாவிற்கு நெருக்கடியை கொடுக்க அவ்வப்போது முனைகிறது சீனா. இலங்கையில் அதிகமான முதலீடுகளை செய்து அந்த நாட்டை தனது எடுபிடியாக வைத்திருக்கும் சீனா, நேபாளத்தை தூண்டிவிட்டு இந்திய எல்லைகளை உள்ளடக்கிய வரைபடத்திற்கு நேபாள பாராளுமன்றத்தில் ஒப்புதல் அளிக்க வைத்தது. அதேபோல இந்தியாவின் எதிரியான பாகிஸ்தானை, எதிரிக்கு எதிரி நண்பன் என்பதற்கேற்ப, சீனா நண்பனாக்கி கொண்டுள்ளது.  

பெல்ட் & ரோடு முன்னெடுப்பு(Belt&Road Initiative) என்ற திட்டத்தின் மூலம் பல நாடுகளில், சீனா தங்களது சொந்த நிதியில், உள்நாட்டு உற்பத்தி பொருட்களை கொண்டு, தங்களது பணியாட்களை கொண்டே சாலைகள் உள்ளிட்ட உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தி கொடுக்கிறது. அதற்கு ஆகும் செலவை, தவணை முறையில் வசூலித்து கொள்கிறது. பொருளாதாரத்தில் பின் தங்கியுள்ள ஆப்பிரிக்க நாடுகளில் இந்த திட்டத்தை செயல்படுத்தும் சீனா, அத்துடன் நிறுத்திக்கொண்டிருக்க வேண்டும். ஆனால் அதைவிடுத்து, இந்த திட்டத்தில் இணையுமாறு இந்தியாவையும் தொடர்ந்து வலியுறுத்தி கொண்டிருக்கிறது. ஆனால் இந்தியாவிற்கு அதற்கான அவசியமே கிடையாது. உட்கட்டமைப்புகளை மேம்படுத்துவதில் இந்தியா சிறந்து விளங்குகிறது.


 
அதை பறைசாற்றும் வகையிலும் சீனாவுக்கு சவால் விடும் வகையிலும், சீன எல்லை பகுதிகளில் உட்கட்டமைப்புகளை இந்தியா தொடர்ச்சியாக பலப்படுத்திக்கொண்டே வருகிறது. சீனாவுடன் சுமார் 3500 கிமீ தொலைவு எல்லையை பகிரும் இந்தியா, சீன எல்லை பகுதிகளில் உள்நோக்கத்துடன், உட்கட்டமைப்பை பலப்படுத்துவது, சீனாவிற்கு வெறுப்பையும் வயிற்றெரிச்சலையும் ஏற்படுத்தியிருக்கிறது. 

இந்தியா - சீனா எல்லையில் தற்போது பிரச்னை வெடித்த கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் கிழக்கு லடாக்கில் ”தர்பக் - ஷியோக் - தௌலத் பெக் ஓல்டி” இடையேயான 255 கிமீ தொலைவில் அனைத்துவிதமான சீதோஷ்ன நிலையையும் தாங்கக்கூடிய அளவிற்கு ஆறடுக்கு சாலையை இந்தியா போட்டுள்ளது. 2000ம் ஆண்டு முன்னாள் பிரதமர் வாஜ்பாய் தலைமையிலான ஆட்சியில் தொடங்கப்பட்ட இந்த சாலையமைக்கும் பணி, பிரதமர் மோடியின் ஆட்சியில் முடிவுற்று, கடந்த ஆண்டு திறக்கப்பட்டது. 

அதேபோல, ஜோஜி லா-வில் 14.15 கிமீ தொலைவிற்கு மலைத்தொடரின் ஊடே சுரங்கச்சாலையை அமைத்திருக்கிறது இந்தியா. ஸ்ரீநகர் - கார்கில் - லே இடையேயான தேசிய நெடுஞ்சாலையில், ஜோஜி லா கணவாய் பகுதியை கடந்து செல்வதற்கு 3-4 மணி நேரங்கள் ஆகும். 14.15 கிமீ தொலைவிற்கு ரூ.6800 கோடி செலவில் இந்தியா சுரங்கப்பாதை அமைத்தது. இதையடுத்து அந்த சுரங்கப்பாதையின் மூலம் வெறும் 15 நிமிடத்தில் மின்னல் வேகத்தில் 14.15 கிமீ தொலைவை கடந்துவிட முடியும். 

இந்த கட்டமைப்புகள் அனைத்தையுமே, சீன ராணுவத்தின் கண்முன்னே அமைத்து சாதித்து காட்டியது இந்தியா. சீன எல்லையில் உட்கட்டமைப்புகள் மேம்படுத்தப்பட்டுள்ள அதேவேளையில், அமித் ஷா பாராளுமன்றத்தில், சீனா ஆக்கிரமித்துள்ள அக்சய் சின் பகுதி மீண்டும் இந்தியாவுடன் இணைக்கப்படும் என பேசியது, சீனாவிற்கு இந்தியா மீது ஏற்கனவே இருந்த வயிற்றெரிச்சலை, கடுங்கோபமாக மாற்றியது. 

அதுமட்டுமல்லாமல், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் இந்தியாவுடன் இணைக்கப்படும் என்று அமித் ஷா பேசிய நிலையில், கடந்த மே மாதம் அதற்கான அஸ்திவாரத்தையும் போட்டது இந்தியா. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள கில்ஜித் - பல்திஸ்தான் பகுதிக்கான வானிலை அறிக்கையை இந்தியா வெளியிட்டது. இந்தியா அதிகாரப்பூர்வமாக வானிலை அறிக்கை வெளியிடும் அளவிற்கு சென்றுவிட்டதால், இந்தியாவின் அடுத்த டார்கெட், தாங்கள் ஆக்கிரமித்து வைத்துள்ள அக்சய் சின் பகுதிதான் என்பதை உணர்ந்த சீனாவிற்கு, இந்தியா மீதான கோபம் வெறுப்பாக மாறியது. 

இவ்வளவு கோபத்தையும் வெறுப்பையும் அடக்கி வைத்திருந்த சீனாவிற்கு, கொரோனாவை பரப்பியதாக ஏற்பட்ட கெட்ட பெயரால் அந்நிய முதலீடுகள் குறையும் அபாயம் ஏற்பட்டது. சீனாவில் உருவான கொரோனா வைரஸ், அமெரிக்கா மற்றும் பிரிட்டன், இத்தாலி, ஜெர்மனி, ஃபிரான்ஸ் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் கடும் பாதிப்பை ஏற்படுத்தியதால், அந்த நாடுகள் எல்லாம் சீனாவின் மீது அதிருப்தியில் உள்ளன. எனவே சீனாவில் முதலீடு செய்துள்ள வெளிநாட்டு நிறுவனங்கள், அங்கிருந்து வெளியேறி, வேற நாட்டில் முதலீடு செய்யும் முனைப்பில் உள்ளன. 

அப்படி சீனாவிலிருந்து வெளியேறும் நிறுவனங்களுக்கு, அடுத்த வாய்ப்பாக இருப்பது இந்தியா தான். இந்தியாவில் மக்கள் தொகை அதிகம் என்பதால் இந்தியாவில் சந்தை செய்வது எளிது; அதுமட்டுமல்லாமல் இந்தியாவில் மனிதவளமும் அதிகம் என்பதால், வெளிநாட்டு நிறுவனங்களின் பார்வை இந்தியாவின் மீது விழுந்துள்ளது. எனவே பொருளாதார ரீதியாகவும் இந்தியா வளர்ச்சியை நோக்கி பயணிப்பதை சீனாவால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. 

எனவே இதுபோன்ற காரணங்களின் விளைவாகத்தான், கொரோனா இந்தியாவில் கடும் பாதிப்பை ஏற்படுத்தி கொண்டிருக்கும் இந்த வேளையில், இதை வாய்ப்பாக பயன்படுத்தி, இப்படியொரு நாசகார வேலையை செய்துள்ளது. ஆனால், இந்தியாவின் ராணுவ வலிமையை பற்றி சீனா அறிந்திருப்பதால் போருக்கு விரும்பாது. இந்தியாவை சும்மா மிரட்டி பார்ப்பதற்காகத்தான் இந்திய ராணுவ வீரர்கள் மீதான அத்துமீறிய தாக்குதலை சீன ராணுவம் நடத்தியுள்ளதே தவிர, போருக்கு அந்த நாடு விரும்பாது. இந்தியாவும் விரும்பாது என்பது ஒருபுறமிருக்க, சீனாவும் விரும்பாது. அதனால் தான் தாக்குதலையும் நடத்திவிட்டு, அதை ஒப்புக்கொள்ள மனமில்லாமல், பம்மிக்கொண்டு சமாதானமாக செல்ல தயார் என்று கூறுகிறது சீனா. அதுமட்டுமல்லாமல் பொருளாதாரத்தில் அதிவேகமாக வளர்ந்துவரும் இந்தியாவும் சீனாவும் போரிட்டால், அது சர்வதேச அளவில் பொருளாதாரத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். எனவே போருக்கு எல்லாம் வாய்ப்பில்லை. இந்தியா மீதான நீண்டகால கோபத்தையும் வெறுப்பையும் கக்கியுள்ளது சீனா.. அதுவும் இந்தியாவை மிரட்டி பார்ப்பதற்காக மட்டுமே.. இந்தியா இதற்கெல்லாம் அசராது.

click me!