
சத்தீஸ்கர் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது முதலமைச்சராக பூபேஷ் பாகல் பதவி வகித்தார். இவர் அம்மாநிலத்தில் அசைக்க முடியாத செல்வாக்கு மிக்க தலைவராக திகழ்ந்து வந்தார். இந்நிலையில் 2023ம் ஆண்டு நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் - பாஜகவுக்கும் இடையே கடும் போட்டி நிலவி வந்தது. கருத்து கணிப்பு முடிவுகளும் இழுபறி என கூறிவந்தது. இறுதியில் தலைகீழாக தண்ணி குடித்துதான் பாஜக சத்தீஸ்கரில் வெற்றி பெற்றது. அதாவது 90 தொகுதி கொண்ட சத்தீஸ்கரில் பாஜக 54 இடங்களிலும், காங்கிரஸ் 34 இடங்களிலும் வெற்றி பெற்றது. இதனையடுத்து விஷ்ணு தியோ சாயை முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
சத்தீஸ்கர் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது முதலமைச்சராக பூபேஷ் பாகல் இருந்த போது மதுபான கொள்கையில் ஊழல் நடைபெற்றதாகவும், இதன் மூலம் மாநில அரசுக்கு ரூ.2,100 கோடி இழப்பு ஏற்பட்டதாகவும் புகார் எழுந்தது. இதுதொடர்பாக அமலாக்கத்துறை அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த விவகாரம் தொடர்பாக ஏற்கனவே கடந்த ஜனவரி மாதம் முன்னாள் அமைச்சரும், காங்கிரஸ் தலைவருமான கவாசி லக்மா உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில் மதுபான ஊழலில் பூபேஷ் பாகேலின் மகன் சைதன்யா பாகல் ஆதாயம் அடைந்திருப்பதாக அமலாக்கத்துறை சந்தேகத்தை அடுத்து அவரது வீடு உட்பட மாநிலம் முழுவதும் 15 இடங்களில் கடந்த மார்ச் மாதம் அமலாக்கத் துறை சோதனை மேற்கொண்டது.
இந்நிலையில் பூபேஷ் பாகல் அவரது மகனும் ஒரே இல்லத்தில் வசிக்கும் நிலையில் மீண்டும் அமலாக்கத்துறையினர் இன்று காலை முதல் சோதனை மேற்கொண்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சோதனையின் முடிவில் பூபேஷ் பாகலின் மகனை அமலாக்கத்துறை கைது செய்தது. சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறையினர் இந்த அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளன. ஊழல் வழக்கில், பிறந்த நாள் தினத்தன்று பூபேஷ் பாகல் மகன் சைதன்யாவை அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.