
மருத்துவ சிகிச்சைக்காக பரோலில் வந்திருந்த ஒரு கைதி, பாட்னாவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் ஐந்து அடையாளம் தெரியாத நபர்களால் பலமுறை சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். இந்த சம்பவம் பீகார் மாநிலத்தின் சட்டம்-ஒழுங்கு நிலைமை குறித்து மீண்டும் பல கேள்விகளை எழுப்பியுள்ளது.
காவல்துறையின் தகவல்படி, பாட்னா நகரின் ராஜா பஜார் பகுதியில் உள்ள பாரஸ் மருத்துவமனையில் இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்த சம்பவத்தில் கொல்லப்பட்டவர், பக்ஸர் மாவட்டத்தில் நடந்த ஒரு கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சந்தன் மிஸ்ரா ஆவார். இவர் மருத்துவ பரோலில் பெயூர் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில் அந்த மருத்துவனைக்கு ஆயுதங்களுடன் வந்த 5 பேர் சந்தன் மிஸ்ரா அனுமதிக்கப்பட்டிருந்த ஐசியூ வார்டு அறைக்குள் நுழைந்து அவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். மருத்துவமனை வளாகத்தின் உள்ளே உள்ள சிசிடிவி கேமராவில் கொலை சம்பவத்தின் காட்சிகள் பதிவாகியுள்ளன. தாக்குதலுக்குப் பிறகு, 5 பேரும் மருத்துவமனை வளாகத்திலிருந்து தப்பி ஓடிவிட்டனர். மிஸ்ராவுக்கு பல துப்பாக்கிச் சூட்டுக் காயங்கள் ஏற்பட்டுள்ளன, அவர் தற்போது அதே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
காவல்துறை தீவிர விசாரணை:
சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறை குழுக்கள், பக்ஸர் காவல்துறையின் உதவியுடன் துப்பாக்கிச் சூடு நடத்தியவர்களை அடையாளம் காண தேடுதல் வேட்டையைத் தொடங்கியுள்ளன. இந்தத் துணிகர கொலைக்கு மருத்துவமனை பாதுகாப்பில் ஏற்பட்ட குறைபாடுதான் காரணமா? மருத்துவமனை காவலர்கள் யாரேனும் தரப்பில் உடந்தையாக இருந்தார்களா என்பது குறித்து விசாரித்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் கடுமையான அரசியல் எதிர்வினைகளைத் தூண்டியுள்ளது. எதிர்க்கட்சிகள், நிதிஷ் குமார் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு மாநிலத்தில் அதிகரித்து வரும் குற்றங்களைக் கட்டுப்படுத்தத் தவறிவிட்டதாகக் குற்றம் சாட்டியுள்ளன.
எதிர்க்கட்சிகளின் கடும் கண்டனம்:
பூர்னியா எம்பி பப்பு யாதவ், ஆளும் கட்சியை கடுமையாக சாடி, "பீகாரில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்துமாறு ஆளுநரிடம் கோரிக்கை வைப்பேன். நர்ஸ்கள், டாக்டர்கள் - இங்கு யாரும் பாதுகாப்பாக இல்லை. இந்த அரசு குற்றவாளிகள் மற்றும் மாஃபியாக்களுக்கு அடைக்கலம் கொடுக்கிறது. பீகாரில் நிர்வாகம் என்ற ஒன்றே இல்லை," என்று கூறினார்.
ஆர்ஜேடி தலைவர் மிருத்யுஞ்சய் திவாரி இதேபோன்ற கவலைகளை வெளிப்படுத்தினார். பீகார் 'ரவுடிகளின் ராஜ்ஜியமாக மாறிவிட்டதாக அவர் குற்றம் சாட்டினார். "குற்றவாளிகள் காவல்துறையைப் பார்த்து பயப்படுவதில்லை. மாநில அரசு மௌனமாக இருக்கும்போது குற்றம் கட்டுப்பாடில்லாமல் நடக்கிறது. பீகாரில் சட்டம்-ஒழுங்கு நிலைமை சீர்குலைந்துவிட்டது," என்று அவர் கூறினார்.
இந்த வழக்கில் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை என்று காவல்துறை தெரிவித்துள்ளது. மருத்துவமனை போன்ற பாதுகாப்பு மிகுந்த இடங்களில் கூட இத்தகைய துணிச்சலான தாக்குதல்கள் நடப்பது, பீகார் மாநிலத்தின் சட்டம்-ஒழுங்கு குறித்து பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.