
Marathon Cyclone Fauja Singh Dies In Road Accident: பஞ்சாபைச் சேர்ந்த 114 வயது மாரத்தான் ஓட்டப்பந்தய வீரர் உலகப்புகழ்பெற்ற ஃபௌஜா சிங் சாலை விபத்தில் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜலந்தர் மாவட்டத்தில் உள்ள சொந்த கிராமமான பியாஸ் பிண்டில் சாலையை கடக்க முயன்ற ஃபௌஜா சிங் மீது வாகனம் மோதியுள்ளது. படுகாயங்களுடன் போராடிய அவரை உடனடியாக மீட்டு தனியார் மருத்துவனையில் அனுமதித்துள்ளனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.
100 வயதில் மாரத்தானில் பங்கேற்ற ஃபௌஜா சிங்
'தலைப்பாகை சூறாவளி' என அழைக்கப்படும் ஃபௌஜா சிங் 1911 ஆம் ஆண்டு பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் மாவட்டம் பியாஸ் பிண்டில் பிறந்தார். தள்ளாத 89 வயதில் ஓட்டப்பந்தயத்தில் ஆர்வம் கொண்டு பல்வேறு மாரத்தான் போட்டிகளில் கலந்து கொண்டு அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார். 2003ம் ஆண்டு லண்டன் மாரத்தான் போட்டியில் 6 மணி நேரம் 2 நிமிடங்களில் இலக்கை அடைந்து 90 வயதுக்கு மேற்பட்டவர்கள் பிரிவில் உலக சாதனை படைத்தார். 2011ம் ஆண்டு தன்னுடைய 100வது வயதில், டொரோண்டோ வாட்டர்ஃப்ரண்ட் மாரத்தான் போட்டியை 8 மணி நேரம் 11 நிமிடங்கள் 6 வினாடிகளில் முடித்து, முழு மாரத்தான் ஓட்டத்தை முடித்த உலகின் முதல் 100 வயது நிரம்பியவர் என்ற பெருமையைப் பெற்றார்.
இளைஞர்களுக்கு, முதியவர்களுக்கு உத்வேகம்
ரன்னிங் பாபா, சீக்கிய சூப்பர்மேன் என அழைக்கப்படும் ஃபௌஜா சிங், இந்த வயதில் இப்படியும் ஓட முடியுமா? என்று பல்வேறு அதியசங்களை நிகழ்த்திக் காட்டினார். ஓட வேன்டிய 20, 25 வயதில் வீட்டில் முடங்கிக் கிடந்த இளைஞர்களுக்கு இந்த சீக்கிய சூப்பர் மேன் உத்வேகமாக திகழ்ந்தார். மேலும் தனது வயதுடைய முதியவர்களுக்கும் 'எந்த வயதிலும் சாதிக்கலாம்' என தெம்பூட்டினார். தன்னுடைய அசாத்திய திறமை காரணமாக அடோபோஸ் நிறுவனத்தின் விளம்பரங்களிலும் நடித்து உலகப்புகழ் பெற்றார்.
5 வயது வரை சரியாக நடக்க முடியவில்லை
ஃபௌஜா சிங் ஐந்து வயது வரை சரியாக நடக்க முடியாமல் தவித்துள்ளார். ஆனாலும் ஓட்டப்பந்தயம் தீரா காதல் கொண்டுள்ளார். ஒரு அமெச்சூர் ஓட்டப்பந்தய வீரராக வளர்ந்தார். ஆனால் இந்தியப் பிரிவினை அப்பகுதியில் உள்ள லட்சக்கணக்கான மற்றவர்களைப் போலவே அவரது வாழ்க்கையையும் சீர்குலைத்தது. அவரது குடும்ப உறுப்பினர்கள் பலர் விபத்துகளிலும் வேறுவிதத்திலும் இறந்த பிறகு, மனச்சோர்வை சமாளிக்க அவர் மீண்டும் ஓடத் தொடங்கினார்.
பல்வேறு தரப்பினரும் இரங்கல்
1990 களில் தனது மகன்களில் ஒருவருடன் வசிக்க இங்கிலாந்துக்கு குடிபெயர்ந்த அவர், 89 வயதில், தீவிரமாக ஓட்டத்திற்குத் திரும்பினார் மற்றும் வயதுக்குட்பட்ட சர்வதேச மராத்தான்களில் போட்டியிட்டார். தனது 102 வயதில் ஓட்டப்பந்தயங்களில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்த ஃபௌஜா சிங் சொந்த கிராமத்தில் வாழ்ந்து வந்த நிலையில், இப்போது சாலை விபத்தில் அகால மரணம் அடைந்துள்ளார். அவரது இறப்புக்கு பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.