
நாட்டில் மக்கள் சில்லறைக்காக அல்லாடிக்கொண்டு இருக்கும் போது, உத்தரப்பிரதேசத்தில் ஒரு வணிகர் ரூ.1.50 லட்சத்துக்கு 10, 50, 100 நோட்டுக்களாக வங்கியில் டெபாசிட் செய்துள்ளார்.
500 ரூபாய் மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என பிரதமர் மோடி கடந்த 8-ந்தேதி அறிவித்தார். அதைத் தொடர்ந்து செல்லாத ரூபாய்களை வங்கியிலும், தபால்நிலையத்திலும் மாற்றி புதிய ரூபாய்களை பெற மக்கள் வங்கியின் வாசலில் காத்துக்கிடக்கிறார்கள்.
பணத்தை மாற்றிக் கொள்ள வரும் மக்களுக்கு ரூ.2000, ரூ.100 நோட்டுக்கள் மட்டுமே கிடைப்பதால்,சில்லறை நோட்டுகளுக்காக அதாவது, ரூ.10,ரூ.20, ரூ.50 நோட்டுக்களை பெற முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். இதனால் பொதுமக்கள் தங்களது கையில் உள்ள குறைந்த மதிப்பிலான பணத்தை புழக்கத்தில் விட தயங்கி வருகின்றனர்.
ஆனால் உத்தரப்பிரதேசம், மொராதாபாத்தைச் சேர்ந்த ஒரு வர்த்தகர் அவ்தேஷ் குப்தா தன்னிடம் இருந்த ரூ. 10, ரூ.20, ரூ. 50 மற்றும் ரூ.100 நோட்டுக்கள் என மொத்தம் ரூ. 1.50 லட்சத்தை வங்கியில் நேற்று டெபாசிட் செய்தார். பொதுமக்களுக்கு சில்லறை கொடுக்க தத்தளித்து வரும் வங்கி ஊழியர்கள் இதை கண்டதும், மகிழ்ச்சியுடன் பணத்தை பெற்றுக்கொண்டு அவரை மனதார வாழ்த்தி அனுப்பினார்கள்.