
திருவனந்தபுரம், நவ. 18-
மத்திய அரசின் செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்பால் மக்கள் கால்வலிக்க வங்கியின் முன் பணத்துக்காக இனி காத்திருக்க தேவையில்லை. ஆனால், கேரளா, ஜார்கண்ட் ஆகிய மாநில மக்களின் புதிவித ஐடியாவால் மக்கள் கால்வலிக்காமல் பணம் பெற்றுச் செல்லலாம்.
பிரதமர் மோடியின் ரூபாய் நோட்டு செல்லாத அறிவிப்பு வெளியானதில் இருந்து, மக்கள் பணத்துக்காக வங்கியின் வாசலிலும், தபால் நிலையம் முன்பும் நீண்ட வரிசையில் மணக்கணக்கில் காத்துக் கிடக்கின்றனர்.
இதனால், பல மாநிலங்களில் மக்கள் கொளுத்தும் வெயிலில் நின்று மயங்கி விழுந்தும், நெஞ்சுவலி ஏற்பட்டும் உயிரிழப்பையும் சந்தித்து வருகின்றனர். இதுவரை, 48 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதை உணர்ந்த கேரள மாநிலம், ஜார்கண்ட் மாநில மக்கள் புதிய ஐடியாவை புகுத்தியுள்ளனர். அதாவது, தாங்கள் நிற்கும் இடத்தில் ஒரு கல்லை வைத்து அதன் மீது தன்னுடைய பாஸ்புக், அல்லது தங்களின் பொருட்களை வைத்து முன்பதிவு செய்து நிழலில் போய் நின்று கொள்கிறார்கள்.
வரிசை நகரும் போது, தங்களின் இடத்தில் உள்ள கல்லை மீண்டும் நகர்திக்கொள்கிறார்கள். பணம் மாற்றும் போது சிரமம் இல்லாமல் பணம் பெற்றுச் செல்கிறார்கள்.
அதேபோல, ஜார்கண்ட் மாநிலம், ராய்ப்பூரில் மக்கள் தங்கள் செருப்புகளை வரிசையாக, வங்கிக்கு உள்ளேயும், வாசலிலும் வைத்து நிழலில் நிற்கின்றனர். வரிசை நகர்ந்த உடன் செருப்பை நகர்த்திக்கொள்கின்றனர். சமூக வலைதளங்களில் இந்த படங்கள் அதிகமாகப் பகிரப்பட்டு பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.