இந்திய சுதந்திர போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் கொள்ளுப் பேரன் பாஜகவில் இருந்து விலகியுள்ளார்
இந்திய சுதந்திர போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் கொள்ளுப் பேரன் சந்திரகுமார் போஸ். இவர் கடந்த 2016ஆம் ஆண்டு பாஜகவில் இணைந்தார். 2016 சட்டமன்றத் தேர்தல் மற்றும் 2019 மக்களவை தேர்தல்களில்ல் பாஜக சார்பில் மேற்குவங்க மாநிலத்தில் இருந்து இரண்டு முறை போட்டியிட்டுள்ளார்.
மேற்குவங்க மாநில பாஜக துணைத் தலைவராக கடந்த 2016ஆம் ஆண்டில் நியமிக்கப்பட்ட சந்திரகுமார் போஸ், 2020ஆம் ஆண்டில் அப்பதவியில் இருந்து நீக்கப்பட்டார். முன்னதாக, 2019ஆம் ஆண்டில், குடியுரிமை திருத்தச் சட்டம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் பாஜகவுக்கு எதிரான நிலைப்பாட்டை அவர் எடுத்ததால், அவரது பதவி பறிக்கப்பட்டதாக கூறப்பட்டது.
undefined
ஜி20 உச்சி மாநாடு: பள்ளி, கல்லூரி, அலுவலகங்களுக்கு 3 நாட்களுக்கு விடுமுறை!
ஆனாலும், அவர் பாஜகவில் தொடர்ந்து நீடித்து வந்தார். இந்த நிலையில், இந்திய சுதந்திர போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் கொள்ளுப் பேரன் சந்திரகுமார் போஸ் பாஜகவில் இருந்து விலகியுள்ளார். அவர் தனது ராஜினாமா கடிதத்தை கட்சியின் தேசியத் தலைவர் ஜே.பி.நட்டாவுக்கு அனுப்பியுள்ளார்.
அக்கடிதத்தில், நேதாஜியின் கொள்கைகளை பரப்புவதில் பாஜக மத்திய தலைமையும், மாநில தலைமையும் ஆதரவு தராததால் கட்சியில் இருந்து விலகுவதாக குறிப்பிட்டுள்ளார். “மாநில மக்களைச் சென்றடைய வங்காள வியூகத்தை பரிந்துரைக்கும் விரிவான முன்மொழிவை நான் முன்வைத்திருந்தேன். எனது முன்மொழிவுகள் புறக்கணிக்கப்பட்டன.” என்றும் அவர் தனது ராஜினாமா கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
“நான் பாஜகவில் சேர்ந்தபோது, நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் மற்றும் சரத் சந்திரபோஸ் (நேதாஜியின் மூத்த சகோதரர் - இவரும் விடுதலை போராட்ட வீரர்தான்) ஆகியோரின் உள்ளடக்கிய சித்தாந்தத்தை நாடு முழுவதும் பிரசாரம் செய்ய அனுமதிக்கப்படுவேன் என்று எனக்கு வாக்குறுதி அளிக்கப்பட்டது. ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை.” என்று சந்திரகுமார் போஸ் தெரிவித்துள்ளார்.