
நாட்டில் 83 ஆயிரம் கி.மீ. தொலைவுக்கு சாலையை 2022ம் ஆண்டுக்குள் விரிவாக்கம் செய்யும் ரூ.6.90 லட்சம் கோடி மதிப்பிலான நெடுஞ்சாலை திட்டங்களுக்கு மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் வழங்கியது.
இதில் ‘பாரத் மாலா’ திட்டத்தின் கீழ் எல்லைபுற சாலைகளை இணைக்கும் 28 ஆயிரத்து 400 கி.மீ. தொலைவுக்கான சாலை திட்டத்துக்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
நாட்டில் பொருளாதார செயல்பாடுகளை ஊக்குவிப்பது, அடுத்த 5 ஆண்டுகளுக்கு 32 கோடி மக்களுக்கு வேலைவாய்ப்பு அளிப்பது, நான்கு வழிச்சாலையின் தரத்தை மேம்படுத்தி, சாலை போக்குவரத்தை வேகப்படுத்துவது இந்த திட்டத்தின் நோக்கமாகும். குறிப்பாக சரக்கு போக்குவரத்தை விரைவுப்படுத்தவும், குறுகிய நேரத்தில் அதிக தொலைவு இயக்கவும் இந்த திட்டம் உதவும்.
நாட்டில் இருக்கும் சாலையின் மோசமான தரத்தாலும், போக்குவரத்து நெரிசலாலும் ஒரு ‘டிரக்’ அல்லது லாரி, நாள் ஒன்றுக்கு 250 முதல் 300 கி.மீ மட்டுமே கடக்க முடிகிறது. அதே வளர்ச்சி அடைந்த நாடுகளில் ஒரு டிரக் நாள் ஒன்றுக்கு 700 முதல் 800 கி.மீ தொலைவை எளிதாகக் கடந்து விடுகிறது.
ஆதலால், பாரத் மாலா திட்டத்தின் மூலம் புதிய சாலைகளை அமைத்தல், இருக்கும் சாலைகளை மேம்படுத்தி நெரிசலைக் குறைத்து, எளிதாக சரக்கு போக்குவரத்தை கையாள வகை செய்தலாகும். சிறப்பான சாலை வசதிகள், சுங்கச் சாவடிகளில் ‘ஸ்மார்ட் டேக்’ மூலம் எளிதாக லாரி, டிரக் கடந்து செல்லுதல் போன்றவை நெடுஞ் சாலைத்துறையின் திட்டமாகும்.
தேசிய நெடுஞ்சாலை ேமம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 50 ஆயிரம் கி.மீ சாலை மேம்படுத்தப்பட்டு, நாட்டின் எல்லைகளில் இருக்கும் சாலைகள் மற்ற நகரங்களின் சாலைகளோடு இணைக்கும் மிகப்பெரிய திட்டமாகும். இந்த திட்டம் போல் 2-வது மிகப்பெரிய திட்டம் பாரத் மாலா நெடுஞ்சாலை திட்டமாகும். 2022ம் ஆண்டுக்குள் ரூ.3.9 லட்சம் கோடி செலவில் 40 ஆயிரம் கி.மீ சாலை அமைத்தலாகும். இதில் முதல்பகுதி பாரத்மாலா திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
ஆண்டுக்கு 10 ஆயிரம் கி.மீ நெடுஞ்சாலை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது, இதன் மூலம், 4 கோடி மக்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். இந்த திட்டம் மூலம் அரசு வேலைவாய்ப்புகளை உருவாக்கவில்லை என்ற எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு முறியடிக்கப்டும்.
பாரத் மாலா திட்டம் குறித்து சர்வதேச ஆலோசனை நிறுவனமான ஏ.டி. கியர்னே ஆய்வு செய்து, நாட்டில் 44 பொருளாதார மையங்களை அடையாளம் கண்டு அறிக்கை அளித்தது. இந்த பொருளாதார மையங்களாக மும்பை-கொச்சி-கன்னியாகுமரி நெடுஞ்சாலை, பெங்களூரு-மங்களூரு, ஐதராபாத்-பானாஜி, சம்பல்பூர்-ராஞ்சி போன்ற நெடுஞ்சாலைகள் அடங்கும்.