
பசுக்களையும், எருமை மாடுகளையும் பராமரிக்க முக்கிய நகரங்களில் ‘பி.ஜி. ஹாஸ்டல்’ (பி.ஜி. விடுதி) அமைக்க அரியானா அரசு திட்டமிட்டுள்ளது. சோதனை முயற்சியாக ஹிசார் நகரில் இந்த விடுதி அமைக்கப்பட உள்ளது.
அரியானா மாநிலத்தில் பா.ஜனதா தலைமையிலான அரசு ஆட்சியில் உள்ளது. அங்கு முதல்வராக மனோகர் லால் கட்டார் இருந்து வருகிறார். அவரின் ஆட்சியில் கால்நடை மற்றும் பால்வளத்துறை அமைச்சராக இருக்கும் ஓம் பிரகாஷ் தன்கர் இந்த திட்டத்தை முன்மொழிந்துள்ளார். அவர் கூறியதாவது-
அரியானா மாநிலத்தில் உள்ள முக்கிய நகரங்களில் பசுக்கள், எருமை மாடுகளை பராமரிக்க 50 முதல் 100 ஏக்கரில் ‘பி.ஜி. ஹாஸ்டல்’ அமைக்கப்படும். நகர்புறங்களில் வசிக்கும் மக்கள் பசுக்களை தங்கள் வீடுகளில் வளர்க்க முடியாது என்பதால், இங்கு வளர்த்து, தங்களுக்கு தேவையான பாலைப் பெற முடியும்.
அதாவது, ஒருவர் அடுக்குமாடி குடியிருப்பில் 10-வது மாடியில் வசித்தால், அவரால் வீட்டுக்கு பின்புறம் பசு மாடு வளர்த்து, அதில் இருந்து பாலை பெற முடியாது. ஆனால், பசுகளுக்கான தனி விடுதியை உருவாக்கிவிட்டால், இங்கு பசுக்களை வளர்க்க முடியும். ‘பசு சேவை’ என்ற தங்களின் மத உரிமையையும் நிலைநாட்ட முடியும். பசு சேவா அயோக் என்ற அமைப்பு கிராமங்களில் தொடங்க ஆலோசனை தெரிவித்தது. ஆனால் அரசு நகர்புறங்களில் தொடங்க உள்ளோம். நகரங்களுக்கு அருகே 50 முதல் 100 ஏக்கர் நிலப்பரப்பில் தொடங்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
அரியானா பசு சேவா அயோக் தலைவர் பானி ராம் மங்களா கூறுகையில், “ பசுக்கள், எருமை மாடுகளுக்கான தனி விடுதி திட்டம் என்பது, ‘பசுக்களை பாதுகாக்கும் திட்டத்தில் இருந்து வந்ததுதான். நாங்கள் முன்பு கூறியதில் இருந்து சிறிய மாற்றம் செய்யப்பட்டு கொண்டுவரப்படுகிறது. நாங்கள் பசுக்களுக்கு மட்டும் விடுதி கேட்டு இருந்தோம், ஆனால், எருமை மாடுகளுக்கும் சேர்த்து அரசு விடுதி கொண்டு வருகிறது. நாங்கள் ஹாஸ்டல் என்ற பெயரைக் கூறினோம், அரசு ‘பி.ஜி. ஹாஸ்டல்’ எனக் கூறுகிறது’’ என்றார்.
மனிதனுக்கு இடமில்லை மாடுகளுக்கா..
இந்திய தேசிய லோக் தளம் கட்சியின் தலைவர் அபய் சவுதாலா, அரியானா அரசின் பசுகளுக்கான ஹாஸ்டல் திட்டத்தை கிண்டல் செய்துள்ளார். அவர் கூறுகையில், “ முதுகலை பட்டப்படிப்பான பி.ஜி. படித்த மக்களையே பார்த்துள்ளேன். ஆனால், பசுக்களுக்கு பி.ஜி. ஹாஸ்டல் என்றால் எப்படி இருக்கும்?. இங்கே மனிதர்கள் தங்குவதற்கே இடமில்லாமல், வீடில்லாமல் இருக்கிறார்கள். ஆநால், மாநில அரசு பசுக்களுக்கு ஹாஸ்டல் கட்டுகிறது. இது விளம்பரத்துக்கான முயற்சியாகும்’’ எனத் தெரிவித்தார்.