
எக்ஸ் (X) தளத்தின் அங்கமான 'Grok AI' சாட்போட் மூலம் பெண்களின் ஆபாசப் படங்கள் உருவாக்கப்படுவதாக எழுந்த புகாரை அடுத்து, அத்தகைய உள்ளடக்கங்களை நீக்க எக்ஸ் நிறுவனத்திற்கு மத்திய அரசு 72 மணி நேரக் கெடு விதித்துள்ளது.
சிவசேனா (UBT) எம்.பி. பிரியங்கா சதுர்வேதி, மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அவர்களுக்கு ஒரு கடிதம் எழுதினார். அதில், எக்ஸ் தளத்தின் 'Grok AI' தொழில்நுட்பத்தைத் தவறாகப் பயன்படுத்தி, பெண்களின் சாதாரணப் புகைப் படங்களை ஆபாசமாகச் சித்தரிக்கும் படங்கள் எளிதாக உருவாக்கப்படுவதாகவும், அவை சமூக வலைதளங்களில் பகிரப்படுவதாகவும் புகார் தெரிவித்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து, மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் (MeitY) எக்ஸ் தளத்திற்கு மிகவும் கடுமையான நோட்டீஸ் ஒன்றை அனுப்பியுள்ளது.
மத்திய அரசு விடுத்துள்ள 72 மணி நேரக் கெடுவில் பல்வேறு நடவடிக்கைளை எடுக்க எக்ஸ் நிறுவனத்துக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி, Grok AI மூலம் உருவாக்கப்பட்ட சட்டவிரோத மற்றும் ஆபாசமான படங்கள்/வீடியோக்களை உடனடியாக நீக்க வேண்டும்.
எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து விரிவான அறிக்கையை அமைச்சகத்திடம் சமர்ப்பிக்க வேண்டும்.
Grok AI-ன் தொழில்நுட்பக் கட்டமைப்பை ஆய்வு செய்து, எதிர்காலத்தில் இதுபோன்ற ஆபாச உள்ளடக்கங்கள் உருவாகாமல் தடுக்க வேண்டும். தவறாகப் பயன்படுத்தும் கணக்குகளைத் தற்காலிகமாகவோ அல்லது நிரந்தரமாகவோ முடக்க வேண்டும்.
இந்த உத்தரவை மதிக்கத் தவறினால், தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் கீழ் வழங்கப்பட்டுள்ள 'பாதுகாப்பு அரண்' உரிமையை எக்ஸ் தளம் இழக்க நேரிடும். மேலும், பிஎன்எஸ் (BNS) மற்றும் போக்ஸோ (POCSO) போன்ற சட்டங்களின் கீழ் கடும் அபராதம் மற்றும் சிறை தண்டனை உள்ளிட்ட நடவடிக்கைகளைச் சந்திக்க வேண்டியிருக்கும்.
தனது கடிதத்தின் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்த மத்திய அமைச்சருக்குப் பிரியங்கா சதுர்வேதி நன்றி தெரிவித்துள்ளார். "பெண்களின் கண்ணியத்தைக் குலைக்கும் வகையில் செயல்படும் ஏஐ (AI) செயல்பாடுகள் ஏற்றுக்கொள்ள முடியாதவை. டிஜிட்டல் தளங்கள் பெண்களுக்குப் பாதுகாப்பானதாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும்" என்றும் அவர் பதிவிட்டுள்ளார்.