பீச்சுக்கு வர்றது காத்து வாங்கவா.. இல்ல ஷாப்பிங் பண்ணவா? மெரினா கடைகளுக்கு 'செக்' வைத்த நீதிபதிகள்!

Published : Jan 02, 2026, 08:18 PM IST
Madras High Court order on Chennai Marina Beach Shops

சுருக்கம்

உலகப்புகழ் பெற்ற மெரினா கடற்கரையின் அழகை பொதுமக்கள் ரசிப்பதை உறுதிசெய்ய, அங்குள்ள கடைகளின் எண்ணிக்கையைக் கணிசமாகக் குறைக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடற்கரையை ஷாப்பிங் மாலாக மாற்ற முடியாது எனவும் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

உலகப்புகழ் பெற்ற மெரினா கடற்கரையின் அழகைப் பொதுமக்கள் இடையூறின்றி ரசிப்பதை உறுதி செய்யும் வகையில், அங்குள்ள கடைகளின் எண்ணிக்கையைக் கணிசமாகக் குறைக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நீதிமன்றத்தின் உத்தரவு

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார் மற்றும் ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா அமர்வு, கடந்த டிசம்பர் 22-ம் தேதி மெரினா கடற்கரையை நேரில் ஆய்வு செய்த பின் இன்று முக்கிய உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது.

தற்போது 1,417 கடைகள் அமைக்கும் திட்டத்தை மாநகராட்சி மறுபரிசீலனை செய்ய வேண்டும். உலகில் எந்தக் கடற்கரையிலும் இவ்வளவு கடைகள் இல்லை எனச் சுட்டிக்காட்டிய நீதிபதிகள், இந்த எண்ணிக்கையைக் கணிசமாகக் குறைக்க வேண்டும் என அறிவுறுத்தினர்.

உணவுப் பொருட்கள், பொம்மைகள் மற்றும் ஃபேன்சி பொருட்கள் விற்கும் கடைகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட வேண்டும். மற்ற தேவையற்ற கடைகளை அகற்ற வேண்டும்.

நீலக்கொடி மண்டலம்

மெரினாவின் ஒரு பகுதி ஏற்கனவே 'நீலக்கொடி' (Blue Flag) சான்று பெற்ற பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இரண்டு பகுதிகளை இந்தச் சான்று பெற தயார் செய்ய வேண்டும். குறிப்பாக, தலைவர்களின் நினைவிடங்களுக்குப் பின்புறம் உள்ள பகுதியை இந்தத் திட்டத்தில் சேர்க்க வேண்டும். இந்தப் பகுதிகளில் கடைகள் அமைக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

உழைப்பாளர் சிலையின் பின்புறம் அமைக்கப்பட்டுள்ள நிரந்தரக் கடைகளை உடனடியாக அகற்ற வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

“ஷாப்பிங் மாலாக மாற்ற முடியாது”

"கடற்கரை என்பது மக்கள் வந்து இயற்கையை ரசிப்பதற்காகவே தவிர, அதனை ஷாப்பிங் மாலாக மாற்ற முடியாது. சாலையில் இருந்து பார்த்தால் கடலின் அழகை ரசிக்க முடியாத அளவுக்குக் கடைகள் மறைக்கின்றன. பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளுக்குக் கடைகள் ஒருபோதும் இடையூறாக இருக்கக் கூடாது" என்று நீதிபதிகள் தங்களது கருத்தைப் பதிவு செய்தனர்.

கடைகளின் எண்ணிக்கையைக் குறைத்து, புதிய திட்டத்தை ஒரு வாரத்திற்குள் தாக்கல் செய்ய சென்னை மாநகராட்சிக்கு நீதிமன்றம் அவகாசம் வழங்கியுள்ளது. இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணை வரும் ஜனவரி 8-ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

திருப்பதி லட்டு விற்பனையில் சாதனை! டேஸ்டை கூட்டியதால் ஒரே ஆண்டில் 13.5 கோடி லட்டுகள் விற்பனை!
அமேசான் ஊழியர்களுக்கு குட் நியூஸ்! H-1B விசா வரும் வரை இந்தியாவில் இருந்தே வேலை செய்யலாம்!