வேகமெடுக்கும் டெங்கு… தமிழகம் வருகிறது மத்திய குழு!!

By Narendran SFirst Published Nov 3, 2021, 10:27 AM IST
Highlights

டெங்கு பாதிப்பு அதிகம் உள்ள தமிழகம், கேரளா, பஞ்சாப் உள்ளிட்ட 9 மாநிலங்களுக்கு உயர்மட்ட அதிகாரிகள் கொண்ட சுகாதாரக் குழுவை மத்திய அரசு அனுப்பி வைத்துள்ளது.

நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில் தற்போது டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதற்கிடையே வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதை அடுத்து தென் மாநிலங்களில் டெங்குவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை  அதிகரிக்க வாய்ப்புள்ளதுதாக கூறப்படுகிறது. இதை அடுத்து டெல்லியில் மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் மன்சுக் மாண்டவியா தலைமையில் நேற்று முன்தினம் டெங்கு காயச்சலை கட்டுப்படுத்துவது தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், பாதிப்பு அதிகம் உள்ள இடங்களை அடையாளம் கண்டு, கொசுக்களை அழிக்கும் வகையில் மருந்துப் புகை அடித்தல், பாதிக்கப்பட்டவா்களுக்கு உரிய நேரத்தில் சிகிச்சை அளிப்பது உள்ளிட்ட நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தவும் அவா் அறிவுறுத்தினாா். மேலும், தொடா்ச்சியான ஆய்வுக் கூட்டங்களை நடத்தி, மாநிலங்களின் சிறந்த நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் பதிவு செய்யப்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் ஆரம்ப சுகாதார மையங்களில் பாதிப்புக்கான மூல காரணத்தை அறியாமல், நோயாளிகளுக்கு காய்ச்சலுக்கான மருந்து அளிப்பது, அவா்களுக்கு உயிரிழப்பு ஏற்படும் அளவுக்கு பாதிப்பை ஏற்படுத்த வாய்ப்புள்ளது என்பதால் டெங்கு பாதிப்பை அடையாளம் காண பரிசோதனை மிக முக்கியமான நடவடிக்கையாக இருக்கும் நிலையில், இனி அதுபோன்ற உயிரிழப்புகள் பதிவாகாமல் கவனத்துடன் இருக்க வேண்டும் என்றும் பரிசோதனைகளை மேலும் தீவிரப்படுத்தி, பாதிக்கப்பட்டவா்களுக்கு உரிய சிகிச்சை அளிப்பதை உறுதிப்படுத்த வேண்டும் என்றும் அவா் கேட்டுக்கொண்டாா்.  

கொசு வலை பயன்பாடு, முழு கை உள்ள ஆடைகளை அணிவது, வீட்டின் உள்ளிலும் மருந்துப்புகை அடித்தல் ஆகிய நடவடிக்கைகளை ஊக்குவிப்பதோடு, டெங்குவால் பாதிக்கப்பட்டவரின் வீட்டிலும் சுற்றியுள்ள 60 வீடுகளிலும் கொசு மருந்து தெளிக்க வேண்டும் என்றும் வீடுகள், உணவகங்கள், தொழிற்சாலைகள், மேல்நிலைத் தொட்டிகளில் தேங்கி நிற்கும் நீரை அப்புறப்படுத்துவதோடு, முறையான குடிநீா் விநியோகம் இல்லாத குடிசைப் பகுதிகளில் குடி தண்ணீா் எவ்வாறு தேக்கிவைக்கப்படுகிறது என்பதை ஆய்வு செய்து முறைப்படுத்த வேண்டும் என்றும் இந்த ஆய்வுக் கூட்டத்தில் ஆலோசனைகள் வழங்கப்பட்டன. இந்த ஆய்வுக் கூட்டத்துக்கு பின்னா் மத்திய அமைச்சா் மன்சுக் மாண்டவியா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,  டெங்கு பாதிப்பு அதிகமுள்ள மாநிலங்களை அடையாளம் கண்டு, நோய்த் தடுப்பு நடவடிக்கைகளுக்காக சிறப்பு நிபுணா் குழுவை அந்த மாநிலங்களுக்கு அனுப்ப அறிவுறுத்தினாா்.  இந்நிலையில், டெங்கு பாதிப்பு அதிகம் உள்ள தமிழகம், கேரளா, அரியானா, பஞ்சாப், ராஜஸ்தான், உத்தர பிரதேசம், உத்தரகாண்ட், டெல்லி, ஜம்மு காஷ்மீர் ஆகிய 9 மாநிலங்களுக்கு உயர்மட்ட அதிகாரிகள் கொண்ட சுகாதாரக் குழுவை மத்திய அரசு அனுப்பி வைத்துள்ளது. இந்த குழு, 9 மாநிலங்களிலும் டெங்கு பாதிப்பு குறித்து ஆய்வு செய்து, டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்துவதற்கும், சிகிச்சை அளிப்பதற்கும் உரிய ஆலோசனைகளை வழங்கும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்த ஆண்டில் மொத்தம் 15 மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களில் அதிகபட்ச டெங்கு காய்ச்சல் பதிவாகி உள்ளது. அக்டோபர் 31 ஆம் தேதி நிலவரப்படி, நாட்டின் மொத்த டெங்கு நோயாளிகளில் 86 சதவீதம் இந்த மாநிலங்களில் பதிவாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

click me!