
பாபர் மசூதி இடிப்பு வழக்கை மீண்டும் புதிதாக விசாரிக்க வேண்டும் என சிபிஐக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 1992ம் ஆண்டு டிசம்பர் 6ம் தேதி பாபர் மசூதி இடிக்கப்பட்டது. இதுதொடர்பாக பாஜக மூத்த தலைவர் அத்வானி, முரளிமனோகர் ஜோஷி, உமாபாரதி உள்ளிட்டோர் மீது ரேபர்லி நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கில் இருந்து மேற்கண்ட 3 பேரும் விடுவிக்கப்பட்டனர். இந்த தீர்ப்பை அலகபாத் உயர்நீதிமன்றமும் உறுதி செய்தது.
இதைதொடர்ந்து சிபிஐ, இந்த வழக்கை உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது. இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. இந்த முறையீட்டு வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்படுவதாக இருந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதிகள், பாஜக மூத்த தலைவர் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமாபாரதி ஆகியோர் மீதான குற்றச்சாட்டை மீண்டும் விசாரிக்க சிபிஐக்கு உத்தரவிட்டுள்ளது.
மேலும், இந்த வழக்கை தினமும் விசாரணை நடத்தி, 2 ஆண்டுகளுக்குள் முடிக்க வேண்டும் என லக்னோ நீதிமன்றத்துக்கு அறிவுறுத்தியுள்ளது. இந்த வழக்கில் இருந்து கல்யாண் சிங் விடுவிக்கப்படுவதாகவும் நீதிபதிகள் கூறியுள்ளனர்.