
மத அடிப்படையிலான இட ஒதுக்கீடு அரசமைப்பு சட்டத்துக்கு எதிரானது. இது நாட்டின் நலனுக்கு எதிரானது என்று மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு தெரிவித்தார்.
தெலங்கானா
தெலங்கானாவில் உள்ள முதல்வர் சந்திரசேகர் தலைமையிலான டி.ஆர்.எஸ். கட்சி, கடந்த வாரம், முஸ்லிம்களுக்கு வேலை, கல்வி வாய்ப்பில் 12 சதவீத இட ஒதுக்கீடு வழங்கி சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது.
எதிர்ப்பு
இந்த இட ஒதுக்கீட்டு முறைக்கு பாரதிஜனதா கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்து சட்டசபையில் அமளியில் ஈடுபட்டது. வெளியிலும் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
நலனுக்கு உகந்தது அல்ல
இந்த நிலையில் போபால் நகரில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்க மத்திய நகர்புற மேம்பாட்டுத்துறை அமைச்சர் வெங்கையா நாயுடு நேற்று வந்து இருந்தார். அப்போது நிகழ்ச்சியின் இடையே நிருபர்களுக்கு அவர் பேட்டி அளிக்கையில், “ மத அடிப்படையிலான இட ஒதுக்கீடு என்பது நாட்டின் நலனுக்கு உகந்தது அல்ல. இது அரசமைப்பு சட்டத்துக்கு விரோதமானது. இதுபோன்ற நடவடிக்கைகளை நீதிமன்றம் கடந்த காலங்களில் நிறுத்தியுள்ளது.
அரசமைப்புக்கு எதிரானது
சட்டத்தை வடிவமைத்தவர்கள் மத அடிப்படையிலான இட ஒதுக்கீட்டு முறைக்கு எதிராக இருந்தார்கள். அதனால், அந்த முறையை நோக்கி அவர்கள் செல்லவில்லை. அரசமைப்புச் சட்டமும் இதற்கு எதிரானது.
இந்த விவகாரத்தில் பாரதிய ஜனதா கட்சியின் நிலைப்பாடு மிகவும் தெளிவாக இருக்கிறது. மதரீதியான இட ஒதுக்கீடு முறையில் எதிராக இருக்கிறோம், அதில் நம்பிக்கையும் இல்லை.
எதிர்க்கமாட்டோம்
அதேசமயம், பொருளாதார ரீதியாக, கல்வியில் பன்தங்கிய சமூகத்தினருக்கு இட ஒதுக்கீடு வழங்குவதை எதிர்க்கமாட்டோம். இது இந்துக்கள், ஜெயின்கள், முஸ்லிம்கள், கிறிஸ்துவர்கள் முன்னேற்றத்துக்கு தடையாக இருக்க மட்டோம்.
இந்தியா மதத்தால் பிரிந்திருந்தது. ஆதலால் பிரச்சினைகள் அதிகமாக உருவாக நாம் வாய்ப்பளிக்க கூடாது’’ எனத் தெரிவித்தார்.